"தயவு செஞ்சு யாராவது எங்க நிறுவனத்தை வாங்கிக்கோங்க" ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட மோசமான நிலைமை...
ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வருகின்றன. ஆட்டோமொபைல் துறையில் ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனங்கள் வெளியேறிய நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் வெளியேறும் முடிவை எடுத்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. வெளிநாடுகளிலிருந்த ரஷ்யாவில் தொழில் செய்துவரும் பல நிறுவனங்களால் தங்கள் தொழிலைத் தொடர முடியவில்லை. பல நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கள் தொழிலின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி வைத்துவிட்டு நிலைமை மீண்டும் பழைய படி திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் ரஷ்யாவில் சூழ்நிலை பழைய நிலைமைக்குத் திரும்புவதாகத் தெரியவில்லை. மாறாக மேலும் மோசமடைந்து கொண்டே தான் செல்கிறது. இதற்கிடையில் ரஷ்யாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் எல்லாம் வெளியேற வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இதனால் அந்நாட்டில் கார் தயாரிப்ப பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு நிறுவனங்களாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர்.

கடந்த மே மாதமே ரெனால்ட் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தது. இந்நிறுவனம் அந்நாட்டில் தனக்குச் சொந்தமான ஆலையை மாஸ்கோ முனிசிபாலிட்டிக்கு விற்பனை செய்துவிட்டது. மேலும் தனது உரிமைகளை அவ்டோவஸ் என்ற அந்நாட்டின் அரசு அமைப்பு ஒன்றிற்கு வெறும் ஒரு யூரோ மதிப்பிற்குத் தனது அத்தனை சொத்துக்களையும் விற்பனை செய்துவிட்டு வெளியேறிவிட்டது.

காத்திருப்பு காலத்தில் பராமரிப்பு, சம்பளம் உள்ளிட்ட விஷயங்களுக்கான செலவுகள் வீண், இதனால் ஏற்படும் நஷ்டத்தை எதிர்காலத்தில் ஈடுகட்ட முடியாது. இதனால் மொத்தத்தையும் நஷ்டமாக அறிவித்துவிட்டுக் கிளம்புவதே சிறந்த முடிவாக இருக்கும் என அந்நிறுவனம் வெளியேறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடிகள் அதிகமாகியது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து ரஷ்யாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிலை மீண்டும் துவங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் தொழில் செய்து வந்த நிஸான் நிறுவனம் அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிறுவனம் அந்நாட்டில் மொத்தம் 687 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை வைத்திருந்தது. இந்நிறுவனம் அத்தனை சொத்துக்களை ரஷ்ய அரசின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வெறும் ஒரு யூரோவிற்கு விற்பனை செய்துவிட்டு அந்நாட்டிலிருந்து வெளியேறி விட்டது.

ஏற்கனவே ரெனால்ட் நிறுவனம் 2.2 பில்லியன் யூரோக்கள் அளவிலான சொத்துக்களை விட்டுவிட்டு வெளியேறிப் பெறும் நஷ்டத்தைச் சந்தித்தது. அதையடுத்து நிஸான் நிறுவனம் வெளியேறிய நிலையில் இந்த பட்டியலில் விரைவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் அந்நாட்டில் உள்ள காஸ் என்ற நிறுவனத்துடன் இணைத்து தனது பிஸ்னஸை துவங்கியது.

இந்நிறுவனம் அந்நாட்டில் ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா ஆக்டவியா ஆகிய கார்களை தயாரித்துச் சிறப்பாக விற்பனை செய்து வந்தது. ரஷ்யாவில் உள்ள காலூகா என்ற இடத்தில் தனது தயாரிப்பு ஆலையை நிறுவித் தயாரிப்புகளை மேற்கொண்டு வந்தது. போர் துவங்கிய பிறகு இந்த ஆலையின் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. சிறிது காலம் நிலைமை சரியாகுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் நிலைமை சரியாகும் எனத் தெரியவில்லை. மேலும் பராமரிப்பு மற்றும் மற்ற செலவினங்களுக்கான பணத்தைத் திரும்ப எடுக்க முடியும் என் நம்பிக்கையும் இல்லை. அதனால் அந்நிறுவனம் தற்போது ரஷ்யாவில் உள்ள தனது ஆலையை வாங்க நல்ல முதலீட்டாளரைத் தேடி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரஷ்யாவில் 1 பில்லியின் யூரோ மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. இதை யாராவது விலை கொடுத்துவாங்கினால் அந்த ஆலையில் நிலைமை சரியான பின்பு கார் உற்பத்தியைத் துவங்கலாம்.

ஆனால் இந்த முயற்சியை ஏற்கனவே ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் செய்தது. ஆனால் ஒருவர் கூட இந்நிறுவனங்களின் ஆலைகளை வாங்க முன்வரவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் அதிக நஷ்டத்தைத் தவிர்க்க இந்நிறுவனம் வெறும் 1 யூரோவிற்கு தங்கள் ஆலைகளை அரசு அமைப்புகளுக்கே விற்பனை செய்துவிட்டு வெளியேறியது. அதே போலத் தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் வெளியேறும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையை அந்நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனவும், இதனால் அந்நாட்டு மக்கள் பெரிய துன்பத்திற்கு ஆளாகவுள்ளனர் எனவும் பேசப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து நிறுவனங்கள் ரஷ்யாவிற்குள் நுழைய பெரும் தயக்கம் காட்டும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








