கார் மேற்கூரையில் அமர்ந்திருப்பவர் யாரென்று தெரிகிறதா? இந்தியாவே தூக்கி வைத்து கொண்டாட வேண்டியவர்!!
வினேஷ் போகத் (Vinesh Phogat), 2024 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான பதக்கத்தை கடைசி நொடியில் தவறவிட்டு, பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர். வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் மல்யுத்த போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளையும், வினேஷ் போகத்துக்கு ஆதரவான சூழலையும் உருவாக்கியதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இந்த நிலையில், வினேஷ் போகத் ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு அவரது சொந்த ஊர் திரும்பி உள்ளார். வெள்ளை நிற மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) காரில் வினேஷ் போகத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக நடநது முடிந்துள்ளது. வழக்கம்போல், இந்த ஒலிம்பிக்கிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர். பதக்க பட்டியலில் அமெரிக்கா, சீனா முதல் இரு இடங்களை பிடிக்க, நம் இந்தியா 71வது இடத்துடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது. ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் இந்தியா சார்பில் பெறப்பட்டன. தங்க பதக்கம் எதுவும் பெறப்படவில்லை.

ஆனால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்க பதக்கத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். குறைந்தப்பட்சம் வெள்ளி பதக்கத்தை ஆவது நிச்சயமாக வென்றுவிடுவார் என்கிற சூழல் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில்தான் 100 கிராம் அதிக உடல் எடை உடன் இருந்ததால், வினேஷ் போகத் போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். எடையை குறைக்கும் முயற்சியில் உடலை அதிகம் வருத்திக் கொண்டதால், மருத்துவமனையில் வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவ ஓய்வுகளுக்கு பிறகு வினேஷ் போகத் அரியானா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பலாலியை வந்தடைந்தார். வினேஷ் போகத் ஊர் திரும்புவதை அறிந்ததும் வழிநெடுகிலும் மக்கள் ஆர்வாரத்துடன் அவரை வரவேற்றனர். விமான நிலையத்தை வந்தடைந்த வினேஷ் போகத் பின்னர் அங்கிருந்து வெள்ளை நிறத்திலான ஒரு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் மேற்கூரையில் அமர வைத்து அழைத்து செல்லப்பட்டார்.

வினேஷ் போகத் சென்ற ஏஎம்ஜி ஜி63 காரை சுற்றிலும் நிறைய வாகனங்கள் இணைந்துக் கொண்டன. மக்கள் வீடுகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் ஆராவரத்துடன் வினேஷ் போகத்தை வரவேற்றனர். இதனால், இது வெற்றி ஊர்வலம் போன்று இருந்தது. ஜி-வேகன் காரின் மேற்கூரையில் வினேஷ் போகத்துக்கு அருகே நீல நிற பனியன் அணிந்திருப்பவர் அவரது கணவர் சோம்வீர் ராதே ஆவார்.
இந்த வெள்ளை நிற மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் ஆனது வினேஷ் போகத் அல்லது அவரது கணவருக்கு சொந்தமான வாகனமாக இருக்காது என கூறப்படுகிறது. வினேஷ் போகத்தின் ஆதரவாளர்கள் இந்த பென்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த எஸ்யூவி கார் இதுவாகும்.

இந்தியாவில் தற்சமயம் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ஏறக்குறைய ரூ.4 கோடியாக உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வைத்திருப்பவர்களும் இந்த ஏஎம்ஜி வாகனத்தை உடனடியாக பெற்றுவிட முடியாது. ஏனெனில், இந்த வாகனத்தை டெலிவிரி பெறுவதற்கு நிறைய பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் டெலிவிரி செய்யப்பட்டு உங்களுக்கு டெலிவிரி செய்வதற்குள் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிடும்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சமீபத்தில்தான் அவர்களது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை டெலிவிரி பெற்று இருந்தனர். இருவரும் ஒரே மாதிரியாக கருப்பு நிறத்தில் இந்த மெர்சிடிஸ் வாகனத்தை வாங்கினர். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரில் பொருத்தப்படும் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 585 பிஎச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தால் பதக்கம் வெல்ல முடியாமல் போனது நம் எல்லாருக்குமே வருத்தமான விஷயம் தான். இருப்பினும், வினேஷ் போகத்தை பிரம்மாண்டமாக அவரது ஊர் மக்கள் வரவேற்று இருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஊர்வலத்திற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ள விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனம் தான் இதில் ஹைலைட்டான விஷயமே.


Click it and Unblock the Notifications









