எடை கூட கூட மைலேஜ் குறையும்... இருந்தாலும் கார் நிறுவனங்கள் வண்டியை ஏன் அதிக எடையில் தயாரிக்கின்றன தெரியுமா?
தற்போது விற்பனைக்கு வரும் கார்களின் எடை ஏன் மிகவும் அதிகமாக உள்ளது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது விற்பனைக்கு வரும் கார்கள் எடை மிகுந்ததாக உள்ளன. கார்களின் எடை குறைவாக இருந்தால் நல்ல மைலேஜ் கிடைப்பதுடன், செயல்திறனும் நன்றாக இருக்கும். எனவே கார்களின் எடையை குறைப்பதற்கு, உற்பத்தி நிறுவனங்களும் முயற்சி செய்கின்றன. அப்படி இருந்தும் ஏன் கார்களின் எடை அதிகமாகவே உள்ளது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய சூழலில் கார்களில் குறிப்பிட்ட பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி வருகிறது. ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், சீட் பெல்ட்கள் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் கார்களில் கட்டாயமாக வழங்கப்படுவது வரவேற்க கூடிய ஒரு விஷயம்தான். எனினும் இந்த வசதிகள், கார்களில் கூடுதல் எடையை சேர்க்கின்றன. கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கார்களை விட தற்போது வரும் கார்களின் டோர்கள் மற்றும் பில்லர்கள் தடிமனானவை என்பதை எப்போதாவது கவனித்துள்ளீர்களா?

மோதல் நிகழ்ந்தாலோ அல்லது கார் தலைகீழாக கவிழ்ந்து உருண்டாலோ அதை தாங்க கூடிய அளவிற்கு தற்போது வரும் கார்கள் வலிமையாக கட்டமைக்கப்படுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், எடை அதிகரிப்பிற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது.

அதேபோல் டிரைவர் மற்றும் பயணிகளின் சௌகரியத்திற்காக வழங்கப்படும் வசதிகளும் கூட தற்போதைய 'மாடர்ன்' கார்களின் எடை அதிகரிப்பிற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளன. சௌகரியத்திற்காக வழங்கப்படும் வசதிகள் புதியவை கிடையாது. ஆனால் தற்போது விற்பனைக்கு வரும் கார்களில், சௌகரியத்திற்காக வழங்கப்படும் வசதிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆரம்ப நிலை கார்களில் கூட ஏராளமான வசதிகளை தற்போது நம்மால் காண முடிகிறது. இதன் காரணமாக கார்களை ஓட்டும் பணி டிரைவர்களுக்கு எளிமையாக மாறியுள்ளது. அத்துடன் பயணம் செய்பவர்களும் அலுப்பு தெரியாமல் சென்று சேர வேண்டிய இடத்தை அடைய முடிகிறது. ஆனால் இதுபோன்ற வசதிகளை வழங்குவதாலும் கார்களின் எடை அதிகரித்து விடுகிறது.

அதேபோல் எடை அதிகமான கார்களுக்கு, பெரிய பிரேக்குகள், பெரிய டயர்கள் போன்றவை தேவைப்படும். இவையும் மேற்கொண்டு கார்களில் கூடுதல் எடையை சேர்க்கின்றன. கார்களின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கு எடை மிகப்பெரிய எதிரி. எடை அதிகமான கார் நகர்வதற்கு அதிக சக்தி தேவைப்படும்.

எனவே இன்ஜின் அதிக எரிபொருளை நுகரும். இதன் காரணமாக காரின் மைலேஜ் மட்டுமின்றி செயல்திறனும் பாதிக்கப்படும். எனவே கார்களின் எடை குறைவாக இருப்பதுதான் சிறந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காகவும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதற்காகவும் சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டிய கட்டாயம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உள்ளது.

இதன் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்களும் அழுத்தத்தின் கீழ்தான் உள்ளன. கார்களின் எடையை குறைப்பதுடன், எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மெட்டீரியல்களை ஆராயும் பணிகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

தற்போது கார்களில் கார்பன் ஃபைபரை (Carbon Fiber) பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே வருகிறது. கார்பன் ஃபைபரின் எடை குறைவான இயல்புதான் இதற்கு முக்கியமான காரணம். இன்றைய அதிநவீன கார்களின் பல்வேறு பாகங்களில் கார்பன் ஃபைபரை உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இதன் மூலம் காரின் ஒட்டுமொத்த எடையை கட்டுக்குள் வைப்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது. தற்போது கார்களின் எடை அதிகமாக இருப்பதால், தேவையில்லாத பொருட்களை எல்லாம் ஏற்றி, காரின் எடையை நீங்கள் மேற்கொண்டு அதிகரித்து விட வேண்டாம். இதை நீங்கள் செய்தால் மைலேஜ் மற்றும் செயல்திறன் பாதிக்கப்படலாம். எனவே காரில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








