மொத்த ஆர்டிஓ ஆபிஸும் பிரம்மிப்பில் இருக்கு... இந்த ஒரு ஊரில் மட்டும் 48 இலட்ச வாகனங்கள் பதிவு!!
பரப்பளவில் உலகின் மிக பெரிய நாடு என்பது மட்டுமின்றி, மக்கள் தொகையிலும் மிக பெரும் பேரரசாக நம் இந்தியா விளங்குகிறது. பொருளாதாரத்திலும் வளர்ந்த நாடாக முன்னேற்றம் கண்டுவிட்டால், உலகின் அசைக்க முடியாத நாடாக இந்தியா விளங்கும் என்பது உறுதி. அதற்கான வேலைகள் கொஞ்சம் மெதுவாகவே நடக்கின்றன; ஆனால் நடக்கின்றன. இப்போதும், பல கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ட்ரில்லியன் கணக்கிலான ரூபாய்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக, சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மும்பையில் மட்டும் கிட்டத்தட்ட 48 இலட்ச வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது உண்மையில் இமாலய எண்ணிக்கை ஆகும். இதில் 29 இலட்ச வாகனங்கள் 2-வீலர்கள் ஆகும். மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த 48 லட்ச வாகனங்கள் மும்பையில் கடந்த 18 வருடங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 721 வாகனங்கள் மும்பை ஆர்டிஓ-களில் பதிவு செய்யப்படுகின்றன.

மும்பையில் மொத்தம் 4 மண்டல போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. தலைமை மண்டல போக்குவரத்து அலுவலகங்களில்தான் குறிப்பாக அதிக வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்படும் வாகனங்களில் பெரும்பாலானவை கடன் மூலமாகவே வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கடன் வாங்கி புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் மிடில்-கிளாஸ் மக்களாக உள்ளனர்.
மொத்த 48 இலட்ச வாகனங்களில் 21 இலட்ச வாகனங்கள் மும்பையின் மேற்கு மண்டலத்திலும், 13 இலட்ச வாகனங்கள் கிழக்கு மண்டலத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதி 14 இலட்ச வாகனங்கள் மற்ற இரு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். மும்பை மேற்கு மண்டலத்தில் வாகனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதற்கு காரணம், அரபிக்கடலை கடலை ஒட்டியே நிறைய மிடில்-கிளாஸ் மக்களும், செல்வந்தர்களும் வசிக்கின்றனர்.
மும்பை சாலைகளில் வரிசையாக எத்தனை வாகனங்களை நிறுத்த முடியுமோ அதனை காட்டிலும் 3 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் தற்போதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மஹாராஷ்டிரா போக்குவரத்து துறையில் பணியாற்றும் விவேக்பாய் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய விவேக்பாய், சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது காற்று மாசுவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பார்க்கிங் மற்றும் டிராஃபிக் பிரச்சனைகளையும் உண்டாக்குவதாக கூறியுள்ளார்.

போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக இதற்கு மத்தியில் மும்பை மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நமது சென்னையை போல் மும்பையிலும் மெட்ரோ இரயில் நெட்வொர்க் நன்கு பெரியதாக உள்ளது என்றாலும், மெட்ரோ இரயில் சேவையினால் மும்பையில் போக்குவரத்து நெரிசல் வெறும் 15% மட்டுமே குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, அந்த அளவிற்கு மும்பையில் வாகன ஓட்டிகள் அதிகமாக உள்ளனர்.
ஆதலால், மும்பை போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமெனில், கார் ஷேரிங், பைக் ஷேரிங் போன்ற சேவைகளை அதிகமாக கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், அரசு பேருந்து சேவைகள் மற்றும் லோக்கல் எலக்ட்ரிக் இரயில் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் மற்றும் காற்று மாசுவை கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை மற்றும் தலைநகர் டெல்லி உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








