இன்டிகாவுமா.. வானில் பறந்த கார்கள்! ஒன்னு ரோடே போட மாட்றாங்க.. போட்டாலும் அது ரோடாவே இருக்க மாட்டிக்குது!
சாலை என்பது போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமானது. இதனால்தான் அரசுகள் புதிய சாலைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறிப்பாக, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் அரசு அதிகம் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. இவை பயண நேரத்தையும், பயண தூரத்தையும் குறைக்கக் கூடியவை ஆகும். இதனால்தான் மிகப் பெரிய செலவில் இந்த எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதேபோல், இதில் பயணிக்கவும் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சாலை வரி என ஒவ்வொரு வாகன உரிமையாளரிடமும் அரசு வசூலித்து வந்தாலும், இந்த சாலைகளில் பயணிக்கும்போது அதற்கென தனி கட்டணத்தையும் அவர்கள் வசூலித்து வருகின்றனர்.
இருப்பினும், இத்தகைய சாலைகள் சில நேரங்களில் மிகவும் மோசமான நிலையில் கட்டமைக்கப்படுகின்றன. இதற்கு சான்றாகவே ஓர் புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைந்திருக்கின்றது. டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலைதான் அது ஆகும். மிகவும் மோசமான நிலையில் இந்த சாலை அமைக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அதிக வேகத்தில் வரும் கார்கள் அந்தரத்தில் பறக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.

இதைக்காட்டக் கூடிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இணையத்தில் இந்த வீடியோ முதலில் வெளியானபோது, வாகன ஸ்டண்ட் ஷோ நடக்கிறது என்றே பலரால் நினைக்கப்பட்டது. ஒரு சிலர் ஏதோ பட ஷூட்டிங்காக இருக்கும் என்றும் கருதினர். ஆனால், அது வாகன ஸ்டண்ட்டும் அல்ல பட ஷூட்டிங்கும் அல்ல என்பதே தற்போது உறுதியாகி உள்ளது.
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வாகனங்கள், மோசமான சாலை அமைப்பின் காரணமாகவே அந்தரத்தில் பறக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது. மும்பை-டெல்லி எக்ஸ்ப்ரஸ் நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே இத்தகைய மோசமான கட்டமைப்புக் காணப்படுகின்றது. ஆனால், அது எந்த இடம் என்கிற துள்ளியமான விபரம் வெளியாகவில்லை.
ஹூண்டாய் கிரெட்டா, கருப்பு நிற கியா செல்டோஸ் மற்றும் வெள்ளை நிற டாடா இண்டிகா ஆகிய கார்கள் காற்றில் பறந்து சென்று மீண்டும் சாலையில் வந்து வேகமாக தரையிறங்கும் காட்சிகளே தற்போது வெளியாகி இருக்கின்றன. இது பார்ப்போரை பதைபதைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. மேலும், முன்கூட்டியே தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வேகத்தைக் குறைத்த காரணத்தினால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது எப்போது வேண்டுமானால் இதைவிட மிக மோசமான ஆபத்தான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

ஆகையால், இந்த வீடியோவை பார்த்த பலர் தங்களின் வேதனையைத் தெரிவித்து வருகின்றனர். கடுமையான விபத்தை மட்டுமல்ல அது மரணத்திற்குகூட வழிவகுக்கும் என்பதே பலரின் வேதனையாக இருக்கின்றது. குறிப்பாக, மக்களின் வரி பணத்தை அதிக அளவில் செலவிட்டும் இவ்வளவு மோசமான சாலை உருவாக்கப்பட்டதற்காக அரசை பலர் வசைபாடி வருகின்றனர்.
இந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணிகளின் பாதுகாப்பு தற்போது மிகப் பெரிய அளவில் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது. இதை எடுத்துக் காட்டக் கூடியதாகவே தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ அமைந்திருக்கின்றது. இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
இதுவரை அந்த வீடியோவை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இணையத்தில் தற்போது பகிர்ந்திருக்கின்றனர். இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து இப்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திலிருந்து வெளிவரவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலரின் ஆதங்கமாக மக்களின் வரி பணத்தை இப்படி வீணடிக்கிறாங்களே என்பதாகதான் இருக்கின்றது. சாலை பயணத்திற்கானதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, ஆபத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்பதும் பலரின் கருத்தாக அமைந்திருக்கின்றது. தொடர்ந்து, மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சாலையை கட்டமைத்ததற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பலரின் வலியுறுத்தலாக உள்ளது.


Click it and Unblock the Notifications








