குழந்தையுடன் திருடுப்போன கார்... கண்டுப்பிடிக்க கட்டணம் செலுத்த சொன்ன பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்!!
ஓர் குறிப்பிட்ட கார் பிராண்டில் மட்டும் வாடிக்கையாளர்கள் குவிகிறார்கள் எனும்போது, அந்த பிராண்டின் கார்களின் தரம் மற்றும் அவற்றின் செயல்படுதிறன் சார்ந்த விஷயங்கள் எல்லாம் காரணங்களாக ஒருபுறம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுடனான அந்த கார் நிறுவனத்தின் பிணைப்பும் இதற்கு முக்கிய காரணமாக சொல்ல வேண்டும்.
அதாவது, நிறுவனத்திற்கு இலாபமாக அமைய வேண்டும் என்று மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் இருத்தல் வேண்டும் என கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்கையுடன் செயல்பட வேண்டும். இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், அமெரிக்காவில் திருடு போன தனது பிராண்ட் காரை அதன் உரிமையாளர் ஜிபிஎஸ்-க்கு மாதசந்தாவை மீண்டும் கட்டும்வரையில் கண்டுப்பிடிக்க உதவாமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆட்டம் காட்டியுள்ளது.

உலகளவில் பிரபலமான, அதேசமயம் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஃபோக்ஸ்வேகனும் ஒன்று. இன்னும் சொல்ல போனால், ஐரோப்பாவில் செயல்படும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் தான் ஆடி, ஸ்கோடா என பல முன்னணி பிராண்ட்கள் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட நிறுவனத்தில் இருந்தா ஒரு வாடிக்கையாளருக்கு மனதை வெறுப்படைய செய்யக்கூடிய சம்பவம் நடைபெற்றுள்ளது எனும்போது ஆச்சிரியமாக உள்ளது.
அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாகாணத்தில் லேக் கவுண்டி போலீஸார் குழந்தை உடன் திருடுப்போன ஃபோக்ஸ்வேகன் கார் ஒன்றை கண்டுப்பிடிக்க முடியாமல் தவித்துள்ளனர். அதாவது அவர்களால், காரின் ஜிபிஎஸ் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை டிராக் செய்ய கார்-நெட் என்ற சேவையை ஃபோக்ஸ்வேகன் வழங்கி வருகிறது. அங்கு சென்று விசாரித்த போதும் போலீஸாரால் திருடுப்போன காரின் இருப்பிடத்தை கண்டுப்பிடிக்க இயலவில்லை.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, போலீஸார் ஃபோக்ஸ்வேகனின் கார்-நெட் சேவையை அணுகியுள்ளனர். ஆனால் சம்மந்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் கார் உரிமையாளரின் கார்-நெட் சேவைக்கான டிரைல் பிரீயட் முடிவடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் களவுப்போன காரின் இருப்பிடத்தை கண்டறிய 150 டாலர்கள் கொடுத்து அந்த நபர் ஜிபிஎஸ் சேவையை ரீ-ஸ்டார்ட் செய்துள்ளார். கார் திருடு போனது தெரிந்தும் சிறிது கூட கட்டணத்தை அவர்கள் குறைக்கவில்லை.

இது நிறுவனத்தின் கொள்கையில் அடங்குவதாகவும், அதை மீற முடியாது எனவும் 150 டாலர்களை முழுவதுமாக பெற்றுக்கொண்ட பின்னரே ஜிபிஎஸ் சேவையை மீண்டும் வழங்கியுள்ளனர்.150 அமெரிக்க டாலர்கள் என்பது இன்றைய இந்திய ரூபாயில் 12 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். இந்த தொகையை சம்மந்தப்பட்ட கார் உரிமையாளர் ஆரம்பத்தில் கட்ட இயலாமல் திரும்பி சென்றுள்ளார். அதன்பின் எப்படியோ பணத்தை தயார் செய்து, கார்-நெட் சேவை குழுவை மொபைலில் தொடர்பு கொண்டு சேவையை ரீ-ஸ்டார்ட் செய்துள்ளார்.
இது எல்லாம் நடந்து முடிய 30 நிமிடங்கள் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு உள்ளாகவே குழந்தையையும், திருடுப்போன காரையும் போலீஸார் கண்டுப்பிடித்து விட்டனர். அவசர அவசரமாக காருக்கான ஜிபிஎஸ் சேவையை ரீ-ஸ்டார்ட் செய்தது பலன் இல்லாமலேயே போய்விட்டது. இந்த சேவை கட்டணம் எதிர்காலத்தில் வேண்டுமாயின் அந்த நபருக்கு உதவலாமே தவிர்த்து, இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், காரை கண்டுப்பிடிக்க கார்-நெட் சேவை குழுவினர் எந்த விபரத்தையும் அளிக்கவில்லை.
இந்த நிகழ்வானது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்துள்ள அவர்கள் இதுகுறித்த தங்களது கருத்துகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், இதில் சம்மந்தப்பட்டவர்களுடன் இந்த சம்பவத்தை அடையாளம் கண்டு வருகிறோம் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை நிறுவனம் மிக முக்கியமானதாக கருத்தில் கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Chicago SunTimes


Click it and Unblock the Notifications








