தேவையில்லாத ஆணி... டயர்ல முள் மாதிரி ரப்பர் ஏன் நீட்டிகிட்டு இருக்கு தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!
டயர்களில் முடி அல்லது முட்கள் போன்று ரப்பர் ஏன் நீட்டிக்கொண்டு இருக்கிறது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் புதிய டயரை வாங்கும்போது, ரப்பரால் ஆன முடி போன்ற வடிவத்தை காண முடியும். அவை டயரின் மேல் பகுதியில்முட்களை போன்று நீட்டி கொண்டிருக்கும். டயர்களில் ஏன் இப்படி முட்களை போன்ற வடிவம் இருக்கிறது? என நீங்கள் யோசித்திருக்கலாம். இந்த முட்கள் போன்ற வடிவத்தில் 'வெண்ட் ஸ்பியூஸ்' (Vent Spews) என்று பெயர்.

'ஸ்பியூ ஹோல்ஸ்' (Spew Holes) என்ற பெயரிலும் கூட அவை அழைக்கப்படுகின்றன. இது டயர் உற்பத்தி பணிகளில் உருவாகும் துணை பொருள் (By-product) ஆகும். நாம் வாங்கும் டயர்களில் இந்த 'வெண்ட் ஸ்பியூஸ்' எதற்காக இருக்கிறது? என்பது தொடர்பாக பலருக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

ஒரு சிலர் இந்த 'வெண்ட் ஸ்பியூஸ்' மூலம் டயர் புதியதா? என்பதை கண்டறியலாம் என்கின்றனர். இன்னும் ஒரு சிலரோ இது சத்தத்தை குறைப்பதற்கு (Noise Reduction) பயன்படுகிறது என கூறுகின்றனர். இதில் எது உண்மை? எது பொய்? என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். எனவே 'வெண்ட் ஸ்பியூஸ்' தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

உங்கள் சந்தேகங்களை இந்த செய்தி நிவர்த்தி செய்யும் என நம்புகிறோம். 'வெண்ட் ஸ்பியூஸ்' தொடர்பான துல்லியமான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, டயர் உற்பத்தி பணியுடன் நீங்கள் நன்றாக பரிட்சயமாக வேண்டும். அப்போதுதான் டயர் உற்பத்தியின்போது, இந்த 'வெண்ட் ஸ்பியூஸ்' எப்படி உருவாகிறது? என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

நைலான், ரப்பர் போன்றவற்றை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஒன்றாக கலப்பதுதான் டயர் உற்பத்தி பணிகளின் முதல் படி. இந்த ரப்பர் கலவை, முதலில் டயரின் மூல வடிவத்திற்கு (Raw Form) கொண்டு வரப்படும். இதனை 'க்ரீன் டயர்' (Green Tyre) என அழைக்கின்றனர். இந்த 'க்ரீன் டயர்' மென்மையாக இருக்கும். க்ரின் டயர்களில் 'த்ரெட்கள்' (Threads) போன்றவை இருக்காது.

பின்னர் இந்த 'க்ரீன் டயர்' மோல்டுக்கு (Mold) மாற்றப்படும். அதாவது அச்சுக்கு மாற்றப்படும். டயர் என்ன பேட்டர்னில் இருக்க வேண்டும்? என டயர் உற்பத்தி நிறுவனம் முடிவு செய்திருக்கும். அந்த அச்சுக்கு க்ரீன் டயரை மாற்றுவார்கள். இந்த செயல்முறைகளை 'க்யூரிங்' (Curing) அல்லது 'வல்கனைசேஷன்' (Vulcanization) என அழைக்கின்றனர்.

நாம் தற்போது சந்தையில் காணும் இயல்பான டயரின் வடிவத்தை, இந்த செயல்முறைகளின் மூலமாகதான் 'க்ரீன் டயர்' பெறுகிறது. இந்த செயல்முறைகளின்போது திரவ நிலையில் உள்ள சூடான ரப்பரை 'இன்ஜெக்ட்' செய்வார்கள். அத்துடன் சூடான காற்றழுத்தமும் (Hot Air Pressure) 'அப்ளை' செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக திரவ நிலையில் உள்ள சூடான ரப்பர், அச்சின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பரவும். வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் ஒரு டயர், 'த்ரெட்' போன்றவற்றை கொண்டிருக்கும். இந்த 'த்ரெட்' போன்ற அம்சங்கள் அனைத்தும், அச்சில் இருக்கும். திரவ நிலையில் உள்ள சூடான ரப்பர், அச்சின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பரவுவதன் மூலம், இந்த வடிவங்களை பெறும்.

முன்னதாக சூடான காற்றழுத்தம் 'அப்ளை' செய்யப்படுவதால், காற்று குழிழ்கள் (Air Bubbles) உருவாகும். இந்த காற்று குழிழ்கள் எல்லாம் வெளியேறினால்தான், அச்சு முழுமைக்கும் திரவ நிலையில் உள்ள சூடான ரப்பர் செல்லும். டயர் அச்சில் உள்ள சிறிய காற்றோட்ட துளைகள் (Vent Holes) இந்த பணி நடைபெறுவதை உறுதி செய்கின்றன.

சூடான காற்றழுத்தம் 'அப்ளை' செய்யப்படுவதால் உருவான காற்று குழிழ்கள், இந்த காற்றோட்ட துளைகள் வாயிலாக வெளியேறி விடும். இது நடக்கும்போது, திரவ நிலையில் உள்ள சூடான ரப்பரும், காற்றோட்ட துளைகள் வாயிலாக சிறிய அளவில் வெளியே வந்து விடும். இவைதான் புதிய டயர்களில் நாம் காணும் முடிகள் அல்லது முட்கள் போன்ற அமைப்பு.

இந்த முடிகள் அல்லது முட்கள் உறுதியாக இருக்கும். அச்சில் இருந்து டயரை வெளியே எடுத்த பிறகும் கூட, அவை டயருடனேயே இணைந்திருக்கும். இந்த டயர்கள்தான் நமக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. டயர்களில் இருக்கும் இந்த முடிகள் அல்லது முட்கள் போன்ற அமைப்புகளால் நமக்கு உண்மையில் எந்தவிதமான பலனும் இல்லை. இது தேவையில்லாத ஆணி.

எனவே நீங்கள் அவற்றை அகற்றி விடலாம். அல்லது அப்படியே விட்டும் விடலாம். அப்படியே விடுவதாலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த முடிகள் அல்லது முட்கள் போன்ற அமைப்பை அகற்றுவது என நீங்கள் முடிவு செய்தால், கவனமாக அகற்றுங்கள். கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தினால், டயர் கிழிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கவனம் அவசியம்!

இனி உங்கள் வாகனத்தின் டயருடைய ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கான எளிமையான வழிகளை பார்க்கலாம்.
வீல் அலைன்மெண்ட்
இந்தியாவை பொறுத்தவரை நீங்கள் சில ஆயிரம் கிலோ மீட்டர்கள் காரை ஓட்டினாலே, உங்கள் காரின் வீல் அலைன்மெண்ட் பாதிக்கப்படும். இந்தியாவில் உள்ள மிகவும் கரடு முரடான, மோசமான சாலைகள்தான் இதற்கு காரணம். ஆனால் வீல் அலைன்மெண்ட் என்பது ஒரு காருக்கு மிகவும் முக்கியமானது.

எனவே ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக வீல் அலைன்மெண்ட்டை சரிபார்த்து கொள்ளுங்கள். அத்துடன் வீல் பேலன்சிங் மற்றும் ரொட்டேஷன் ஆகியவையும் மிகவும் முக்கியமானது. உங்கள் டயர் ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டும் என்றால், நீங்கள் அடிக்கடி இவற்றை செய்ய வேண்டும்.

டயர் பிரஷர்
டயர் உற்பத்தியாளர் மற்றும் கார் உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷரை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. காருக்கு உகந்த டயர் பிரஷரை கண்டறிவதற்காக பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன. அதற்கு பின்புதான் டயர் பிரஷரின் அளவு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பிரஷர் மிகவும் குறைவாக இருந்தால், டயர் விரைவாக சூடேறி வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே டயர் உற்பத்தியாளர் மற்றும் கார் உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட பிரஷரை எப்போதும் தவறாமல் பராமரிப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஓவர்லோடு
காரின் சஸ்பென்ஸன் உள்பட பல்வேறு அம்சங்களில் 'ஓவர்லோடிங்' தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் நீங்கள் காரில் அதிக சுமையை ஏற்றினால், கடுமையாக பாதிக்கப்படுவது டயர்கள்தான். ஓவர்லோடிங் காரணமாக டயரின் ஆயுட்காலம் வெகுவாக குறைந்து விடுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

காரில் நீங்கள் அதிக சுமையை ஏற்றினால், அது சஸ்பென்ஸனுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுப்பது போலாகி விடும். அத்துடன் வீல் அலைன்மெண்ட் விரைவாகவே பாதிக்கப்பட ஓவர்லோடும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காரில் அதிக பாரத்தை எப்போதும் ஏற்றாதீர்கள்.


Click it and Unblock the Notifications








