100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 18 ரூபாய் சுருட்டறாங்களா! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த மோசடி அம்பலம்!
இந்தியாவில் அதிக மோசடி நடைபெறும் இடங்களில் ஒன்றாக பெட்ரோல் பங்க்குகள் (Petrol Bunks) உள்ளன. ஏற்கனவே பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை, கோடை வெயிலை போல் வாகன ஓட்டிகளை வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மோசடிகளும் ஒரு பக்கம் வாகன ஓட்டிகளை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன.
கடந்த காலங்களில், பெட்ரோல் பங்க்குகளின் பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த வரிசையில் அதிர்ச்சியில் ஆழ்த்தும் மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் ஒன்று தற்போது கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளது. வைரல் வீடியோ (Viral Video) ஒன்றின் மூலமாக இந்த மோசடி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா (Telangana) மாநிலம் வாரங்கல் (Warangal) பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு இந்தியன் ஆயில் (Indian Oil) பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற இந்த மோசடி சம்பவம் குறித்த தகவல்களை இந்த செய்தியின் மூலமாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் ஒரு வாளியில் பெட்ரோல் நிரப்புவதை பார்க்க முடிகிறது. நீங்கள் இந்த வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், எப்படி மோசடி நடைபெறுகிறது? என்பது புரியும்.
அதாவது பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் உள்ள மீட்டர் ஓட தொடங்கிய பிறகுதான், பெட்ரோல் வெளியே வருகிறது. இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், மீட்டரில் 17.56 ரூபாய் என வந்த பிறகுதான், பெட்ரோல் வெளியே வர தொடங்குகிறது. வாடிக்கையாளர் ஒருவர் சந்தேகப்பட்டு சோதனை செய்தபோது இந்த பகீர் மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புபவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் எனவும் நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் இந்த வைரல் வீடியோ காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மோசடியில் ஈடுபடும் பெட்ரோல் பங்க் நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இது போன்ற விஷயங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில், எரிபொருள் வினியோகம் செய்வதற்கு கருப்பு நிற பைப்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே எரிபொருள் வருவதை வாடிக்கையாளர்களால் பார்க்க முடிவதில்லை. ஆனால் இந்த கருப்பு நிற பைப்களுக்கு பதிலாக, கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரன்ட் பைப்களை (Transparent Pipe) பயன்படுத்தினால், எரிபொருள் வருவதை வாடிக்கையாளர்களால் பார்க்க முடியும். இதன் மூலம் இது போன்ற மோசடிகளை குறைக்க முடியும் என கருதப்படுகிறது.
எனவே பெட்ரோல் பங்க்குகளில் ட்ரான்ஸ்பரன்ட் பைப்களை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மனு தாக்கல் கூட செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் ட்ரான்ஸ்பரன்ட் பைப்களை பயன்படுத்தினால், தீ விபத்து ஏற்படும் அபாயங்கள் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இது போன்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான புதிய நடைமுறை ஒன்றை அரசு உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும். அந்த நடைமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications








