விமானத்தில் தனியாக பறக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே
விமானத்தில் தனி ஆளாக பறக்கும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடுத்தர வர்க்க மக்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது இட நெருக்கடி பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்துடன் விமானத்திற்கு உள்ளே இரைச்சலாகவும் இருக்கும். போதாக்குறைக்கு சக பயணிகளாலும் ஒரு சில தொந்தரவுகள் ஏற்படலாம். பொதுவான ஒரு விமான பயணம் இப்படித்தான் இருக்கும்.

ஆனால் வசதி படைத்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. அவர்களால் தனி விமானத்தில் சொகுசாக பயணம் செய்ய முடியும். அதற்காக நடுத்தர வர்க்க மக்களால் விமானத்தில் தனியாக பயணம் செய்யவே முடியாது என அர்த்தம் கிடையாது. அதிர்ஷ்டம் கை கூடினால், யாருக்கு வேண்டுமானாலும் விமானத்தில் தனியாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கலாம்.

நீங்கள் செய்திகளை தொடர்ச்சியாக வாசிக்க கூடியவர் என்றால், விமானத்தில் தனியாக பயணித்தவர்களை பற்றி கேள்விபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் பலமுறை நடைபெற்றுள்ளன. ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்டிருக்கும். இத்தகைய செய்திகளை படிக்கும்போது நம் மனதில் நிறைய சந்தேகங்கள் எழும்.

ஒரே ஒரு பயணிக்காக எப்படி விமானத்தை இயக்குகின்றனர்? இதன் காரணமாக விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படாதா? ஒரே பயணிக்காக விமானத்தை இயக்குவதற்கு பதிலாக பேசாமல் விமானத்தை ரத்து செய்து விடலாமே? என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் உருவாகும். இந்த கேள்விகள் அனைத்திற்கும் இந்த செய்தி தொகுப்பு விடையளிக்கிறது.

ஒரே ஒரு பயணிதான் இருக்கிறார் என்றாலும், விமான நிறுவனங்கள் விமானத்தை ரத்து செய்யாது. அந்த ஒரே ஒரு பயணிக்காக விமானம் கண்டிப்பாக இயக்கப்படும். இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். உங்களுடைய நீண்ட நாள் சந்தேகத்தை இந்த தகவல்கள் நிச்சயமாக தீர்த்து வைக்கும்.

ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் கூட விமானங்கள் இயக்கப்படுவதற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் அட்டவணை. விமானம் எங்கெங்கு பறக்க வேண்டும்? என்ற அட்டவணை ஒரு சில மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விடும். சில சமயங்களில் ஒரு வருடத்திற்கு முன்பே கூட விமானம் எங்கெங்கு செல்ல வேண்டும்? என்ற அட்டவணையை தயாரித்து விடுகின்றனர்.

இந்த அட்டவணைகள் சிக்கலானது. இந்த அட்டவணையை பின்பற்ற தவறினால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த அட்டவணைப்படி ஒவ்வொரு விமானமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருந்தாக வேண்டும். எனவே ஒரே ஒரு பயணி மட்டுமே உள்ளார் என்ற காரணத்திற்காக, விமானத்தை ரத்து செய்ய முடியாது.

பொதுவாக விமானங்கள் குறிப்பிட்ட இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே மட்டும் பயணிக்காது. அவை வெவ்வேறு வழித்தடங்களில், வெவ்வேறு விமான நிலையங்களுக்கு பயணிக்கும். ஒரு விமான நிலையத்தில் ஒரே ஒரு பயணி மட்டும்தான் இருக்கிறார் என்றாலும், அடுத்ததாக அந்த விமானம் பயணிக்கவுள்ள விமான நிலையத்தில் நிறைய பயணிகள் முன்பதிவு செய்திருக்கலாம்.

அந்த விமானத்திற்காக நிறைய பேர் காத்து கொண்டிருப்பார்கள் என்பதால், தற்போது ஒரே ஒருவர் மட்டுமே உள்ளார் என்பதற்காக, விமானத்தை ரத்து செய்ய முடியாது. ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும், விமானங்கள் இயக்கப்படுவதற்கு மற்றொரு காரணம் சரக்கு. ஆம், விமானங்கள் பயணிகளுடன் சரக்குளையும் சுமந்து செல்கின்றன.

எனவே ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் கூட, விமானத்தில் சரக்குகள் முழுமையாக ஏற்றப்பட்டிருக்கும். இந்த சரக்குகள் மூலமாகவும் விமான நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த சரக்குகளை உரிய நேரத்தில் கொண்டு சென்று சேர்த்தாக வேண்டும். அத்துடன் விமானத்தை இயக்குவதற்கான செலவுகளை, சரக்குகள் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் விமான நிறுவனங்கள் ஈடுகட்டி விடும்.

இதற்கு அடுத்த காரணம் சட்டம். ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி, விமானங்களை இயக்கியாக வேண்டிய கடமை விமான நிறுவனங்களுக்கு உள்ளது. இல்லாவிட்டால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆனால் ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கும்பட்சத்தில், இந்த விதிமுறையில் இருக்கு விலக்கு வழங்கப்படும்.

அதாவது மோசமான வானிலை அல்லது இயந்திர கோளாறு ஆகிய தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், விமான நிறுவனங்களுக்கு விதிவிலக்கு கிடைக்கும். ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் கூட, விமானம் இயக்கப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் பராமரிப்பு. விமானத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் பராமரிப்பு பணியை செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும்.

எனவே விமானம் அந்த இடத்திற்கு சென்றடைந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும். இதுபோன்ற திட்டங்கள் இருக்கும்போது, ஒரே ஒரு பயணி மட்டுமே இருக்கிறார் என்பதற்காக விமானத்தை ரத்து செய்ய முடியாது. இத்தகைய காரணங்களால்தான் ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் கூட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விமானத்தில் தனியாக பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக சிறப்பான அனுபவமும், சொகுசான உணர்வும் கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. குறைவான கட்டணத்தில் எடுக்கப்பட்ட டிக்கெட் மூலமாகவே அவர்கள் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்கின்றனர். ஆனால் அனைவருக்கும் இந்த அதிர்ஷ்டம் கை கூடும் என்று சொல்ல முடியாது.

கடந்த காலங்களில் பிலிப்பைன்ஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில், ஒரே ஒரு பயணியை மட்டும் ஏற்றிக்கொண்டு விமானம் பறந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவிலும் கூட ஒரே ஒரு பயணியுடன் விமானம் பறந்துள்ளது. இதுபோன்ற அரிதான ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








