வெளிநாடு இல்ல... நம்ம இந்தியா தாங்க இது!! இரயில்வே மொத்தமும் மாற போகுது - குறைந்த விலையில் டிக்கெட்!
வந்தே பாரத் இரயில்களின் வெற்றியை தொடர்ந்து, ஏசி வசதி இல்லாத வந்தே சாதாரண் இரயில்கள் மும்பையில் சோதனை ஓட்டத்திற்காக வருகை தந்துள்ளன. மும்பையின் வாடி புந்தர் யார்டில் புதிய வந்தே சாதாரண் இரயில்கள் ஆரஞ்ச் நிறத்தில் நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் சமீப கால வெற்றிக்கரமான திட்டங்களுள் ஒன்றாக வந்தே பாரத் இரயில் சேவையை சொல்லலாம். ஆரம்பத்தில், மாடி முட்டியது, நடுவழியில் நின்றது என சில பல சர்ச்சைகள் வந்தே பாரத் இரயில்களை சுற்றி இருந்தாலும், இப்போது அவ்வாறான பிரச்சனைகள் பெரியதாக ஏற்படுவதில்லை. அதற்கேற்ப, இந்த இரயில்களை வடிவமைக்க அதிகாரிகள் துவங்கிவிட்டனரா என்பது தெரியவில்லை.

இருப்பினும் இப்போதும், வந்தே பாரத் இரயில் சேவையில் ஓர் சிறிய குறை உள்ளது. அதுதான் அதிகப்படியான டிக்கெட் கட்டணம். இதற்கு முக்கிய காரணம், வழக்கமான இரயில்களை விட வந்தே பாரத் இரயில்கள் அதிவேகத்தில் செல்வதாகும். அதேபோல், ஏசி சேவை இந்த இரயில்களின் அதிக டிக்கெட் கட்டணத்திற்கு காரணமாக விளங்குகிறது.
இதனை புரிந்துக்கொண்ட இந்தியன் இரயில்வே மக்கள் அனைவரும் விரைவாக பயணம் செய்யும் வகையில் வந்தே சாதாரண் இரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது. இந்த நிலையில், மும்பையின் வாடி புந்தர் யார்டில் வந்தே சாதாரண் இரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த அக்.29ஆம் தேதி வாடி புந்தர் யார்டை சென்றடைந்த வந்தே சாதாரண் இரயில்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கண்ணை கவரும் ஆரஞ்சு நிறத்தில் யார்டில் வந்தே சாதாரண் இரயில்கள் நின்றிருப்பதை இந்த படங்களில் காணலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மும்பைக்கு வந்துள்ள இந்த இரயில்கள் வரும் வாரங்களில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட உள்ளன. மலைப்பிரதேச பகுதியான மும்பை- நாசிக் வழித்தடத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. 22 பெட்டிகளை கொண்ட 3-டயர் இரயில்களாக வந்தே சாதாரண் இரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏசி வசதி இல்லாவிடினும், ஸ்லீப்பர் வசதி கொண்டதாக இவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த இரயில்களில் ஏறக்குறைய 1,800 பேர் பயணிக்கலாம். வந்தே பாரத் இரயில்கள் அளவிற்கு இல்லையென்றாலும், வந்தே சாதாரண் இரயில்களால் அதிகப்பட்சமாக மணிக்கு 130கிமீ வேகத்தை எட்ட முடியும். வந்தே பாரத், வந்தே சாதாரண் இரயில்களில் மத்திய அரசு ஆர்வம் காட்டுவதற்கு ஓர் முக்கிய காரணம், தற்போதுள்ள விரைவு இரயில்கள் போல் இல்லாமல், லோக்கல் எலக்ட்ரிக் இரயில்களை போல் இரு முனைகளிலும் என்ஜின் பெட்டிகள் இருப்பதாகும்.

இதனால், என்ஜின் பெட்டிகளை கழற்றி மாற்ற வேண்டிய தேவை இருப்பதில்லை. இதனால், நேர மிச்சமாகுவது மட்டுமின்றி, எரிபொருளும் கணிசமாக மிச்சமாகும். இதேபோன்று விரைவில், வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் மெட்ரோ இரயில்களும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக கடந்த அக்டோபர் 12ஆம் தேதி இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே சாதாரண் மொத்த இந்திய இரயில்வேயின் முகத்தையும் மாற்றியமைக்கும் என்ற அளவிற்கு கணிக்கப்பட்டுள்ளது. மக்களின் பயணம் விரைவாகினாலே நிறைய விஷயங்கள் நல்லப்படியாக நடக்கும். எப்படியிருந்தாலும், முதல் வந்தே சாதாரண் இரயில் சேவை டெல்லி- மும்பை இடையே மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









