பஸ்களை விட ரயில்களில் ஏன் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது? இதான் உண்மையான காரணம்!
இன்று பொது போக்குவரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயிலில் தான் டிக்கெட் விலை மிக குறைவாக இருக்கிறது. பஸ்களில் ரயிலை விட அதிகமான டிக்கெட் விலை இருக்கிறது. இது ஏன்? இவ்வளவு விலை வித்தியாசம் வர என்ன காரணம்? அதிக பொருட்செலவில் இயங்கும் ரயில்களில் மட்டும் ஏன் டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கிறது? முழு விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
இன்று போக்குவரத்திற்கு மக்களுக்கு ஏகப்பட்ட வழிகள் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அவர் செல்லும் தூரத்திற்குத் தகுந்தார் போல வசதிகள் இருக்கிறது. ஒரு ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்ல பஸ் வசதிகள் இருக்கிறது. ஒருவரிடம் சொந்தமான வாகனம் இருக்கிறது என்றால் அதில் பயணம் செய்யலாம். நீண்ட தூரப் பயணம் என்றால் பஸ், ரயில் என இரண்டு விதமான பொது போக்குவரத்து இருக்கிறது. வெகு தூரம் என்றால் விமானத்திலும் பயணிக்கலாம்.

டிக்கெட் விலை!
பொது போக்குவரத்தை ஒப்பிடும் போது இருப்பதிலேயே விமானத்தில் தான் டிக்கெட் விலை அதிகம். அடுத்ததாக பஸ், இருப்பதிலேயே ரயிலில் தான் விலை குறைவு, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ்சில் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிக பொருட்செலவில் இயக்கப்படும் ரயில்களில் விலை குறைவாக இருக்கிறது என்பது பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறது. பஸ்களை இயக்குவதை விட ரயில்களை இயக்குவதற்கான செலவு அதிகம்.
ஆனால் பஸ்களை விட ரயில்களில்தான் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பஸ்களில் குறைந்தது ஒரு கி.மீக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் பஸ் டிக்கெட் இல்லை. ஆனால் ரயில்களில் பயணத்திற்கு ஒரு கி.மீ பயணத்திற்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் பஸ் டிக்கெட்கள் விற்பனையாகிறது. ஏன் இந்த மாறுபாடு ஏற்படுகிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது.

டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை!
இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு பொது வாகனத்திற்கு டிக்கெட் கட்டணம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொது வாகனத்தைச் செயல்படுத்துவதற்கு எவ்வளவு செலவாகிறது என முதலில் கணக்கிடப்படும். செலவு என்றால் அதற்கான எரிபொருள் செலவு அதைச் செயல்படுத்தத் தேவைப்படும் ஆட்களுக்கான சம்பளம், டோல்கேட் கட்டணம் உள்ளிட்ட ஒரு ட்ரிப்பிற்கு ஆகும் செலவு
இது போக மொத்த செலவுகளாக வரும் வாகனத்தின் பராமரிப்பு, ரிப்பேர், இன்சூரன்ஸ், உள்ளிட்ட செலவில் குறிப்பிட்ட ட்ரிப்பிற்கான பங்கு, அதன்பின் லாபம் என ஒரு வாகனம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி மற்றொரு இடத்திற்குச் செல்ல எவ்வளவு செலவாகிறது என கணக்கிடப்பட்டு அது ஒரு பயண தூரத்தில் ஸ்டேஜ் வாரியாக பிரிக்கப்பட்டு, அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவர்களுக்குத் தலைக்குக் குறிப்பிட்ட தூரத்திற்குக் கட்டணம் இவ்வளவு என நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த முறையில் பார்த்தால் பஸ்சை விட ரயிலை இயக்குவதற்கு அதிகம் செலவாகும். ஆனால் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் செலவு, லாபம் எல்லாம் அதிகமான எண்ணிக்கையில் பிரிக்கப்படும் போது டிக்கெட்டின் விலை குறைவாக வருகிறது. ஆனால் பஸ்சில் ரயிலைக் காட்டிலும் குறைவான பயணிகளே பயணிக்க முடியும் என்பதால் அதற்கான செலவுகளை அவர்களிடம் தான் வசூலிக்க வேண்டும் என்பதால் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது.
தனியார் நிறுவனம் கைபற்றும் முறை!
இது வழக்கமான டிக்கெட்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை தான். ஆனால் இன்று பஸ்களும், விமானங்களும், அரசிடம் மட்டுமல்ல தனியார்களிடம் அதிகம் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் டிக்கெட்ட கட்டணம் நிர்ணயம் செய்யும் முறையில் டிமாண்டையும் சேர்ந்துள்ளனர். அதிக டிமாண்ட் இருக்கும் காலத்தில் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாகவும், குறைவான டிமான்ட் இருக்கும் காலத்தில் டிக்கெட் கட்டணம் அடிப்படையாகவும் இருக்கும்படி நிர்ணயம் செய்கின்றனர்.
இதனால் பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் கட்டணங்கள் விமான கட்டணங்களுக்கு நிகராக இருக்கிறது. ஆனால் ரயில்வே முற்றிலும் அரசிடம் இருப்பதால் இங்கு டிமாண்டிற்கு ஏற்ற கட்டண நிர்ணய முறை கிடையாது. இதுவும் ரயிலை விட பஸ்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. ரயில் தான் குறைவான கட்டணத்தில் சொகுசான பயணம் கிடைக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications