ஃபேக்ட்ரி மட்டும் தமிழ்நாட்டில், முதலீடுகள் வேற மாநிலத்துக்கா! தெலுங்கானாவில் கோடிகளை கொட்டும் வின் க்ரூப்!
வியட்நாம் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனமான வின் குரூப் (Vingroup), இந்தியாவின் தெலங்கானாவில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 ஆயிரத்து 952 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு தெலங்கானா மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாடு, எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில், சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில், ஒரு பன்முக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும்.
தெலங்கானா ரைசிங் குளோபல் (Rising Global) உச்சி மாநாட்டில் வின் குரூப், தெலங்கானா அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், தெலங்கானாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும், நீண்டகால வளர்ச்சி இலக்குகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்தில், வின் குரூப் ஆனது தனது ஜி.எஸ்.எம் (Green and Smart Mobility) மற்றும் வின்ஃபாஸ்ட் (VinFast) வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் முதல் பெரிய அளவிலான எலெக்ட்ரிக் டாக்சி (Electric Taci) சேவையையும், "மொபிலிட்டி-அஸ்-எ-சர்வீஸ்" (MaaS) தளத்தையும் தெலங்கானாவில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.
எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் ஆராயக்கூடும். நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வின் குரூப், சுமார் 1,080 ஹெக்டேர் பரப்பளவில், 2 லட்சம் குடியிருப்பாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 'வின்ஹோம்ஸ் ஸ்மார்ட் சிட்டி' (Vinhomes Smart City) என்ற மெகா நகர்ப்புற பகுதியை உருவாக்க உள்ளது.
இந்தத் திட்டம் சுமார் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகரத்தில், குறைந்த மற்றும் உயரமான குடியிருப்புகள், சர்வதேச தரத்திலான வசதிகள், குறிப்பிட்ட அளவிலான கட்டுமான பரப்பளவு மற்றும் நிலையான நகர்ப்புற திட்டமிடல் கோட்பாடுகள் ஆகியவை இடம்பெறும். சமூக உள்கட்டமைப்புக்காக, 70 ஹெக்டேர் பரப்பளவில், கே-12 ஒருங்கிணைந்த கல்வி முறை உடன் வின் பள்ளிக்கூடங்கள், வின்மெக் சர்வதேசத் தரத்திலான பன்முக சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளன.

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறையில், 'வின்வொண்டர்ஸ்' (VinWonders) மூலம் 350 ஹெக்டேர் பரப்பளவில் வின் குரூப் ஒரு ஒருங்கிணைந்த வளாகத்தை அமைக்கவுள்ளது. இதில் தீம் பார்க் (theme park), உயிரியல் பூங்கா (zoo) மற்றும் சஃபாரி (safari) ஆகியவை அடங்கும். இது தெலங்கானாவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் 2-வீலர்களுக்கு வி-கிரீன் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்கையும் உருவாக்க வின் குரூப் திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், வின் குரூப், 'வின் எனர்ஜோ' (VinEnergo) வழியாக சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் 500 மெகாவாட் சூரிய மின்சக்தி பண்ணையை அமைக்க உத்தேசித்துள்ளது.
இந்தத் திட்டம், தொழில்துறைப் பகுதிகள், நகர்ப்புறங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்து அமைப்புக்கு நிலையான தூய்மையான மின்சாரத்தை வழங்கும். வின் குரூப்பின் இந்த 3 பில்லியன் டாலர் முதலீடு, 'தெலங்கானா ரைசிங்' தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாக அமைந்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின் குரூப் ஏற்கனவே தனது எலெக்ட்ரிக் வாகன பிராண்டான வின்ஃபாஸ்ட் மூலம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உற்பத்தி தொழிற்சாலை உடன் இந்திய சந்தையில் நுழைந்துவிட்டது. ஆனால், வின் க்ரூப்பின் இந்த புதிய முதலீடு ஆனது தெலுங்கானாவில் அமைந்துள்ளது. எப்படியிருந்தாலும் இந்த புதிய ஒப்பந்தம், இந்தியாவில் வின் குரூப்பின் விரிவாக்க உத்திகளில் ஒரு முக்கிய படியாகும்.


Click it and Unblock the Notifications








