ரொம்ப துணிச்சலான பெண்ணா இருப்பாங்க போல.. அப்பா வாங்கி கொடுத்த ஸ்கூட்டரா இருந்தாலும் இப்படியா பண்ணுறது!..
வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் விதிமீறல்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் காவல்துறை மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. தமிழகத்தில்கூட போக்குவரத்து போலீஸார்கள் தெருவுக்கு தெரு நின்று விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் களையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலையே தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காவலர்கள் மேற்கொண்டிருந்த வழக்கமான வாகன தணிக்கையில் ஓர் சுவராஷ்யமான சம்பவம் அரங்கேறி இருப்பது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இளம் பெண் ஒருவர் தலைக் கவசம் அணியாமல் காவலர்கள் முன்பு துணிச்சலாக வந்திருக்கின்றார். மேலும், அவரை மடக்கிப் பிடித்து தலைக்கவசம் அணியாதது பற்றி கேட்டபோது, தலைக் கவசம் அணியாமல் வந்ததற்கு, தான் அவசரமாக மருத்துவமனை சென்றுவிட்டு வருவதாக காரணம் கூறியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல அவருடன் வந்த அப்பெண்ணின் வயதான தாயாரும் தலைக் கவசம் அணியவில்லை.

இந்தியாவில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இந்த விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே மருத்துவமனைக்கு சென்றதை இளம் பெண் தலைக்கவசம் அணியாமல் இருந்ததற்கு காரணமாக கூறி இருக்கின்றார்.
இதைவிட கூடுதல் அதிர்ச்சி என்னவென்றால், அவருடைய ஸ்கூட்டரில் முறையான நம்பர் பிளேட்டும் இல்லை. நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எண்களுக்கு பதிலாக அதில் வாசகமே இடம் பெற்றிருந்தது. 'பப்பா கிஃப்ட்' என்கிற வாசகமே அதில் இடம் பெற்றிருக்கின்றது. அதாவது, இந்த ஸ்கூட்டரை இளம் பெண்ணின் அப்பா, அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றாராம்.
அதையே அவர் அங்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். அப்பாவின் பரிசாக இருந்தாலும் சரி, அம்மாவின் பரிசாக இருந்தாலும் சரி, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் பதிவெண்கள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும். முறையான எண் இல்லாத வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, நம்பர் லேசாக அழிந்திருந்தாலும் போக்குவரத்து காவலர்கள் அந்த வாகனத்தின் மீது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் துணிச்சலாக இந்த இளம் பெண் நம்பர் பிளேட்டில் வாசகத்தை ஓட்டி அதை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதுபோன்று நம்பர் பிளேட்டில் வாசகத்தை எழுதுவது சட்டவிரோதமானது என்பதை பலரும் இன்னும் உணரவில்லை என்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இந்த விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு தேவைப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிகின்றது. இந்த விநோத சம்பவம் உபி மாநிலத்திலேயே அரங்கேறி இருக்கின்றது.
இளம் பெண் ஓட்டி வந்தது டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் ஆகும். அந்த பெண் ஹெல்மெட் அணியாமல், அதற்கு பதிலாக முகத்தை துணியால் மூடியிருந்தார். மேலம், அவரை உள்ளூர் ஊடகத்தை சேர்ந்தவர்கள் சிலர் பேட்டி எடுத்தபோது, அவர் முகத்தை மூடிக் கொண்டார்.
இதுபோன்று முகத்தை மூடிக் கொள்வதனால் ஒன்றுமே ஆகாது என்பதை அவர் மட்டுமல்ல நாமும் இங்கே உணர வேண்டும். எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு கட்டாயம் நாம் செவி சாய்க்க வேண்டும். இல்லை என்றால் நிலைமை படுமோசமாகிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விதி மீறல்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஒரு சிலர் இதை அஞ்சாமல் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சான்றாகவே உபி இளம் பெண் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இளம் பெண்மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. கட்டாயம் உச்சபட்ச அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








