சிறிய துணிக்கடையாக ஆரம்பித்த பிஸ்னஸ்... பென்ஸ் காரை குடும்பத்துடன் டெலிவிரி எடுத்து கொண்டாட்டம்!!
கடின உழைப்பை போட்டால், எவரொருவரும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு பல தொழிலதிபர்கள் முன் உதாரணமாக திகழ்கின்றனர். அந்த வகையில், கேரளாவில் சிறு துணிக்கடையை ஆரம்பித்தவர் தற்போது பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். குடும்பத்துடன் அவர் தனது புதிய பென்ஸ் காரை டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. யார் அந்த துணிக்கடை உரிமையாளர் என்பதையும், அவர் வாங்கியுள்ள புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் எளிதாக ஆயிரத்திற்கும் அதிகமான பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சில பென்ஸ் கார்கள் 50 லட்ச ரூபாயில் கூட கிடைப்பதால், அப்பர்-மிடில்-கிளாஸ் மக்களும் பலர் பென்ஸ் கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் துணிக்கடை வைத்து நடத்திவரும் நவுசாத் முகமது கோயா தனது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ (GLE) காரை டெலிவிரி எடுத்துள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் செயல்படும் மிக பெரும் மகளிருக்கான துணிக்கடை, லேடீஸ் பிளானட் (Ladies Planet) ஆகும். பெண்களுக்கான விலையுயர்ந்த ஆடைகளை விற்பனை செய்வதில் பிரபலமான கடையாக லேடீஸ் பிளானட் விளங்குகிறது.
துணிகளை விற்பனை செய்வது மட்டுமின்றி, அவற்றை வாடகைக்கு கொடுப்பதையும் லேடீஸ் பிளானட் நிறுவனம் மேற்கொள்கிறது. இதனால், சில நாட்கள் மட்டுமே நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவதை காட்டிலும், வாடகைக்கு எடுப்பது இலாபகரமான முடிவாக இருப்பதால் மலப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பெண்கள் பலரும் லேடீஸ் பிளானட்டை தேடி செல்கின்றனர்.

ஆடைகள் மட்டுமில்லாமல், ஆபரணங்களையும் வாடகை தரும் வேலையையும் லேடீஸ் பிளானட் பார்க்கிறது. இதனால், பல திரைப்பட பிரபலங்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட் உள்ளிட்டோர் லேடீஸ் பிளானட் நிறுவனத்தின் கஸ்டமர்களாக உள்ளனர். இதன்மூலம் கிடைத்த வருவாயில் லேடீஸ் பிளாண்ட் கடையை தலைமை தாங்கி நடத்தும் நவுசாத் முகமது கோயா அவர்கள் புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரை வாங்கியுள்ளார்.
லேடீஸ் பிளாண்ட் கடையில் டிசைனராக பணியாற்றுவதுடன், கடையின் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்துவரும் நவுசாத் முகமது கோயா ஓர் அனுபவம் வாய்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இத்தகையவர் புதியதாக ஜிஎல்இ காரை குடும்பத்துடன் டெலிவிரி பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் இன்ஸ்டாகிராமில் வீடியோ உடன் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் பலரது விருப்பமான காராக விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.97 லட்சத்தில் இருந்து ரூ.1.15 கோடி வரையில் உள்ளன. நவுசாத் அவர்கள் ஜிஎல்இ காரை அப்சிடியன் மெட்டாலிக் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். ஆனால், எந்த என்ஜின் உடன் இந்த பென்ஸ் காரை நவுசாத் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.
ஏனெனில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கார் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மட்டும் இரு விதமாக வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பென்ஸ் காரில் 4மேட்டிக் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டவை ஜிஎல்இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும். ரூ.1 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட பென்ஸ் காரை துணிக்கடை நடத்திவரும் ஒருவர் வாங்குகிறார் என்றால் உண்மையில் பெரிய விஷயமே. இது, நவுசாத் முகமது கோயா அவர்களின் கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









