ரோட்ல கார் மாதிரி ஓடி வந்த கட்டில்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணத்தை கேட்டதும் ஷாக் ஆன பொதுமக்கள்...
இந்தியா ஒரு வித்தியாசமான நாடு. இங்கே புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியர்கள் உருவாக்கிய ஒரு சில தயாரிப்புகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அதே சமயம் வேறு சில தயாரிப்புகள் நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்த வரிசையில் நம்மை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஒரு சேர ஆழ்த்தும் புதுமையான தயாரிப்பு ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வித்தியாசமான தயாரிப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், கட்டில் ஒன்று கார் (Car) போல சாலையில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த கட்டிலின் மீது மெத்தை, தலையணை போன்றவை எல்லாம் உள்ளன.

அத்துடன் இளைஞர் ஒருவர் அந்த கட்டிலின் மீது அமர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்தால், கட்டில் எப்படி சாலையில் கார் போல ஓடுகிறது? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். ஆனால் வீடியோவை நன்றாக உற்று நோக்கினால், கட்டிலின் மீது அமர்ந்துள்ள இளைஞர், அதை இயக்கி கொண்டிருப்பதை காணலாம்.
அந்த இளைஞரின் பெயர் நபாப் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரது மாத சம்பளம் வெறும் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே என கூறப்படுகிறது.

இருப்பினும் சமூக வலை தளங்களில் வைரல் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்குள் இருந்து வந்துள்ளது. இந்த ஆசையின் காரணமாக உருவானதுதான் இந்த கட்டில் கார். இந்த கட்டில் காரை உருவாக்க நபாப் சுமார் ஒன்றரை வருடங்களை செலவிட்டுள்ளார். அத்துடன் 2 லட்ச ரூபாய் பணத்தையும் அவர் செலவு செய்துள்ளார்.
கைவசம் சேமிப்பு எதுவும் இல்லாத சூழலில், மனைவியின் நகைகளை அடமானம் வைத்து, இந்த 2 லட்ச ரூபாய் பணத்தை அவர் ஏற்பாடு செய்துள்ளார். கட்டிலுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அது கார் போல மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வைரல் வீடியோவில், கட்டில் காரை கட்டுப்படுத்தும் ஸ்டியரிங் வீலையும் நம்மால் காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நபாப் ஆசைப்பட்டதை போலவே, அவர் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி விட்டார். லட்சியத்தை அடைய வேண்டும் என்ற அவரது முயற்சி நிச்சயமாக பாராட்டுக்குரியது. அத்துடன் அவரது திறமையையும் நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால் அவர் உருவாக்கியுள்ள கட்டில் கார் பாதுகாப்பானதா? என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் பதில் சொல்லியாக வேண்டும்.
இந்தியா ஏற்கனவே சாலை விபத்துக்களால் (Road Accidents) ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான உயிர்களை பறி கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டின் சாலைகளில், இது போன்ற அபாயகரமான தயாரிப்புகளை கொண்டு வருவது நல்லதல்ல. எனவே நபாப் தனது திறமையின் மூலம் பாதுகாப்பான தயாரிப்புகளை உருவாக்க முயற்சி செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








