அவரு ஊர விட்டு கிளம்புறாருனு தெரிஞ்சதும் கிராம மக்கள் ஒன்று கூடி விலை உயர்ந்த பைக்கை பரிசா கொடுத்திருக்காங்க!
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஓர் நபருக்கு மிகப் பெரிய ஆச்சரிய பரிசை வழங்கி இருக்கின்றனர். எதற்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அவருக்கு பரிசை வழங்கினார்கள்? என்ன மாதிரியான கிஃப்டை வழங்கினர்? என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆசிரியர் பணி, பல மேதாவிகளையும், ஆக்கப்பூர்வமான மனிதர்களையும் உருவாக்கும் உன்னதமான பணி ஆகும். இத்தகைய பணியை மேற்கொண்டு வந்தவரே சந்தோஷ் கஞ்சன் ஆவார். இவருக்கு தற்போது பணியிடம் மாறுதல் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அந்த இடத்தில் இருந்து ஆசிரியர் சந்தோஷ் கஞ்சன் தற்போது விடைபெறும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே அவர் பணியாற்றி வந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த ஆசிரியருக்கு மிக விலை உயர்ந்த பொருளை பரிசாக வழங்கி இருக்கின்றனர். பஜாஜ் பல்சர் 150 பைக்கையே ஆசியருக்கு ஊர் மக்கள் பரிசாக வழங்கி இருக்கின்றனர். கர்நாடகா மாநிலம் சிவமோகா பகுதியிலேயே இந்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
சந்தோஷ் கஞ்சன், கடந்த 2007 ஆம் ஆண்டில் ஆசிரியராக வலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றார். 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே இந்த பள்ளியில் உள்ளது. ஒட்டுமொத்தமாகவே 13 மாணவர்கள் மட்டுமே இந்த பள்ளியில் பயிலுகின்றனர்.

இந்த அரசு பள்ளியிலேயே கடந்த 16 ஆண்டுகளாக ஒற்றை நபராக சந்தோஷ் கஞ்சன் பணியாற்றி வந்திருக்கின்றார். சந்தோஷ் இந்த கிராமத்தில் பணிக்கு சேர்ந்தபோது, கிராம மக்களுக்கு பைக் என்றாலே என்னவென்று தெரியாத அளவிற்கு உலகம் அறியாத மக்களாக இருந்திருக்கின்றனர். மேலும், எந்தவொரு அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் அவர்கள் சுமார் 8 கிமீ தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும் என்கிற சூழலே நிலவியது.
மிக முக்கியமாக மருத்துவமனைக்கு போக வேண்டும் என்றால்கூட 8 கிமீ தூரம் நடந்தே செல்ல வேண்டும் என்கிற நிலையே இருந்தது. இந்த நிலையிலேயே, அந்த வாத்தியார் ஊர் மக்களின் தேவையை உணர்ந்து ஓர் பைக்கை வாங்கினார். மேலும், பைக்கை ஊர் மக்களுக்கான போக்குவரத்து வாகனமாகவே அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

அதாவது, யாருக்காவது அவசர தேவை என்றால் அந்த வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் செல்வதும் கூட்டி வருவதுமாக இருந்திருக்கின்றார். இதுதவிர, மாணவர்களின் தேவைக்கும் தன்னுடைய பைக்கையே அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதனாலேயே ஊர் மக்கள் இவரை தெய்வமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாதிரியான சூழலிலேயே சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர் சந்தோஷ்க்கு பணியிடம் மாறுதல் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஒட்டுமொத்த ஊருக்குமே மிக நெருக்கமான நபராக அவர் மாறியிருந்த வேலையில், இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, வலூர் கிராம மக்களை இந்த தகவல் மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தங்களைவிட்டு பிரியா விடைபெறும் ஆசிரியரை ஆச்சரியப்படுத்தும் விதமாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி பைக்கை பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.
கிராம மக்கள் வாங்கிக் கொடுத்து இருப்பது பஜாஜ் பல்சர் 150 பைக் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த பைக் ரூ. 1.10 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ஒன்றரை லட்சம் வரை இருக்கும். இந்த பைக் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பல்சர் 150 எஸ்டி மற்றும் பல்சர் 150 டிடி அழை ஆகும். இந்த பைக்கில் 149 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ட்வின் ஸ்பார்க் எஃப்ஐ டிடிஎஸ்-ஐ வகை மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 14 பிஎஸ் பவர் மற்றும் 13.25 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.
மிகுந்த த்ரில்லான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த பைக்கில் அப்-ரைட் பொசிஷன் வசதிக் கொண்ட இருக்கைகள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் (முன்பக்கத்தில்) மற்றும் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் (பின் பக்கத்தில்) வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அம்சத்திர்காக முன் பக்கத்தில் 260 மிமீ டிஸ்க்கும் மற்றும் ஏபிஎஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆசிரியர் சந்தோஷ், வாத்தியார் திரைப்படத்தில் வரும் ஆசிரியரைப் போல அந்த ஊர் மக்களிடத்திலும், மாணவர்கள் மத்தியிலும் இருந்திருக்கின்றார் என்பது ஊர் மக்களின் செயலினால் தெரிகின்றது. இத்தகைய ஆசிரியரையும், நன்றி மறவாமல் இருக்கும் ஊர் மக்களையும் பார்ப்பது எல்லாம் மிக மிக அரிது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறி இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









