விமானத்தின் இன்ஜினில் சுருள் மாதிரி இருக்கும்... இந்த சின்ன பெயிண்டிங் இல்லேனா அவ்ளோதான்... கதையே முடிஞ்சிரும்
விமானத்தின் இன்ஜினில் ஏன் சுருள் போன்று வரையப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் நிச்சயமாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்த வகையில் அழகிற்காக மட்டுமே இருக்கிறது என்று பலரும் தவறாக நினைத்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். விமான இன்ஜினின் மைய பகுதியில், சுருள் (Spiral) போன்று வரையப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

விமானங்களில் அடிக்கடி பயணம் செய்ய கூடிய பலர் இதனை கவனித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அழகிற்காக மட்டுமே இதனை வரைந்துள்ளதாக பலரும் தவறாக நினைத்து கொண்டுள்ளனர். இது உண்மையிலேயே பார்ப்பதற்கு அழகாக தெரியும்தான். ஆனால் அழகு என்பதையும் தாண்டி, இதற்கு பின்னால் மற்றொரு முக்கியமான காரணம் உள்ளது.

விமானம் தரையில் நிற்கும்போது, அதனை சுற்றி ஊழியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த சுருள் போன்ற ஓவியம், விமான இன்ஜின்களின் மைய பகுதியில் வரையப்படுகிறது. இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஊழியர்கள் யாரும் அருகில் வராமல் இருப்பதை இந்த சுருள் உறுதி செய்கிறது.

இன்ஜின் 'ஆன்' ஆகி இருக்கும் நேரத்தில், அதன் அருகே வேலை செய்வது மிகவும் அபாயகரமானது. எனவே இன்ஜின் 'ஆன்' ஆகி உள்ளதா? அல்லது 'ஆஃப்' ஆகி உள்ளதா? என்பது ஊழியர்களுக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும். சரி, இந்த சுருள் மூலம் ஊழியர்கள் அதனை எப்படி தெரிந்து கொள்கிறார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

இன்ஜின் 'ஆஃப்' ஆகி இருந்தால், மைய பகுதியில் இந்த சுருளை மிகவும் தெளிவாக காண முடியும். ஆனால் இன்ஜின் இயங்கி கொண்டிருக்கிறது என்றால், அதாவது 'ஆன்' ஆகி இருந்தால், இந்த சுழல் தெளிவாக தெரியாது. பெரும்பாலான விமானங்களின் இன்ஜினில், வெள்ளை நிறத்தில்தான் இந்த சுருள் வரையப்பட்டிருக்கும்.

எனவே இன்ஜின் இயங்கி கொண்டிருக்கும்போது, மங்கலான வெள்ளை நிறம் அல்லது 'ஹிப்னாடிசிங் சுழல்' (Hypnotizing Swirl) தெரியும். இது எப்படி தெரியும் என்பது, இன்ஜினின் சுழற்சி வேகத்தை பொறுத்து மாறுபடும். எனவே சுருள் எப்படி தெரிகிறது? என்பதை பொறுத்து, இன்ஜின் இயங்கி கொண்டிருக்கிறதா? அல்லது 'ஆஃப்' செய்யப்பட்டுள்ளதா? என்பதை, ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

விமானத்தை பற்றி நன்றாக தெரிந்தவர்களுக்கு இங்கே ஒரு சந்தேகம் வரலாம். விமானங்களின் இன்ஜின்கள் 'ஆன்' செய்யப்பட்டிருக்கும்போது மிக அதிக அளவு சத்தம் வரும். அப்படி இருக்கும்போது, அந்த சத்தத்தை வைத்தே, இன்ஜினிற்கு அருகே வேலை செய்யும் ஊழியர்கள், 'ஆன்' செய்யப்பட்டுள்ளதா? அல்லது 'ஆஃப்' செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம்.

மேலும் காதுகளை செவிடாக்கும் அளவிற்கு இருக்கும் விமான இன்ஜின்களின் சத்தம், எப்படி ஊழியர்களுக்கு கேட்காமல் போகும்? எனவும் நீங்கள் ஆச்சரியப்படலாம். முதலில் விமான இன்ஜின்களுக்கு அருகே வேலை செய்யக்கூடிய ஊழியர்கள், சத்தத்தில் இருந்து காதுகளை பாதுகாக்கும் கருவிகளை அணிந்திருப்பார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக ஒரே நேரத்தில் நிறைய விமானங்களின் இன்ஜின்கள் இயங்கி கொண்டிருக்கலாம். எனவே எந்த இன்ஜின் இயங்கி கொண்டுள்ளது? எந்த இன்ஜின் இயங்கவில்லை? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதும் சிரமம். ஆனால் வெள்ளை நிற சுருள் மூலமாக, விமான ஊழியர்கள் இன்ஜின் இயங்கி கொண்டுள்ளதா? அல்லது 'ஆஃப்' ஆகியுள்ளதா? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

எனவே ஊழியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்துதான், இன்ஜினில் இந்த சுருள் வரையப்படுகிறது. இது இல்லாவிட்டால், அவர்களின் நிலைமை கஷ்டம்தான். இந்த சுருள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வரையப்படுகிறது. அதேபோல் சுருள் மட்டுமல்லாது, பந்துகள், கமா போன்ற அடையாளங்களையும் கூட பல்வேறு விமான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

இந்த விஷயத்தில் விமானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், விமான போக்குவரத்தை நடத்தி வரும் நிறுவனங்களும் தங்களுக்கென்று தனித்தனி ஸ்டைல்களை வைத்துள்ளன. ஆனால் பெரும்பாலான விமான இன்ஜின்களில் வெள்ளை நிறத்தில் சுருள் போன்றுதான் வரையப்பட்டிருக்கும். விமானத்தின் ஒரு சிறிய விஷயத்திற்கு பின்னால் கூட இப்படிப்பட்ட பாதுகாப்பு காரணங்கள் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.


Click it and Unblock the Notifications








