எங்களை மன்னிச்சுக்கோங்க!! ஏர் இந்தியா காலில் விழாத குறையா கெஞ்சுது - எல்லாம் இண்டர்நெட்டின் பவர்!
ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று நடு வானில் பறந்துக் கொண்டிருந்த போது அதனுள் நீர் சொட்டு, சொட்டாக கீழே விழும் வீடியோவை சமீபத்தில் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது பதிலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அளவில் பெரியதாக இருப்பதினாலேயே விமானங்களில் அவ்வப்போது சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. விமானத்தை ரன்வேயில் இருந்து ஸ்டார்ட் செய்வதற்கு முன்னரே, அத்தகைய பழுதுகள் ஏதேனும் உள்ளனவா என்பது ஒருமுறைக்கு பலமுறை சோதிக்கப்படும். இருப்பினும், அதனையும் தாண்டி சில சமயங்களில் பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

அவ்வாறுதான், கடந்த நவம்பர் 24ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்றில், நடு வானில் பறந்துக் கொண்டிருந்த போது மேற்கூரையில் இருந்து நீர் சொட்டு, சொட்டாக, அமர்ந்திருந்த பயணிகளுக்கு மத்தியில் விழ ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட பயணி ஒருவர் தனது மொபைல் போனில் அதனை காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது வைரலாகியது.
பலரும் அந்த வீடியோவிற்கு தங்களது ஆதங்கங்களை கமெண்ட்களாக தெரிவித்தது மட்டுமின்றி, வீடியோவையும் பகிர ஆரம்பித்தனர். இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது, "2023 நவம்பர் 24, அன்று கேட்விக் முதல் அமிர்தசரஸ் வரை இயக்கப்பட்ட விமானம் ஏஐ169, கேபினுக்குள் ஓர் அரிதான நிகழ்வை உருவாக்கியது.

பாதிக்கப்பட்ட வரிசைகளில் அமர்ந்திருந்த எங்கள் விருந்தினர்களில் சிலர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உடனடியாக மற்ற காலி இருக்கைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். விருந்தினர்களுக்கு வசதியாக இருக்க கேபின் குழுவினர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். விமானத்தில் இருக்கும் விருந்தினர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஏர் இந்தியா உறுதிக் கொண்டுள்ளது. இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்பதாகும்.
ஏர் இந்தியா ஏர்லைனின் இந்த அறிக்கையில் சம்பவம் நடைபெற்றது நவம்பர் 24 என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது நவம்பர் 29 ஆகும். இடையில் எதற்கு 5 நாட்கள் இடைவெளி என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த நீர் கசிவிற்கான காரணம் என்ன என்பதும் நமக்கு உறுதியாக தெரியவில்லை.

அந்த சமயத்தில் அந்த பகுதியில் மழை பெய்துக் கொண்டு இருந்ததா அல்லது ஏசி நீர் குழாய் போன்றவற்றினால் இந்த நீர் கசிவு ஏற்பட்டதா என்பதும் தெரியவில்லை. இதனை ஏர் இந்தியா நிறுவனமும் உறுதிப்படுத்தவில்லை. விமானத்தினுள் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருப்பினும், கசிந்த நீர் யார் மீதும் விழவில்லை.
இருக்கைககளுக்கு நடுவே வழங்கப்படும் நடைபாதையில் நீர் விழுந்தது. இதனாலேயே பயணிகளுக்கு பெரியதாக எந்தவொரு அசவுகரியமும் ஏற்படவில்லை. பேருந்துகளில் மற்றும் இரயில்களில்தான் இவ்வாறான நிகழ்வு நடைபெற்றுவந்த நிலையில், தற்போது விமானங்களிலும் இவ்வாறு பயணத்திற்கு இடையே மேற்கூரையில் இருந்து நீர் கசியும் நிகழ்வுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் விமானங்களில் இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி இல்லை என்றாலும், சில சமயங்களில் நடப்பது உண்டு. இருப்பினும், இந்த நிகழ்வில் ஏர் இந்தியா ஏர்லைன் நிறுவனம் அறிக்கை வெளியிடும் அளவிற்கு சென்றிருப்பதற்கு காரணம், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானதே ஆகும்.


Click it and Unblock the Notifications









