நம்ம தமிழ்நாட்டுக்கு இல்ல! கர்நாடகாவில் பல கோடி ரூபாய்களை கொட்டும் வால்வோ - வேலை வாய்ப்பு பெருகும்
வால்வோ குழுமம் (Volvo Group), பிரபலமான ஐரோப்பிய ஆட்டோமொபைல் குழுமம் ஆகும். குறிப்பாக, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக வால்வோ விளங்குகிறது. இந்தியாவில் ஈச்சர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் வால்வோ குழுமம், கர்நாடகாவில் புதியதாக வாகன உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதற்காக சுமார் ரூ.1,400 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதுகுறித்த விபரங்கள் வால்வோ குழுமத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த முன்னணி பேருந்து & லாரி உற்பத்தி நிறுவனமான வால்வோவுக்கு ஏற்கனவே கர்நாடகாவில் பெங்களூர் நகரத்திற்கு அருகே ஹோஸ்கோட் என்கிற பகுதியில் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதே பகுதியில் மேலும் புதியதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க வால்வோ திட்டமிட்டுள்ளது.

பின்னர், அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து ஒரே பிரம்மாண்ட தொழிற்சாலையாக திறக்க வால்வோ குழுமம் முடிவெடுத்துள்ளது. புதிய தொழிற்சாலைக்காக சுமார் ரூ.1,400 கோடி வால்வோ நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட உள்ளது. புதிய தொழிற்சாலையினால் புதியதாக 2 ஆயிரம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்புதல் பிப்ரவரி 13ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள் மற்றும் வால்வோ குழுமத்தின் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்றுள்ளது. மேலும், இந்த ஒப்புதல் கையெழுத்தின்போது மத்திய கனரக மற்றும் இலகுரக தொழில்துறை அமைச்சர் எம் பி பாடீலும் உடன் இருந்தார்.
வால்வோ நிறுவனம் சார்பில் வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமல் பாலி அங்கம் வகித்தார். பின்னர் இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, 25 வருடங்களுக்கு முன்னர் வால்வோ வந்தது; முதலீடு செய்தது மற்றும் மாற்றங்களை ஆரம்பித்து வைத்தது என்றார்.
பெங்களூருக்கு அருகே ஹோஸ்கோட்டில் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் தார்வாட் என்கிற பகுதியிலும் வால்வோ நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. ஹோஸ்கோட் தொழிற்சாலையில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 3 ஆயிரம் பேருந்துகள் மற்றும் லாரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹோஸ்கோட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம் வருடத்திற்கு சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் & லாரிகளை உற்பத்தி செய்ய முடியும் என வால்வோ திட்டங்களை வகுத்து வைத்துள்ளது.
வால்வோ நிறுவனத்திற்கு பெங்களூர் ஆனது சர்வதேச அளவில் 4வது பெரிய மற்றும் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. உற்பத்தி தொழிற்சாலை மட்டுமின்றி, பெங்களூரில் வால்வோ குழுமத்தின் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு 3,500க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். உலகளவில் வால்வோ குழுமத்தின் வருவாய் ஆனது வருடத்திற்கு சுமார் 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம் தான் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் மேலும் மேலும் முதலீடுகளை கொட்டுகிறது. முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுவதை போல கடந்த 25 வருடங்களில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு வால்வோ குழுமமும் ஒரு காரணம் ஆகும். தற்போது மேலும் ரூ.1,400 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதால், ஹோஸ்கோட் நகரத்தை சுற்றியுள்ள மக்களின் பொருளாதாரம் மேம்படும்.


Click it and Unblock the Notifications








