ஆட்டத்தில் மட்டுமல்ல, ஆடியிலும் அதிரடி காட்டும் விராத் கோஹ்லி!
டுவென்ட்டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் விராட் கோஹ்லி பொறுப்பு மிகுந்த வீரராக இந்திய ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி வருகிறார். மைதானத்தில் அதிரடியும், துடிப்பையும் காட்டும் விராட் கோஹ்லி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வாறே இருந்து வருகிறார். அவர் கராஜில் நிற்கும் கார்களும் துடிப்பும், அதிரடியும் மிக்கவையாக இருக்கின்றன.
சச்சின் டெண்டுல்கர் கார் கலெக்ஷன்!
தன்னைப் போலவே தனது கார்களும் இருக்க வேண்டும் என்பதற்காக துடிப்பும், அதிசெயல்திறனும் மிக்க பல ஸ்போர்ட்ஸ் கார்களையும், பைக்குகளையும் கோடிகளை கொட்டி வாங்கி வைத்திருக்கிறார்.

ஆடி கார் பிரியர்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினுக்கு தனிப்பட்ட முறையில் பிஎம்டபிள்யூ மீது தீராத பிரியம் வைத்திருப்பது போன்று, விராத் கோஹ்லிக்கு ஆடி கார்கள் என்றால் கொள்ளை பிரியம். டொயோட்டா நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டாலும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு ஆடி கார்களை வாங்கி தனது ஆடி ஆசையை தீர்த்து வருகிறார். இந்தநிலையில், அவரது கராஜை அலங்கரிக்கும் கார் மாடல்களை தொடர்ந்து காணலாம்.

ரெனோ டஸ்ட்டர்
கடந்த 2012ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்நாயகன் விருது பெற்றதற்காக விராத் கோஹ்லிக்கு ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி பரிசளிக்கப்பட்டது. ரெனோ டஸ்ட்டர் வந்த புதிதில், பெரும் ஹிட்டடிருந்த அந்த மாடலை மகிழ்வோடு பெற்றுக்கொண்டதுடன், சக வீரர்களுடன் அந்த எஸ்யூவியில் மைதானத்தை ஒரு ரவுண்டு வந்ததும் நினைவிருக்கலாம்.

சிறப்பான மாடல்
ரெனோ டஸ்ட்டர்தான் கோஹ்லியின் தனிப்பட்ட முறையில் பெற்ற முதல் கார் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. தோற்றம், செயல்திறன், இடவசதி, விலை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் ரெனோ வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல். விராத் கோஹ்லிக்கு டீசல் டாப் வேரியண்ட் மாடல் பரிசாக வழங்கப்பட்டது. 459 லிட்டர் பூட்ரூம் கொண்டது. அப்போது 12 லட்ச ரூபாய் விலை மதிப்பில் கொடுக்கப்பட்டது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி
டொயோட்டா லிவா காருக்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட நேரத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒன்று அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. லிவா காரை கொடுத்தால் அவர் நிச்சயம் பயன்படுத்துவது கடினம் என்று கருதி, ஃபார்ச்சூனர் எஸ்யூவியை அவருக்கு டொயோட்டா வழங்கியது போலும். ரூ.25 லட்சம் பட்ஜெட்டிலான எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சிறப்புகள்
விராட் கோஹ்லிக்கு வழங்கிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல். இந்த எஸ்யூவியில் இருக்கும் டி-4டீ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் வழங்கும். ரூ.25 லட்சம் மதிப்பில் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி
விராட் கோஹ்லியின் கராஜில் பெரும்பாலான கார்கள் ஆடி பிராண்டுதான். அதன்படி, அவரிடம் ஆடி க்யூ7 எஸ்யூவியும் உள்ளது. கிரிக்கெட் மற்றும் சினிமா உலகில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் வீட்டு கராஜிற்கு ஒரு விசிட் அடித்தால், பெரும்பாலான வீடுகளில் ஒரு ஆடி க்யூ7 நிச்சயம் இருக்கும். அந்தளவு டிசைன், இடவசதி, சொகுசு வசதிகளில் சிறப்பான மாடல். விராட் கோஹ்லி

ஆடி க்யூ7 சிறப்புகள்
ஆடி க்யூ7 எஸ்யூவியின் 4.2 லிட்டர் வி8 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்தான் விராட் கோஹ்லியிடம் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. சொகுசான இருக்கைகள், 7 பேர் செல்வதற்கான இடவசதி கொண்டது. ரூ.75 லட்சம் மதிப்பில் இந்த காரை வாங்கி வைத்திருக்கிறார்.

ஆடி எஸ்6 சொகுசு கார்
ஆடி ஏ6 காரின் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட மாடல்தான் ஆடி எஸ்6 சொகுசு செடான் கார். அதிவேகமான செடான் கார் என்பதே விராட் கோஹ்லியை கவர்ந்துள்ளது. மிகச்சிறப்பான ஓட்டுதல் தரம், வசதிகள் விராட் கோஹ்லியை கவர்ந்துவிட்டது.

ஆடி எஸ்6 சிறப்பம்சங்கள்
ஆடி எஸ்6 காரில் இருக்கும் 4.0 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 420பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் எஞ்சினின் மற்றொரு விசேஷம் வெறும் 1,500 ஆர்பிஎம்.,ல் அதிகபட்சமான 550 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. ஒரு கோடி ரூபாய் விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை.

ஆடி ஆர்8 வி10 ஸ்போர்ட்ஸ் கார்
ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் அதிவேகமான மாடலாக குறிப்பிடப்படுகிறது. இந்த கார் வி8 மற்றும் வி10 எஞ்சின் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்பட்டாலும், விராட் கோஹ்லி வாங்கியிருப்பது ஆடி ஆர்8 வி10 மாடலையே.

ஆடி ஆர்8 வி10 சிறப்புகள்
இந்த காரில் டர்போ சார்ஜர் துணையில்லாமல் இயங்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் அதிகபட்சமாக 517 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் சிறப்பான தரைப்பிடிமானத்தையும், சிறந்த செயல்திறனையும் அளிக்கும். இந்த கார் ரூ.2 கோடி மதிப்புடையது.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ்
கடந்த ஆண்டு இரண்டு ஆடி கார்களை வாங்கினார். அதில், கடந்த மே மாதத்தில் ஆடி நிறுவனத்தின் புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் காரையும் உடனே புக் செய்து வாங்கிவிட்டார். விராட் கோஹ்லி இந்த காரை உடனடியாக வாங்கியதற்கு, இது ஆடியின் அதிவேக மாடல் என்பதும் ஒரு காரணம். ஆம், இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. லிமிடேட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் உலக அளவில் 99 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். அதில், ஒன்றை விராட் கோஹ்லி வாங்கியிருக்கிறார்.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் தொடர்ச்சி 1
அதிவேகம் மட்டுமல்ல, இந்த காரில் இருக்கும் லேசர் ஹை பீம் வசதியும் கோஹ்லியை வசீகரித்தது. அதாவது, கார் 60 கிமீ வேகத்தை தாண்டும்போது, ஹெட்லைட் தானாக ஒளிரும். சாதாரண எல்இடி ஹெட்லைட்டுகளைவிட இருமடங்கு கூடுதல் தூரத்திற்கு ஒளியை பாய்ச்சும். அரை கிலோமீட்டர் தூரம் வரை பிரகாசத்தை தரும்.

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் தொடர்ச்சி 2
இந்த காரில் 570 எச்பி சக்தியையும், 540 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆம், இந்த கார் கோஹ்லி அடிக்கும் சிக்சரை விட விரைவானது. அப்படியொரு செயல்திறனை வழங்கும். அதன் விபரம் அடுத்த ஸ்லைடில்...

ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ் தொடர்ச்சி 3
இந்த புதிய ஆடி ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகம் வரை பறக்கும். ஆனால், இந்திய விதிமுறைகளுக்குப்பட்டு வேக வரம்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3 கோடி விலையில் இந்த காரை வாங்கியிருக்கிறார்.

ஆடி ஏ8எல் சொகுசு கார்
ஆடி நிறுவனத்தின் சொகுசு செடான் கார்களில் விலை உயர்ந்த மாடல் இதுதான். கடந்த ஆண்டு இந்த காரை விராட் கோஹ்லி வாங்கினார். ஆடி ஏ8 காரின் கூடுதல் வீல்பேஸ் கொண்ட மாடல்தான் ஆடி ஏ8எல். பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை முதல் ஆளாக சென்று வாங்கி தனது கராஜிற்கு கொண்டு வந்துவிட்டார்.

ஆடி ஏ8எல் சிறப்புகள்
ஆடி ஏ8எல் கார் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின், 4.2 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் மற்றும் 6.3 லிட்டர் டபிள்யூ12 பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதில், 6.3 லிட்டர் டபிள்யூ 12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலையே அவர் வாங்கியிருக்கிறார். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 494 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிந்றன. 100 விதமான வண்ணங்கள், 23 விதமான இன்டீரியர் வண்ணக் கலவைகள், 12 விதமான மர வேலைப்பாடுகள் கொண்ட இந்த காரை வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளளாம். இந்த கார் ரூ.2 கோடி மதிப்பு கொண்டது.

கனவு கார்
ஆடியை தொடர்ந்து மஸேரட்டி காரை வாங்கும் எண்ணம் இருப்பதாகவும், ஆனால், அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்தான் தனது கனவு கார் என்று விராட் கோஹ்லி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த காரை ஓட்டிப் பார்த்துவிட்டதாகவும், அதன் ஓட்டுதல் அனுபவம் மிகவும் தனித்துவமானதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ்
கோல்டுஃபிங்கர், கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், கேசினோ ராயல் உள்பட பல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் வரிசை கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக தற்போது அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார் விற்பனையில் உள்ளது.

யுவராஜ் சிங் கார் கலெக்ஷன்
தற்போது நடந்து வரும் டுவென்ட்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லிக்கு உறுதுணையாக நின்று ஆடிய யுவராஜ் சிங்கின் கார் கலெக்ஷனை பார்க்க க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








