ஆயிரக்கணக்கில் பணம் செலவழிச்சு விமானத்தில் செல்கிறோம்!! அங்கேயும் இப்படி நடந்தா எப்படி?
ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்றினுள் குழாயில் தண்ணீர் திறந்துவிட்டது போன்று, நீர் கேபினுக்குள் சொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த சமயத்தில், விமானத்தினுள் இருந்த பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
பேருந்துகளில், ஏன் இரயில்களில் மழைநீர் மேற்கூரையில் இருந்து சொட்டுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், அத்தனை அடி உயரத்தில் பறக்கும் விமானத்தினுள் இவ்வாறான பிரச்சனைகள் எழுவது அரிதான ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அந்த அரிதான நிகழ்வே ஏர் இந்தியா விமானத்தினுள் நிகழ்ந்து உள்ளது.

எந்த இரு பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், இந்தியாவில்தான் ஏதோ ஒரு பகுதியில் இவ்வாறு நடந்துள்ளது. இதுகுறித்து ஜாய்ஸ் என்பவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், விமானத்தினுள் பயணிகளின் தலைக்கு நேராக இருந்து நீர் கீழே சொட்டுவதை காணலாம்.
இதுகுறித்த ஜாய்ஸின் டுவிட்டர் பதிவில், "ஏர் இந்தியா... எங்களுடன் பறக்க - இது பயணம் கிடையாது... இது ஒரு ஆழமான அனுபவம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. 45 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், விமானத்தினுள் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதை காணலாம். சில பயணிகள் மட்டும் நீர் சொட்டுவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வீடியோவில், விமானத்தின் சில ஜன்னல்கள் திறந்து இருப்பதையும், அதன் வழியாக வரும் வெளிச்சத்தை வைத்து இந்த நிகழ்வு விமானத்தினுள் பகல்நேரத்தில் நடைபெற்று இருப்பதையும் அறிய முடிகிறது. மற்றப்படி, இந்த நீர் கசிவுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அந்த சமயத்தில், விமானத்திற்கு வெளியில் மழை பெய்துக் கொண்டிருந்ததா என்பதும் தெரியவில்லை.
ஏசிக்கு செல்லும் குழாயில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதால் கூட இவ்வாறு நடந்திருக்கலாம். இந்த சம்பவம் நடைபெற்றது கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஆகும். இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள டுவிட்டர் வீடியோவை இதுவரையில் மட்டும் 5000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். நல்லவேளையாக, நீர் யாரின் மீதும் விழவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், நிச்சயமாக விமானத்தினுள் பயணிகள் நிறைய பேர் சத்தம் போட ஆரம்பித்து இருப்பார்கள்.

அதேபோல், இந்த வீடியோவில் பயணிகளை தவிர்த்து, விமான கேபின் பணியாளர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. அதன்பின் இந்த பிரச்சனை சரிச்செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த சம்பவத்தால் பலருக்கு ஏர் இந்தியா மீது மதிப்பு குறைந்துள்ளது. ஆதலால், இதற்கு ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் தனது பதிலை அறிக்கையாக வெளியிடும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் இவ்வாறான சிறு, சிறு பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இத்தகைய பிரச்சனைகள் பயணிகளை பாதிக்காத வண்ணம் உடனடியாக சரிச்செய்து விடுவர். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் நிகழ்ந்துள்ள இந்த பிரச்சனை ஆனது இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது நீண்ட நேரமாக நிகழ்ந்துக் கொண்டு இருந்ததுபோல் தெரிகிறது. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








