வால்வோ காருக்கு இதை விட பெரிய விளம்பரம் தேவையில்ல - சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போனவருக்கு இன்ப அதிர்ச்சி!!
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, வட இந்தியாவைவும், தலைநகர் டெல்லியையும் கனமழை வெளுத்து வாங்குகிறது. அந்த பகுதிகளில் தற்போதுதான் மெல்ல, மெல்ல நிலைமை சீராகி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் மழைக்காலம் துவங்கிவிட்டது. மலைப்பிரதேச நாடுகளில் மழையினால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு ஒரு நிலச்சரிவில் வால்வோ வி60 கார் ஒன்று சிக்கியுள்ளது. ஆனால், இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட பின்பும் அந்த வால்வோ கார் தொடர்ந்து இயங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான கார் பிராண்ட் என்றால், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களை சொல்லலாம். அதுவே, உலகளவில் என்று வரும்போது வால்வோ கார்கள் மிகவும் பாதுகாப்பானவைகளாக கருதப்படுகின்றன. இந்தியாவில் டாடா கார்களை போன்று, வெளிநாடுகளில் வால்வோ கார்கள் விபத்துகளில் இருந்து பயணிகளை காப்பாற்றி உள்ளன.

ஆனால், இங்கு மொத்தமாக வேறொரு சூழ்நிலையில் வால்வோ கார் ஒன்று தனது வலிமையான உடலமைப்பை நிரூபித்துள்ளது. மண் சரிவில் காரின் முன்பகுதி மட்டுமே மண்ணால் மூடியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மண் சரிவினால் சாலையின் பக்கவாட்டு கம்பிகள் வளைந்து கிடப்பதை காணலாம். அதாவது, அந்த அளவிற்கு கோரமாக இந்த மண்சரிவு நிகழ்ந்துள்ளது.
ஏனெனில், மண் மட்டுமின்றி பாறை கற்களும் சரிந்து விழுந்துள்ளன. அப்படியென்றால், இந்த சம்பவத்தில் வால்வோ வி60 கார் எந்த அளவிற்கு தாக்கத்தை சந்தித்துள்ளது என்பதை யோசித்து பாருங்கள். காரில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை வைத்து இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெறவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால், எந்த நாட்டில் நடந்துள்ளது என்பதை அறிய முடியவில்லை.

இந்த சம்பவம் நடைபெற்றுள்ள பகுதியை பார்த்தால், மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி போல் தெரியவில்லை. நெடுஞ்சாலை போன்று உள்ளது. இந்த வால்வோ வி60 கார் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டதும், டிரைவர் காரை அப்படியே விட்டு, விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில், இந்த வால்வோ காருடன் சேர்த்து வேறு சில கார்களும் நிலச்சரிவில் புதைந்தன. ஏற்கனவே கூறியதுபோல், இந்த வால்வோ வி60 காரின் முன்பகுதியை மட்டுமே மண் மூடியது. இதனால், காரின் முன்பகுதி மட்டுமே பலத்த சேதமடைந்துள்ளது. முன்பக்க பம்பர், ஹெட்லேம்ப் மற்றும் கிரில் உள்ளிட்டவை சேதாரத்தை சந்தித்துள்ளன. காரின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.

மற்றப்படி, காரின் பின்பகுதி பெரியதாக எந்த சேதாரமும் இன்றி நன்றாகவே உள்ளதை வீடியோவில் காணலாம். பின்பக்க கண்ணாடி, வைபர் கூட உடையவில்லை. இந்த வால்வோ காரின் சஸ்பென்ஷன் சேதமடைந்துள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில், காரின் முன்பக்கம் சக்கரங்களோடு அழுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்த அளவிற்கான சேதாரத்தை வேறெந்த காராவது சந்தித்து இருந்தால், காரை மொத்தமாக ஓரங்கட்ட வேண்டிய நிலைமை கூட ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், இந்த வால்வோ வி60 கார் ஆனது இவ்வளவு பெரிய மண்சரிவில் சிக்கிய பின்பும் தொடர்ந்து இயங்குகிறது. சர்வீஸ் செண்டருக்கு வெளியே இந்த வால்வோ காரை சிலர் ஓட்டி பார்ப்பதையும் வீடியோவில் காணலாம். காரை முன்னோக்கி மற்றும் ரிவர்ஸில் என இரு திசைகளிலும் ஓட்டி பார்த்துள்ளனர். இத்தனைக்கும் மண் மொத்தமாக காரின் என்ஜின் மீதுதான் சரிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோன்று, சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் கூட ஒரு விபத்தில் வால்வோ காருக்குள் இருந்தவர் எந்தவொரு காயமும் இன்றி வெளியே வந்தார். இந்த சம்பவங்களில் இருந்து வால்வோ காரின் வலிமையான உடலமைப்பை அறிய முடிகிறது. இதனால்தான், உலகளவில் வால்வோ கார்களுக்கு பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது போல...


Click it and Unblock the Notifications









