இந்த குழந்தைக்கு என்ன வயசுனு சரியா சொல்லீட்டா நீங்க கில்லி! வெயிட்டான ராயல் என்பீல்டு பைக்கை அசால்டா ஓட்டுதே!
குழந்தைகள் கார் மற்றும் பைக்குகளை ஓட்டும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது அதிகமாக உலா வருகின்றன. இந்திய சட்ட திட்டங்களின்படி, 18 வயதான ஒருவர்தான் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெற முடியும். எனவே குழந்தைகள் வாகனங்களை ஓட்டுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.
ஆனால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன்பே ஒரு சில பெற்றோர், தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றனர். அதுவும் பொது சாலைகளில்! இது குழந்தைகளின் உயிருடன், சாலையை பயன்படுத்தும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைப்பதற்கு சமமானது. எனவே குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விதிமுறை மீறல் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த சூழலில் சமூக வலை தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில், 4 வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்று ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த குழந்தைக்கு அருகே பெரியவர் ஒருவர் இருக்கிறார். அனேகமாக அவர் அந்த குழந்தையின் தந்தையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதிக எடை கொண்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை, அந்த குழந்தை 'என்ஜாய்' செய்து ஓட்டுவதை இந்த வீடியோவில் நம்மால் மிகவும் தெளிவாக பார்க்க முடிகிறது.
இது தவறான விஷயமாக இருந்தாலும், இந்த குழந்தையை அதன் பெற்றோர் பொது இடத்தில் பைக் ஓட்ட வைக்கவில்லை என்பது சற்று ஆறுதல். இது தனியார் இடம் என கூறப்படுகிறது. எனவே மற்றவர்களின் உயிருக்கு அவர்கள் எவ்விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. இந்த குழந்தை, வாகனங்களை ஓட்டுவது இது முதல் முறையல்ல.
கேரள மாநிலத்தை சேர்ந்த இந்த குழந்தை ஏற்கனவே யமஹா ஆர்எக்ஸ்100 (Yamaha RX100) பைக் மற்றும் டாடா கார் (Tata Car) ஆகிய வாகனங்களையும் ஓட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த குழந்தை பின் நாட்களில் வாகன பந்தயங்களில் சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உரிய வயதை எட்டுவதற்கு முன்பு வாகனங்களை ஓட்டும்படி குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து. ஏனெனில் அனைத்து நேரங்களிலும், சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்காது. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் எக்காரணத்தை கொண்டும் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம்.
இது மோசமான சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) வழிவகுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஒரு வகையில் இதுவும் ஒரு காரணம்தான். எனவே பெற்றோர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








