டோல்கேட் விஷயத்தில் உண்மையை பகிரங்கமாக ஒப்பு கொண்ட மத்திய அரசு... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க
டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு உண்மையை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளது.

இந்தியாவில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.

முதலில் டிசம்பர் 1 என நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு பின்னர் டிசம்பர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இறுதியாக இந்த காலக்கெடு கடந்த ஜனவரி 15ம் தேதி நிறைவடைந்தது. டோல்கேட்களில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது.

பாஸ்ட்டேக் என்பது (Radio-frequency Identification - RFID) ஸ்டிக்கர் ஆகும். இதனை வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டுவதுடன், அதற்கு முன்னதாகவே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தியாவில் எந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எந்த டோல்கேட்டிற்கு சென்றாலும், அங்குள்ள ரீடர்கள் இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும்.

இதன்பின் அதற்குரிய கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து கழித்து கொள்ளப்படும். எனவே கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சமாகும் என்பதுடன், வாகனங்களின் தடையற்ற இயக்கமும் உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது.

ஆனால் பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது முதலே அது தொடர்பாக ஒரு சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து கொண்டு வருவதாக புகார்கள் எழுந்தன. தற்போது அந்த புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பாராளுமன்றத்திலேயே இதனை ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் சிஸ்டத்திடம் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் உண்மையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த டோல் கலெக்ஸனில் பாஸ்ட்டேக்கின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கு மேலாக உள்ள நிலையிலும், வாகனங்கள் காத்திருக்கும் நேரம் இவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது இந்த உண்மையை பாராளுமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, இந்த உண்மையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புகொண்டார்.

இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட்களில் குறிப்பிட்ட லேன்களில் காத்திருக்கும் நேரம் உண்மையிலேயே அதிகரித்துள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். எனினும் பாஸ்ட்டேக் உடன் கூடிய கார்களின் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். ஆனால் ஹைப்ரிட் லேன்களில்தான் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது.

ஹைப்ரிட் லேன்களில் ரொக்கமாகவும் கட்டணம் செலுத்தலாம். மேலும் அங்கு பாஸ்ட்டேக்கும் ஏற்று கொள்ளப்படும். ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது முதலே காத்திருக்கும் நேரம் அதிகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை மத்திய அரசே பாராளுமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது.

மத்திய டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் சிஸ்டம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 6 மில்லியன் வாகனங்கள் டோல்கேட்களை கடக்கின்றன. அதாவது சுமார் 60 லட்சம் வாகனங்கள். எனவேதான் டோல்கேட்களில் நெரிசலையும், காத்திருக்கும் நேரத்தையும் குறைப்பதற்காக பாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








