ஏசி கிடையாது!! ஏழை, எளியோருக்கான வந்தே பாரத் இரயில் - மத்திய அரசு எப்போது க்ரீன் சிக்னல் கொடுக்கும்?
ஏழை, எளியோரும் பயணிக்கும் வகையில், குறைந்த டிக்கெட் விலையை கொண்ட வந்தே பாரத் இரயில்கள் சேவைக்கு வர உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே கூறிவருகிறோம். இந்த நிலையில், இந்த புதிய வகை வந்தே பாரத் இரயில்களின் புகைப்படங்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியாகி உள்ளன.
தற்சமயம் இந்தியா முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் ஆங்கிலேயன்-ஸ்டைல் இரயில்களுக்கு மாற்றாக சென்னை ஐசிஎஃப்-இல் உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகவே, இந்த இரயில்களுக்கு வந்தே பாரத் என பெயர் வைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, காவி நிறத்திலும் இவை கொண்டுவரப்படுகின்றன.

உள்நாட்டில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா இரயில் என்பது தான் வந்தே பாரத் இரயில்களின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. குறைவான எடையில் உருவாக்கப்படுவதால், மிகுந்த வேகத்தில் பயணிக்க முடியும் என்பது வந்தே பாரத் இரயில்களின் மற்ற சிறப்பம்சங்களாகும். வந்தே பாரத் இரயில்களை ஒவ்வொரு முக்கிய நகரங்களாக பயன்பாட்டிற்கு கொண்டுவரும் இந்தியன் இரயில்வே, விரைவில் நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளது.
வந்தே பாரத் இரயில்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் அதிகப்படியான டிக்கெட் கட்டணமாகும். இதனால்தான், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த இரயில்கள் சேவைக்கு வந்த பின்பும், இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. நாடு பொருளாதார வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதால், இந்த குறை விரைவில் சரியாகிவிடும்.

என்றாலும், அதற்குள்ளாக ஏழை, எளியோரையும் வந்தே பாரத் இரயில்களில் அழைத்து செல்ல வேண்டும் என்கிற விருப்பத்தில் புதிய வகை வந்தே பாரத் இரயில்களை உருவாக்க இரயில்வே துறை இறங்கிவிட்டதாக கடந்த சில மாதங்களாக கூறிவருகிறோம். ஏசி இல்லாமல், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் செயல்படக்கூடியதாக இருக்கும் என கூறப்படும் இந்த வகை வந்தே பாரத் இரயில்களுக்கு 'வந்தே சாதாரண்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
22 பெட்டிகளுடன் உருவாக்கப்படும் வந்தே சாதாரண் இரயில்களின் முதல் தொகுப்பு இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,800 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்படும் வந்தே சாதாரண் இரயில்களின் டாப்-ஸ்பீடு 130kmph என கூறப்படுகிறது.

ஏசி இல்லை, சற்று குறைவான வேகத்தில் இயங்கும் என்பவை மட்டுமே வந்தே சாதாரண் இரயில்களை வேறுப்படுத்திக் காட்டுகின்றன. மற்றப்படி, வந்தே பாரத் இரயில்களின் அதே இருக்கை & படுக்கை அமைப்பு மற்றும் மாடர்ன் லைட் வசதிகள் வந்தே சாதாரண் இரயில்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இந்த இரயில்களிலும் ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜர் வசதி இருக்கும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது போக்குவரத்தில் இந்தியாவின் முதுக்கெலும்பாக இரயில்வே விளங்குகிறது எனும்போது, அதனை மக்கள் அனைவருக்குமாக வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதன் பொருட்டே, வந்தே சாதாரண் இரயில்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த இரயில்களில் வேறென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம் என்பதை அறிய எங்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும்.


Click it and Unblock the Notifications









