கவச் சிஸ்டம் இருந்திருந்தா ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்குமா? கவச் என்றால் என்ன? இதோ முழு விபரம்!
உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட ஓர் அம்சமே கவச் (Kavach) சிஸ்டம். இந்த சிஸ்டத்தைப் பயன்படுத்தி இருந்தால் இந்தியாவையே உலுக்கி இருக்கும் ஒடிசா ரயில் விபத்து நேற்று அரங்கேறி இருக்காது என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. இதற்கான சாத்தியக் கூறுகளையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகமடையச் செய்திருக்கின்றது ஒடிசா ரயில் விபத்து சம்பவம். சுனாமிக்கு பின்னர் இந்தியாவில் அரங்கேறிய மிகப் பெரிய பேரழிவாக இது பார்க்கப்படுகின்றது. இந்த நிலைியிலேயே உள் நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட கவச் கருவியை, விபத்து நடைபெற்றிருக்கும் பாதையில் பயன்படுத்தி இருந்தால் இந்த மாபெரும் விபத்தைத் தவிர்க்கலாம் என பரவலாக பேசப்படுகின்றது.

இவ்வளவு பெரிய விபத்தை இந்த கருவி தவிர்த்திருக்குமா? அப்படி என்ன கருவி அது? அப்படினு தானே கேக்குறீங்க, இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. ஆட்டோமேட்டிக் டிரெயின் புரொடக்சன் (Automatic Train Protection) இதையே கவச் என அழைக்கின்றோம்.
கவச் என்பதற்கு கவசம் என்பதே பொருள் ஆகும். இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும் வழித் தடத்தில் (ரயில்களில்) விபத்து என்பதே அரங்கேறாது என ரயில்வேஸ் தெரிவிக்கின்றது. ஏனெனில் இந்த கருவி ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக, ஒரே ரயில் தடத்தில் நேருக்கு நேராக ரயில்கள் வந்துக் கொண்டிருக்கும் எனில் இந்த கருவி முதலில் லோகோ பைலட்டுகளுக்கு எச்சரிக்கை வழங்கும்.

எச்சரிக்கையைக் கண்டு பைலட்டுகள் ரயிலை நிறுத்தவில்லை என்றாலும், அந்த கருவி தானாக ரயில்களை நிறுத்திவிடும். இரு ரயில்களும் மோதுவதற்கு முன்னரே, அதாவது, 400 மீட்டர் இடைவெளிக்கு முன்னரே ரயில்களை அது நிற்க செய்துவிடும். ஆகையால், இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும் வழி தடத்தில் விபத்து என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது.
இதன் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் விதமாகவே அண்மையில் இந்த கருவியை இந்தியன் ரயில்வேஸ் சோதனை செய்தது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வைத்தை சோதனைச் செய்யப்பட்டது. இந்த சோதனையில் ரயில்கள் எதிர் எதிர் திசையில் இயக்கப்பட்டன. இதில் இரண்டு ரயில்களும் சுமார் 400 மீட்டர் இடைவெளியில் தானாக பைலட் தலையீடு இல்லாமலே நின்றன.

பைலட்டுகளின் தலையீடே இல்லாமல் ரயில்கள் நின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரயில்களில் ஒன்றில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய கருவியையே நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடத்தில் நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை எழும்பி இருக்கின்றது.
இந்த கருவி பொருத்தப்பட்டு இருந்தால் நிச்சயம் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என கூறி விட முடியாது. ஏனெனில், கவச் சிஸ்டம் ரயில்கள் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் என்றால் மட்டுமே அது வேலை செய்யும். ஆனால், இந்த விபத்து நிகழ்வில் தடம் புரண்ட ரயில்களால் மட்டுமே விபத்து அரங்கேறி இருக்கின்றது.

ஆகையால், இந்த விபத்தை கவச் அம்சம் தவிர்த்திருக்குமா என்பதே கேள்விக் குறியாக இருக்கின்றது. அதேவேளையில், இந்த கவச் கருவி அதிக பனிமூட்டமான சூழ்நிலையிலும் அதிக வேகத்தில் பயணிக்க உதவும் வகையில் வடிவமைத்திருக்கின்றனர். தானாகவே விசில் அடித்தல், லோகோ-டூ-லோகோ தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றையும் இது வழங்கும்.
இதேபோல், அவசர கால சூழ்நிலைகளில் ரயில்களையும் அது கட்டுப்படுத்தும் இத்தகைய அம்சமாகவே கவச் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தை ஒரு கிமீட்டருக்கு பொருத்த ரூ. 20 லட்சமும், ஒரு எஞ்ஜினிற்கு மட்டும் பொருத்த ரூ. 60 லட்சமும் செலவாகும் என கூறப்படுகின்றது. இது இருப்பதிலேயே மிக மிக குறைவான செலவாகும்.
வெளிநாடுகளிலும் இதுமாதிரியான கருவி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அது இதைவிட அதிக செலவீணத்தை வழங்கக் கூடியதாக இருப்பதாக இருக்கின்றது. ஆகையால், உள் நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட இந்த கருவியை வெளி நாடுகளிலும் பயன்படுத்தத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஒவ்வொரு கட்டமாக நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களில் கவச் கருவி பொருத்தப்பட்டு வருகின்றது.
முதல் கட்டமாக தெற்கு மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள 1,445 கிமீ ரயில்வே பாதையிலும், 65 எஞ்ஜின்களிலும் கவச் பொருத்தப்பட்டன. இரண்டாவது கட்டமாக டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா ஆகிய ரயில் பாதைகளை இணைக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர நாடு முழுவதும் உள்ள இருப்புப்பாதை வழித் தடங்களில் கவச்சை பொருத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ஒடிசா ரயில் விபத்தில் 280க்கும் அதிகமான உயிர்கள் பலியாக இருக்கின்றன. மேலும் 900 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், ரயில் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications









