இஷ்டத்துக்கு எழுதுனா அபராதமும் இஷ்டத்துக்குப் போட்டுவாங்க! வாகன நம்பர் பிளேட் என்ன சைஸ்ல இருக்கனும்னு தெரியுமா
வாகனம் ஓட்டும் பலருக்கு வாகனத்தின் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. பலர் அவர்கள் இஷ்டத்திற்கு நம்பர்பிளேட்டை டிசைன் டிசைனாக பயன்படுத்தி வருகின்றனர். நம்பர்பிளேட் குறித்த விபரங்களைத் தான் இங்கே காணப்போகிறோம்.
இந்தியாவில் வாகனங்களின் பயன்பாட்டைப் பொருத்து அதற்கு நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு வெள்ளை நிற பேக்ரவுண்டில் கருப்பு நிற எழுத்துக்களில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும் கமர்ஷியல் வாகனங்களில் மஞ்சள் நிற பேக்வுண்டில் கருப்பு நிற எழுத்துக்கள் இருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் கருப்பு நிற பேக்கிரவுண்டில் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.

தற்போது பசுமை வாகனங்களுக்குப் பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பச்சை நிறத்தில் வெள்ளை நிற எழுத்துக்கள் இருந்தால் சொந்த பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனம் என்றும், பச்சை நிற பிளேட்டில் மஞ்சள் நிற எழுத்துக்கள் இருந்தால் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகனம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இது மட்டுமல்ல ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதற்குப் போக்குவரத்துத் துறை விதிமுறைகளை வகுத்துள்ளது. பலர் சிறியதாகவும், சிலர் மிகப் பெரியதாகவும் டிசைன் செய்து வேறு வேறு வடிவில் கூட டிசைன் செய்கின்றனர். இது முற்றிலும் தவறு, அரசு அறிவுரைப் படி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 200X100MM இலகு ரக வாகனங்கள், பயணிகள் வாகனங்களுக்கு 320X200MM அல்லது 500X120MM மத்திய மற்றும் ஹெவி வாகனங்களுக்கு 320X200MM அளவில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல நம்பர் பிளேட்டில் உள்ள எழுத்துக்களின் அளவுகளுக்கும் விதிமுறை இருக்கிறது. இந்த குறிப்பிட்ட அளவில் நிச்சியம் ஒவ்வொரு எழுத்துக்களும் இடம் பெற வேண்டும் என அரசு விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதன்படி எழுத்துக்கள் எவ்வளவு உயரம், அகலத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு எழுத்திற்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என விதிமுறைகளை வகுத்துள்ளது.
70 சிசிக்கும் குறைவான பைக்குகளின் நம்பர் பிளேட்டில் உள்ள நம்பர் முன்பக்கத்தில் உயரம் 15 மிமீ, அகலம் 2.5 மிமீ, இடைவெளி 2.5 மிமீ இருக்க வேண்டும். 500சிசிக்கு அதிகமான 3 வீலர்களில் முன்-பின்பக்கத்தில் உரம் 40 மிமீ, அகலம் 7மிமீ, இடைவெளி 5 மிமீ, இருக்க வேண்டும். 500 சிசிக்கு குறைவான இன்ஜின் கொண்ட 3 வீலர்களில் உயரம் 35 மிமீ, அகலம் 7 மிமீ, இடைவெளி 5 மிமீ இருக்க வேண்டும்.

இன்வேலிட் கேரேஜ் கொண்ட 3 வீலர்கள் மற்றும் பைக்குகளின் நம்பர் பிளேட்டில் முன்பக்கம் உயரம் 30 மீமீ,அகலம் 5 மிமீ, இடைவெளி 5 மிமீ, பின்பக்கம் உயரம் 40 மிமீ, அகலம் 07 மிமீ, இடைவெளி 5 மிமீ, மற்ற அனைத்து வாகனங்களுக்கும் உயரம் 65 மிமீ, அகலம் 10 மிமீ, இடைவெளி 10 மிமீ என வழங்கப்பட்டுள்ளது.
இந்த அளவுகளில் நம்பர் பிளேட் இல்லை என்றால் அந்த வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்க மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இருக்கிறது. இது மட்டமல்ல நம்பர் பிளேட்களில் வாகனங்களின் நம்பரைத் தவிர வேறு வாசகங்கள் எதுவும் இருக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் இந்த விதிமுறையைப் பின்பற்றுவது கிடையாது. மாறாக அதில் கடவுளின் பெயர்கள், அவர்களின் பெயர்கள், நடிகர் நடிகைகளை குறிக்கும் வாசங்கள், ஜாதி பெயர்கள் எனப் பல விதமான வாசங்களை எழுதி வருகின்றனர். இது முற்றிலும் சட்ட விரோதமானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டத்தில் சிறப்பான நன்கு யோசித்து வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இருக்கிறது. ஆனால் அதை நடைமுறையில் கொண்டு வருவதில் பல பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள இது போன்ற சட்டங்களை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications
