5 குழந்தைகளுக்கு தாய்... கேரள இளம்பெண்ணின் கத்தார் நோக்கிய கார் பயணம்!! எதற்காகனு தெரியுமா?
கேரளாவை சேர்ந்த கால்பந்து ரசிகை ஒருவர் கத்தாரில் நடைபெறவுள்ள 2022 ஃபிபா கால்பந்து போட்டியை காண இந்தியாவில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் புறப்பட்டுள்ளார். யார் இந்த பெண்? இவ்வளவு தொலைவு பயணம் மஹிந்திரா தாரில் சாத்தியமா என்பது குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் பிரபலமாக இருக்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். இந்தியாவிலும் கிரிக்கெட்டிற்கு அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உள்ளனர். குறிப்பாக, கேரளாவில் கிரிக்கெட்டை விடவும் கால்பந்து போட்டிகளை விரும்பி காண்போரே அதிகம் என்று சொல்ல வேண்டும்.

கால்பந்து உலகின் மிக பெரும் போட்டி தொடராக ஃபிபா விளங்குகிறது. 2022ஆம் ஆண்டிற்கான ஃபிபா கால்பந்து போட்டி தொடர் வருகிற நவம்பர் 20ஆம் தேதி மத்திய கிழக்கு நாடான கத்தாரில் துவங்கவுள்ளது. இந்தியாவில் இருந்து கத்தார் சற்று அருகாமையில் உள்ள நாடு தான் என்பதால் நம் நாட்டில் உள்ள பல கால்பந்து ரசிகர்கள் கத்தாருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய கால்பந்து ரசிகர்களுள் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த நாஜி நௌஷி. ஆனால் இவர் கத்தாருக்கு புறப்பட்டு சென்ற விதமே வேறு. ஏனெனில் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் நாஜி புறப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நாஜி நௌஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இந்தியாவில் இருந்து சில நாடுகள் கடந்தால் கத்தார் வந்துவிடும் என்றாலும், அவ்வளவு தொலைவை கார் ஒன்றில் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த பயணத்திற்கு மாதக்கணக்கில் கூட ஆகலாம். அதனால்தான் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள 2022 ஃபிபா போட்டியின் இறுதி போட்டியை ஆவது குறைந்தது பார்த்துவிட வேண்டும் என்கிற திட்டத்தில் நாஜி நௌஷி உள்ளார்.

இவரிடம் ஓமன் நாட்டு ஓட்டுனர் உரிமம் உள்ளது. இதனை ஏற்கனவே சர்வதேச ஓட்டுனர் உரிமமாக நாஜி மாற்றி கொண்டுள்ளார். அவரது இருப்பிடம் உள்ள பகுதியில் இருந்து கோயம்புத்தூர் வழியாக மும்பைக்கு முதலாவதாக சென்றடைவது நாஜி நௌஷியின் திட்டம். மும்பையை அடைந்த பின் 2022 ஃபிபா கால்பந்து போட்டிக்காக தனது தார் வாகனத்தை பிரத்யேக பெயிண்ட்டால் அலங்கரிக்க இவர் திட்டமிட்டுள்ளார்.

நாஜி நௌஷி இந்த பயணத்திற்கு முழுவதுமாக சாலை வழி பயணத்தை தேர்வு செய்யவில்லை. மும்பையில் இருந்து கப்பலில் தான் தனது தார் வாகனத்துடன் ஓமனுக்கு செல்ல இவர் முடிவெடுத்துள்ளார். ஓமனை சென்றடைந்த பின் நாஜியின் தார் பயணம் மீண்டும் தொடரும். ஓமனில் இருந்து கத்தாருக்கு செல்ல இடையில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை இவர் கடக்க வேண்டும்.

நாஜி நௌஷியின் இந்த பயணம் கடந்த அக்.16ஆம் தேதி கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கொடியசைந்து துவங்கி வைக்க, கன்னூரில் இருந்து துவங்கியுள்ளது. இந்த பயணத்திற்காக நீண்ட மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக நாஜி நௌஷி தெரிவித்துள்ளார். டிராவல் செய்வது இவருக்கு பிடித்தமான ஒன்றுதான், இருந்தாலும் இவ்வாறான துணிகரமான நாடு-நாடு பயணங்களை மேற்கொள்வது இதுவே முதல்முறையாம்.

இத்தகைய அசாத்தியமான பயணத்தை துவங்கியுள்ள இவர் 5 குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் நம்ப முடிகிறதா உங்களால். நாஜி நௌஷியின் கணவர் நௌஷாட் வெளிநாட்டை சேர்ந்தவர். இந்த பயணத்தை மேற்கொள்ள நௌஷாட்டும், அவரது 5 குழந்தைகளும் நாஜி நௌஷியை மிகவும் ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

நாஜி நௌஷி யுடியூப் சேனல் ஒன்றையும் கையாண்டு வருகிறார். அவரது யுடியூப் சேனலில் ஆல்-இந்தியா ட்ரிப் உள்பட 4 டிராவல் தொடர்கள் பதிவிடப்பட்டுள்ளன. அத்தகைய பயணங்களின் மூலம் கிடைத்த உத்வேகம் & தைரியத்துடன் தற்போது கத்தாரை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் நாஜி. இந்த பயணத்திற்காக தனது தார் வாகனத்தை ஓர் நடமாடும் வீடாக இவர் மாற்றியமைத்துள்ளார்.

இரவு நேரங்களில் சுங்க சாவடிகள் & பெட்ரோல் நிலையங்களின் அருகில் வாகனத்தை நிறுத்தி அதற்குள்ளேயே உறங்குவது என்பது இவரது திட்டம். தூங்குவதற்கும், மற்ற அன்றாட பணிகளுக்கும் ஏதுவாக ஒரு கூடாரத்தை மடித்து தாரின் மேற்கூரையில் வைத்துள்ளார். சமையல் கூட காருக்குள்ளேயே செய்து சாப்பிட திட்டமிட்டுள்ளார். இதற்காக தேவையான சமையல் பொருட்கள் & உபகரணங்கள் அனைத்தையும் தயாராக பேக் செய்து எடுத்து சென்றுள்ளார்.

இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வது நம்மில் பெரும்பாலானோருக்கு நீண்ட நாள் கனவாக இருக்கும். அத்தகையவர்கள் நாஜி நௌஷியை தான் ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும். நாஜி தேர்வு செய்திருக்கும் தார் இந்த பயணத்திற்கு எல்லா விதங்களிலும் ஏற்ற வாகனம் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








