லோனில் வண்டி வாங்கியவர்கள் லோனை கட்டி முடித்ததும் இதை ரிமூவ் செய்ய மறந்துவிடுவார்கள்! இதனால் பிரச்சனை வருமா?

இன்று கார்/பைக் வாங்கும் பலர் அதை வாகன லோன் மூலமே அதிகம் வாங்குகின்றனர். இப்படியாக வாகன லோன் மூலம் கார் பைக்கை வாங்குபவர்கள் அந்த லோன் முடிந்ததும் முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்ய மறந்து விடுகின்றனர். பலருக்கு இதைச் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லை. அது என்ன விஷயம்? அதை ஏன் செய்ய வேண்டும்? அதைச் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? முழு விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இன்று நம்மில் பலர் கார்/ பைக்கை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலும் நாம் லோன் மூலம் தான் இந்த கார் பைக்கை வாங்கியிருப்போம். நாம் கையிலிருந்து குறிப்பிட்ட தொகையை முன்பணமாகக் கொடுத்து மீத தொகைக்காக வங்கி அல்லது ஃபைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து லோன் வாங்கியிருப்போம் கார்/ பைக் நிறுவனத்திற்குக் குறிப்பிட்ட வங்கி/ தனியார் ஃபைனான்ஸ் நிறுவனம் அந்த தொகையைச் செலுத்திவிடும். அவர்கள் செலுத்திய தொகையை நாம் மாத மாதம் வட்டியுடன் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டும்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இப்படியாக நாம் பணம் முழுவதையும் செலுத்திவிட்டால் வாகனம் நமக்குச் சொந்தமாகிவிடும் என நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வெறும் பணம் செலுத்தினால் மட்டும் போதாது. குறிப்பிட்ட வாகனத்திலிருந்து ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு இருக்கும் உரிமையையும் நீக்க வேண்டும். இதை வாகன உரிமையாளர்கள் தான் செய்து கொள்ள வேண்டும். இந்த தகவல் பலருக்குத் தெரியாது முழு பணத்தையும் செலுத்திய பின்பு வேறு அதையும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவார்கள். இதனால் பின் நாட்களில் பிரச்சனை ஏற்படும்.

நாம் லோன் மூலம் புதிதாக வாகனத்தை வாங்கும் போது அந்த வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யும் போதே அதை நாம் எந்த நிறுவனத்திடம் லோன் வாங்கி வாங்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அதை நீங்கள் உங்கள் ஆர்சியில் ஃபைனான்ஸ்டு பை என ஆங்கில எழுத்தில் எழுதப்பட்டு அதன் பின்னர் நீங்கள் லோன் வாங்கிய நிறுவனத்தின் பெயர் இருக்கும். அப்படி என்றால் இந்த வாகனத்திற்கு நீங்கள் உரிமையாளர் தான் என்றாலும், இந்த வாகனம் உங்களுக்கு ஃபைனான்ஸ் வழங்கிய நிறுவனத்திற்கும் பாத்தியப்பட்டது எனப் பொருள்.இதை ஆங்கிலத்தில் hypothecation எனக் குறிப்பிடுவார்கள்.

அதனால் வாகன கடனை முழுவதுமாக நீங்கள் திரும்ப அடைத்ததும், உங்கள் ஆர்சியிலிருந்து ஃபைனான்ஸ் பெயரை முற்றிலுமாக நீக்க வேண்டும். அது வாகன உரிமையாளரான உங்களின் கடமை தான். இதைக் குறிப்பிட்ட பைனான்ஸ் நிறுவனமோ அல்லது உங்களுக்கு வாகனத்தை விற்பனை செய்த நிறுவனமோ செய்யாது. சரி இனி இப்படியாக உங்கள் ஆர்சியில் உள்ள இந்த hypothecation-ஐ எப்படி அகற்றுவது எனக் காணலாம் வாருங்கள்.

பெரும்பாலும் ஆர்டிஓ சம்மந்தப்பட்ட விஷயங்களுக்குள் எல்லாம் பலர் புரோக்கர் அல்லது மிடில் மேன்களை கொண்டு செய்கிறார்கள். ஆனால் இது ஒரு சுலபமாக முறை தான் இதைச் செய்ய நீங்கள் 3ம் நபரை எல்லாம் அணுக வேண்டியதில்லை, நீங்களே ஆர்டிஓ அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பம் செய்யலாம். இதற்கு உங்களிடம் இரண்டு ஆவணங்கள் வேண்டும். ஒன்று நீங்கள் ஃபைனான்ஸ் செய்த நிறுவனத்திடமிருந்து தடையில்லை சான்று (No Objection Certificate), இரண்டாவது இரண்டு ஃபார்ம் 35.

இந்த இரண்டு விஷயத்தையும் நீங்கள் ஃபைனான்ஸ் வாங்கிய வங்கி அல்லது தனியார் ஃபைனான்ஸ் நிறுவனங்களே வழங்குவார்கள். இதை அவர்கள் நீங்கள் முழுவதுமாக பணத்தைச் செலுத்திய தேதியிலிருந்து 2-3 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு நீங்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவகலத்திற்கு செல்லவேண்டும். இந்த hypothecation-ஐ நீக்க நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்களிடம் வங்கியில் வழங்கப்பட்ட ஃபார்ம் 35, அட்டெஸ்ட் செய்யப்பட்ட பான் கார்டு நகல், வங்கி வழங்கிய தடையில்லா சான்று, ஒரிஜினல் ஆர்சி, உங்கள் வாகனத்திற்கான தற்போது நடப்பில் உள்ள இன்சூரன்ஸ் காப்பி, நடப்பில் உள்ள புகை சான்று, இது போக அட்டெஸ்ட் செய்யப்பட்ட உங்கள் இருப்பிட சான்று, ஒருவேலை உங்கள் இருப்பிடம் ஆர்சியில் உள்ள இருப்பிடத்திற்கு மாறாக இருந்தால் அதற்காக ஃபார்ம் 33 ஆகியவை வேண்டும்.

இதற்காக ஆர்டிஓ அலுவலகத்தில் இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சென்று இதற்கான விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் உங்கள் ஆவணங்களை எல்லாம் சோதனை செய்வார் அவர் சோதித்து எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரிவித்தால் அவர் ஆர்டிஓ கவுண்டரில் இதற்கான கட்டணத்தைச் செலுத்தச் சொல்லுவார். இதற்கா கட்டணம் மிகக் குறைவு தான். இதைக் கட்டிய பின்பு மீண்டும் உங்களுக்கு ஆர்டிஓ அதிகாரி ஒரு தேதியை குறிப்பிடுவார்.

அந்த தேதியில் நீங்கள் சென்றால் அதற்குள் அந்த அதிகாரி உங்கள் ஆவணம் குறித்து எல்லா விசாரணைகளையும் முடித்து அவர் உங்கள் விண்ணப்பத்தை ஏற்பதாக ஒரு சான்று கொடுப்பார். அதை மற்றொரு கவுண்டரில் கொடுத்து உங்களுக்கான புதிய ஆர்சி வேண்டும் என கோர வேண்டும். புதிய ஆர்சிக்கான கட்டணத்தையும் நீங்கள் செலுத்தவேண்டும். அதன்பின்பு புதிய ஆர்சி வரும தேதி உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அன்று வந்து உங்கள் ஆர்சியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது தான் ஆஃப் லைனில் இதைச் செய்யும் முறை.

இதை ஆன்லைனிலும் நீங்கள் செய்ய முடியும். இதற்காக நீங்கள் பரிவாகன் தளத்திற்குச் சென்று அங்கு Vehicle-Related Services என்ற மெஷவிற்குள் Online Services என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்கள் மாநிலம் மற்றும் ஆர்டிஓ அலுவலகம் குறித்த தகவலைக் குறிப்பிட வேண்டும். அதில் நீங்கள் வானகத்தின் பதிவு எண் மற்றும் சேஸிஸ் எண் ஆகியவற்றை வைத்து இந்த முறைக்கான முதற்கட்ட பதிவுகளைச் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த முடிக்க நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் செல்லவேண்டும்.

சரி இப்பொழுது பலருக்கு தோன்றலாம் இதைச் செய்யாவிட்டால் தான் என்ன? வங்கியும் என் வாகனத்திற்கு உரிமை கொண்டாடப் போவதில்லை. வாகனமும் என்னிடம் தான் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் வாகனத்தின் ஆர்சியில் இந்த hypothecation-ஐ நீக்குவது மிகவும் முக்கியமான ஒன்று இதை நீங்கள் நீக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாகனத்தை மற்றவருக்கு விற்பனை செய்ய வேண்டும் என நினைத்தால் அதை வாங்குபவர் பெயருக்கு ஆர்சியை மாற்ற முடியாது.

இதையெல்லாம் தாண்டி மற்றொரு விஷயம் இருக்கிறது. இப்படியாக நீங்கள் மாற்றாமல் வைத்திருந்தால் உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி அதற்காக இன்சூரன்ஸ் கிளைம் நீங்கள் செய்தால் அந்த இன்சூரனஜ்ஸ் பணம் உங்களுக்கு வராது மாறாக நீங்கள் ஃபைனான்ஸ் செய்த நிறுவனத்திற்குச் சென்றுவிடும். இப்படியாக இந்த hypothecation-ஐ நீக்காமல் வைத்திருப்பது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். நீங்கள் லோன் வாங்கி கார் பைக் வாங்கி லோன் முழுவதையும் திரும்ப அடைத்திருந்தால் உடனடியாக உங்கள் ஆர்சியில் உள்ள hypothecation-ஐ நீக்கும் முயற்சியில் இன்றே இறங்குங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What is Hypothecation how to remove from your rc
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X