16 மாதங்களாக சர்வீஸ் செய்யப்படாத கார்! போராட்டத்தில் இறங்கிய நடிகர்...
கேரள நடிகர் ஒருவரின் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது கார் 16 மாதங்களாக ரிப்பேர் செய்யப்படாமல் சர்வீஸ் சென்டரிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நடிகர் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மற்றும் டீலருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண் அரவிந்தக்ஷன், இவர் நடிகராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு கேரளாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ 1.5 டிடிஐ இன்ஜின் கொண்ட காரை வாங்கினார். இந்த கார் வாங்கும் போது அவருக்கு 4 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை வாரண்டியை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இவர் தனியாகப் பணம் கட்டி மேலும் 2 ஆண்டுகளுக்கான வாரண்டியையும் சேர்த்து வாங்கியுள்ளார். இவர் கார் இதுவரை வெறும் 58ஆயிரம் கி.மீ மட்டுமே பயணித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம்தேதி இவர் தனது ஃபோக்ஸ்வேகன் போலோ டிடிஐ காரில் பயணித்துக்கொண்டிருந்த போது கார் திடீரென நடுவழியில் ரிப்பேர் ஆகி நின்றது. இவர் உடனடியாக ஃபோக்ஸ்வேகன் ரோடு சைடு அசிஸ்டென்ஸை உதவியை நாடினார். அவர்கள் மூலம் காரை இவர் அருகிலிருந்த கொச்சி இவிஎம் ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றார். இவிஎம் என்பது கேரளாவின் அங்கீகரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டீலர்.
இவரது காரை சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருக்கிறது. அதனால் தான் கார் ரிப்பேர் ஆகியுள்ளது என்று, இந்த காரை சரி செய்ய ரூ2.7 லட்சம் செலவாகும் என்று ஒரு எஸ்டிமேட்டை கிரணிடம் கொடுத்துள்ளனர். கிரண் தன் காருக்கு வாரண்டி இருப்பதாகவும் அந்த வாரண்டியின் கீழ் இந்த ரிப்பேரை செய்து கொடுக்கும்படியும் கோரியுள்ளார். ஆனால் இதற்கு இவிஎம் நிர்வாகம் மறுத்துவிட்டது.
கார் பழுதானது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்ததால் தான். இதற்கு டிரைவரின் கவனக்குறைவே காரணம் இதற்கு வாரண்டியை கிளைம் செய்ய முடியாது என கூறிவிட்டனர். ஆனால் கிரண் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. காருக்கு பெட்ரோல் போட்டு அதிக நேரம் பயன்படுத்தி பின்பே கார் நின்றது. காரின் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்தால் உடனடியாக கார் நின்றிருக்கும். கார் நின்றதற்கு இது உண்மையான காரணமாக இருக்க முடியாது. இதனால் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது கார் சர்வீஸ் சென்டரிலேயே நிறுத்தப்பட்டது.
இது குறித்து கிரண் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இ-மெயில் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2021 செப்டம்பர் 7ம் தேதி ஃபோக்ஸ்வேகன் சர்வீஸ் சென்டர் இவருக்கான எஸ்டிமேட் பில்லை மீண்டும் ரிவைஸ் செய்து ரூ1.2 லட்சம் செலவாகும் என இவரிடம் கொடுத்தது. ஆனால் அப்பொழுதும் வாரண்டியில் இதைச் சரி செய்ய முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் கிரணிற்கு இதை வாரண்டியலேயே செய்ய வேண்டும். இது வாரண்டிக்கு செய்யவேண்டிய விஷயம் தான் எனத் தோன்றியது.
இதையடுத்து கிரண் கடந்த 2021 செப்டம்பர் மாதம் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இந்த காரில் உள்ள பெட்ரோலை எடுத்து சோதனைக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கொச்சி அரசு சோதனை கூடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் இந்த பெட்ரோலில் தண்ணீர் எதுவும் கலக்கப்படவில்லை என முடிவுகள் வெளியானது. ஆனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த முடிவு வெளியான பின்பும் இந்த காரை வாரண்டியில் சரி செய்ய மறுத்துவிட்டது. கோர்ட்டில் இந்த பெட்ரோலை புனேவில் உள்ள சோதனை கூடத்தில் சோதனை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது. அரசு சோதனை கூடத்தில் செய்த சோதனையை ஏற்றுக்கொண்டு காரை வாரண்டியில் சர்வீஸ் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கார் 16 மாதங்களாக சர்வீஸ் சென்டரிலேயே தூசியடைந்து கிடைக்கிறது. மேலும் சர்வீஸ் சென்டரிலேயே கார் நிற்பதால் காரில் கோடு மற்றும் டென்ட்கள் விழுந்துவிட்டதாக கிரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி தேதி முதல் தனது 16 மாதங்களாக சர்வீஸ் சென்டரிலேயே நிற்பதை எதிர்த்தும், காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாரண்டியில் சர்வீஸ் செய்து கொடுப்பதை மறுப்பதை எதிர்த்தும் இவர் அந்த ஷோரூம் முன்பு பதாகையுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளார். இந்த செய்தியை ஏசியாநெட் மலையாளம் சேனல் வெளியிட்டுள்ளது.
இவர் போராட்டம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோர்டு நிறுவனம் மைலேஜ் குறித்த தவறாக விளம்பரம் செய்ததாக ஒருவர் தொடர்ந்த வழக்கில் அந்நிறுவனம் ரூ3 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Source: Asianet News


Click it and Unblock the Notifications