இதை மட்டும் பண்ணுங்க... புதுசா கார் வாங்கும்போது ஆர்டிஓ கட்டணம் இருக்காது!! சாலை வரியிலும் காசு மிச்சம் வரும்!
வாகன அழிப்பு (Vehicle Scrapping), நம் இந்திய மக்களுக்கு வேண்டுமாயின் புதியதாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல வருடங்களாக இருக்கும் நடைமுறை ஆகும். அதாவது, பழைய வாகனங்களை வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ ஓரங்கட்டுவதற்கு பதிலாக ஸ்க்ராப்பிங் செண்டருக்கு கொண்டு சென்று முறையாக அழிப்பதுதான் இந்த நடைமுறையின் நோக்கம் ஆகும்.
இதனால் நன்மை என்ன? என நீங்கள் கேட்கலாம். வாகன ஸ்க்ராப்பிங் திட்டத்தில் மிக பெரிய நன்மை உள்ளது. நம்மில் பெரும்பாலானோர்க்கு வாகனத்துடன் ஒரு செண்டிமெண்ட் இருக்கும். இதனாலேயே மார்க்கெட்டில் புதியது, புதியதாக எத்தனை வாகனங்கள் வந்தாலும் அந்த ஒரு வாகனத்தை மட்டும் விட மாட்டோம். சிலர், பணத்தை செலவழிக்க வேண்டுமே என புதிய வாகனம் வாங்காமல் இருப்பர்.

பழைய வாகனங்களில் இருந்து காற்று மாசு அதிகம் வெளிவருகிறது. இன்றைய கால கார்களினால் காற்று மாசடைவது இல்லையா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இன்றைய கால மாடர்ன் கார்கள் பிஎஸ்6 உள்பட பல்வேறு விதமான ஆய்வுகளுக்கும், சோதனைகளுக்கும் பின்பே விற்பனைக்கு வருவதால் பெரியதாக காற்றை மாசுப்படுத்துவது இல்லை. இதனால் பழைய வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.
வைகல் ஸ்க்ராப்பிங் ஆனது காற்று மாசுவை தவிர்க்கும் என்பது மட்டுமின்றி, புதிய வாகனங்களின் உற்பத்திக்கு பழைய வாகனங்களின் உலோகங்களை பயன்படுத்த வழிவகை செய்யும். இதன்மூலம், ஆட்டோமொபைல் வாகனங்கள் உற்பத்தியில் நிலவும் இரும்பு, காப்பர் உள்ளிட்ட உலோகங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். இதன் மூலமாக புதிய வாகனங்களின் விலைகளும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

இருப்பினும், பழைய வாகனங்களை வைத்திருக்கும் எவரொருவரும் தானாக முன்வந்து தங்களது வாகனங்களை அழிக்க வழங்க மாட்டர்கள். இதனை உணர்ந்த நம் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம் என்கிற திட்டத்தை சில வருடங்களுக்கு முன்பே அமல்படுத்த தயாராகிவிட்டது. ஆனால், சில காரணங்களினால் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்க்ராப்பிங் செண்டரில் உங்களது பழைய வாகனத்தை அழித்தால் புதிய வாகனத்தை வாங்கும்போது சில பல சலுகைகள் கிடைக்கும்.
புதிய வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை 4%-இல் இருந்து 6% வரையில் குறைக்கப்படும். அத்துடன், புதியதாக வாகனம் வாங்கும்போது செலுத்தும் சாலை வரி 25% குறைத்துக் கொள்ளப்படும். இது எல்லாவற்றையும் விட, புதிய வாகனத்தை ஆர்டிஓ-இல் பதிவு செய்வதற்கான கட்டணம் முற்றிலுமாக 100% குறைத்துக் கொள்ளப்படும். அதாவது, புதிய வாகனத்திற்கு ஆர்டிஓ பதிவு கட்டணம் முற்றிலுமாக இருக்காது.

பழைய வாகனத்தை அழித்த பின் அந்த ஸ்க்ராப்பிங் செண்டரில் ஒரு சான்றிதழ் வழங்கப்படும் அதனை உபயோகித்து இந்த சலுகைகளை பெறலாம். பழைய வாகனத்தின் உரிமையாளர் புதியதாக எந்த வாகனத்தையும் வாங்க போவதில்லை எனில், இந்த சான்றிதழை அவரது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வைகல் ஸ்க்ராப்பிங் பாலிசி இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதால், இந்த சலுகைகள் கார் நிறுவனம் மற்றும் வாங்கும் காரை பொறுத்து மாறுப்படலாம்.
இந்த தொகுப்பில் நாங்கள் 'பழைய வாகனங்கள்' என்று மட்டுமே குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், எவ்வளவு வருடங்கள் பயன்படுத்தினால் அது பழைய வாகனம் என்பது வாகனத்திற்கு வாகனம் மாறுப்படுகிறது. அதாவது, பெரிய கனரக லாரிகள் மற்றும் பேருந்துகள் 10 வருடங்கள் ஓடினாலே அவை பழையவை ஆகவும், கார்கள் 15 வருடங்கள் ஓடினால் பழையவை ஆகவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஆனால், இதுகுறித்த விரிவான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன அழிப்பு கொள்கையில் தற்போதைக்கு இருக்கும் ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் தான். மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர ஆர்வமாக உள்ளது. ஆனால், நம் இந்திய மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கமும், வேறு சில காரணங்களினாலும் இந்த திட்டத்தை இன்னமும் மத்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்க முடியவில்லை. ஆனால் உண்மையில், இந்த திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தினால் மட்டுமே மக்கள் தைரியமாகவும், நம்பிக்கை உடனும் தங்களது பழைய வாகனங்களை அழிக்க முன்வருவர்.


Click it and Unblock the Notifications









