குழந்தைனு கூட பாக்காம தாய் செய்த காரியம்! வண்டில ஏன் இப்படி கூட்டீட்டு போனாங்கன்னு தெரிஞ்சதும் ஷாக் ஆன மக்கள்
முன்பெல்லாம் போக்குவரத்து காவல் துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால் தற்போது தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்து விட்டது. எனவே முன்பு போல் சாலைகளில் நின்று கொண்டு அபராதம் விதிப்பதை காவல் துறையினர் குறைத்து வருகின்றனர்.
அதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான் இதன் நோக்கம்.

பல்வேறு வகையான போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்டறிந்து, போட்டோ எடுக்கும் திறன் இந்த கேமராக்களுக்கு உண்டு. டூவீலர்களில் மூன்று பேர் சென்றாலும், இந்த கேமரா போட்டோ எடுத்து, அபராதம் விதித்து விடும். இந்த கேமராவிடம் இருந்து தப்பிப்பதற்காக 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்போது செய்துள்ள காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவை (Viral Video) நீங்கள் சாதாரணமாக பார்த்தால் எதுவுமே தெரியாது. பெண் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி கொண்டிருப்பதாகவும், அவருக்கு பின்னால் அவரது குழந்தை உட்கார்ந்திருப்பதாக மட்டுமே இந்த வீடியோ ஆரம்பத்தில் உங்களை எண்ண வைக்கும்.
ஆனால் சற்று உற்று நோக்கினால், ஸ்கூட்டரின் ஃபுட்போர்டு பகுதியில் 2வது குழந்தை அமர்ந்திருப்பது தெரியும். தனது அம்மாவின் 2 கால்களுக்கு இடையே அந்த குழந்தை அமர்ந்துள்ளது. அந்த குழந்தை அங்கு சௌகரியமாக அமர்ந்திருக்கவில்லை. நெருக்கடியான இடத்தில் பாதுகாப்பு இல்லாமல் அந்த குழந்தை பயணம் செய்கிறது.
இந்த சம்பவம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கால்களுக்கு இடையில் அமர வைத்து குழந்தையை அழைத்து செல்வதன் மூலம், அந்த தாய் கேமராவை ஏமாற்றுவதாக நினைத்து கொண்டு, தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார் என்பதுதான் உண்மை. ஏனெனில் இதுபோன்ற பயணங்கள் பாதுகாப்பு இல்லாதவை.
இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் கார்கள் இருப்பதில்லை. எனவே 2 சிறிய குழந்தைகளை டூவீலரில் அழைத்து செல்லும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஒவ்வொரு குழந்தையாக அழைத்து சென்று பள்ளியில் விட்டு விட்டு வருவது என்பது நடைமுறையில் சற்று சிரமமான காரியம்தான். எனவே 2 குழந்தைகளை ஒன்றாக அழைத்து செல்லும்போது, 'ட்ரிபிள்ஸ்' எனக்கூறி அபராதம் விதிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அதற்காக குழந்தைகளை இப்படி ஃபுட்போர்டு பகுதியில் அமர வைத்து பாதுகாப்பு இல்லாமல் அழைத்து செல்வது சரியான விஷயம் கிடையாது. ஒரு வினாடி எதாவது தவறாக நடந்தால் கூட, அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே வயதில் பெரியவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூவீலர் அல்லது கார் என எந்த வாகனத்தில் பயணம் செய்வதாக இருந்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தீமையை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








