பஸ் ஸ்டாண்டில் "குடிமகன்" செய்த அலப்பறை! வீடியோவை பார்த்தா குபீர்ன்னு சிரிப்பீங்க!
கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை ரத்து செய்யக்கோரி "குடிமகன்" ஒருவர் அரசு பஸ் டயரில் தலைவைத்து படுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தன் மனைவி ஒரு வாரமாக இலவச பஸ்ஸில் சுற்றுலா சென்று விட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த ஜூன் 11ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் விகே சிவகுமார் ஆகியோர் "சக்தி" என்ற திட்டத்தை துவங்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ளதை போல கர்நாடகாவிலும் அரசு சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை பயன்படுத்தி அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் பலர் குழுவாக சேர்ந்து கோவில்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு பஸ்களில் இலவசமாக சென்று வருகின்றனர்.இது அம்மாநிலம் முழுவதும் பெண்கள் மத்தியில் ஒரு டிரெண்டாகவே மாறியுள்ளது.
இந்தத் திட்டம் துவங்கப்பட்டு 20 நாள் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் தனது வாழ்வாதாரமே பாதித்ததாக கண்ணீருடன் கதறினார்.

இலவச பஸ் வந்த பிறகு பெண்கள் ஆட்டோவில் ஏறுவதே இல்லை என அவர் புலம்பினார். தற்போது அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.இது தான் தற்போது பேசு பொருளாக உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று பெங்களூர் ஹொசஹோட்டே பஸ் ஸ்டாண்டில் அம்மாநிலத்தின் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த பகுதி வழியாக வந்த ஒருவர் திடீரென அரசு பஸ்-க்கு அடியில் சென்று டயருக்கு அடியில் தன் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டார். தான் தற்கொலை செய்யப் போவதாகவும் பஸ்சை எடுக்கும்படியும் அடம்பிடித்தார். பஸ்சை தன் தலை மீது ஏற்றி தன்னை கொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனால் சுற்றி இருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். அவரின் தற்கொலைக்கு முயற்சிக்கான காரணம் குறித்து பலர் அவரிடம் கேட்டபோது:"தன் மனைவி இலவச பஸ் பயணத்திட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா சென்று விட்டார். வீட்டில் இருப்பதே இல்லை. ஆண்களுக்கு இது போன்ற திட்டங்கள் எதுவுமே இல்லை.
சக்தி திட்டம் வந்த பின்பு பெண்கள் யாரும் வீட்டில் இருப்பதே இல்லை. ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகள் எல்லாம் என்ன செய்வார்கள்? வீட்டில் பெண்கள் இல்லை என்றால் என்ன நடக்கும். இந்தத் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்"என மிரட்டினார்.
அவரிடம் பேசிய போது தான் அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியிலிருந்த டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அவரை வல்லுகட்டாயமாக பஸ் அடியிலிருந்து வெளியே இழுத்தனர். பின்பு அவரைப் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு பஸ்கள் எல்லாம் அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பாமல் நின்றன. பின்னர் இந்த குடிமகன் போலீசில் ஒப்படைக்கப்பட்ட பின்பு எல்லாம் சகஜ நிலைமைக்கு திரும்பியது.போலீசார் "குடிமகன்" நன்கு "கவனித்து" அனுப்பினர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெண்களுக்கு இலவச பஸ் சேவை என்பது அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றமும் அவர்கள் வேலைக்கு/படிப்பிற்காக செல்லும்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதற்காகவும் தான். இதை புரிந்து கொண்டு பெண்களும் இந்த திட்டத்தின் பயன்பெற வேண்டும் அதே நேரத்தில் ஆண்கள் இந்த திட்டத்தின் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications









