மைதானத்திற்கு போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரில் ஸ்டைலாக வந்து இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!! வைரலாகும் வீடியோ இதோ...
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விலையாடும் வீரர்களிடம் சொகுசு கார்கள் இருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. அதிலிலும், விராட் கோலி போன்ற நீண்ட வருடங்களாக சர்வதேச போட்டிகளை விளையாடும் கிரிக்கெட் வீரரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட லக்சரி கார்கள் கூட இருக்கும்.
விராட் கோலியிடம் உள்ள சொகுசு கார்களுள் ஒன்று போர்ஷே பனமேரா ஆகும். பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியில் துவங்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுப்பட பனமேரா ஸ்போர்ட்ஸ் காரில் விராட் கோலி வந்து இறங்கியுள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடினாலும் விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். கிரிக்கெட் போட்டிகள் இல்லாத போது டெல்லியில் இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்கும் விராட் கோலி, டெல்லியில் இருக்கும் மைதானங்களில் போட்டி நடைபெற்றால் வீட்டில் இருந்து தனது சொந்த காரிலேயே போட்டிக்கு முந்தைய பயிற்சிகளில் கலந்து கொள்ள வருவது உண்டு.
அவ்வாறுதான் தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுப்படுவதற்காக தனது போர்ஷே பனமேரா காரில் சென்றிருக்கிறார். ஆனால் உண்மையில், இந்த குறிப்பிட்ட பனமேரா காரில் விராட் கோலி காட்சி தருவது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை. இந்த போர்ஷே பனமேரா காரின் நம்பர் பிளேட்டில் விராட் கோலியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண்ணான 18 உள்ளதை காணலாம்.

விராட் கோலியின் வீடு டெல்லியில் பிரபலமான என்சிஆர் பகுதியில் அமைந்துள்ளது. விராட் கோலியின் கேரேஜில் இருந்து இந்த குறிப்பிட்ட போர்ஷே கார் அவ்வளவாக வெளியே வந்ததே கிடையாது. முன்னதாக இந்த கார் குர்க்கானில் இருக்கும் விராட் கோலியின் அண்ணன் விகாஷ் கோலியிடம் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. அவரும் அவ்வளவாக கேரேஜில் இருந்து இந்த காரை வெளியே எடுக்கவில்லை.
மேலே உள்ள வீடியோவில், தனது பயிற்சிக்கான கிரிக்கெட் கிட்-ஐ காரின் பின்பக்க பூட்ஸ்பேஸில் இருந்து விராட் கோலி எடுப்பதை காணலாம். பனமேரா ஆனது உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொத்தம் 4 கதவுகளை கொண்ட இந்த கார் விராட் கோலியிடம் டர்போ என்ஜின் உடன் உள்ளது. இந்த கார் தற்போது வைத்திருப்பது என்னவோ விராட் கோலி என்றாலும், டெலிவிரி பெற்றது விகாஷ் கோலி ஆகும்.

விகாஷ் கோலியால் 2020இல் டெலிவிரி பெறப்பட்ட போது இந்த போர்ஷே பனமேரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.13 கோடி ஆகும். பனமேரா டர்போ காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 550 பிஎஸ் மற்றும் 770 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் 8-ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை காரின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது. இந்த காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடலாம். போர்ஷே நிறுவனம் பனமேரா காருக்கு ஸ்போர்ட் க்ரோனோ தொகுப்பை வழங்குகிறது. இந்த தொகுப்பை வாங்கி பொருத்துவதன் மூலமாக 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடலாம்.


Click it and Unblock the Notifications