90ஸ் கிட்ஸ்களின் கனவான "மாடி பஸ்" மீண்டும் சென்னைக்கு வருமா? முதலில் ஏன் நிறுத்தப்பட்டதுனு தெரியுமா?
சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்த மாடிபஸ்கள் ஏன் நிறுத்தப்பட்டது? இது மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் சாதாரணமாக பஸ்களில் பயணித்திருப்போம். ஆனால் டபுள் டக்கர் பஸ் அல்லது மாடி பஸ்களில் பயணித்திருக்கிறோமா? இந்த மாதிரியான பஸ்களை எல்லாம் இன்று நாம் பழைய படங்களில் தான் பார்க்க முடியும். நேரில் இப்படியான பஸ்கள் எதுவும் தற்போது இந்தியாவில் செயல்பாட்டில் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் இந்த மாடி பஸ்கள் எல்லாம் இந்தியாவின் முக்கியமான நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் செயல்பாட்டிலிருந்தது.

அட ஆமாங்க சென்னையில் கூட இந்த பஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன. ஏன் இந்த மாடி பஸ்கள் நிறுத்தப்பட்ட என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இதன் வரலாற்றைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் துவங்கப்பட்ட 25ம் ஆண்டு விழா அதாவது 1997ம் ஆண்டு இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விழாவில் மாடி பஸ்கள் மட்டுமல்ல தொடர் அடுக்கு பஸ்கள் அதாவது ஒரே பஸ்சின் பின்புறம் மற்றொரு பஸ்சை இணைத்தது போல அமைக்கப்பட்டிருக்கும் பஸ்கள் என 2 புது விதமான பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தபஸ்கள் எல்லா வழித்தடங்களிலும் இயங்காது. இந்த பஸ்களை இயக்க தகுதியான வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த வழித்தடத்தில் மட்டுமே இந்த பஸ்கள் இயங்கப்பட்டன.

உதாரணமாக மாடி பஸ்கள் என்றால் சாலையின் குறுக்கே எந்த விதமான கம்பிகள் வயர்கள் எதுவும் செல்லாதவாறு இருக்க வேண்டும் குறிப்பிட்ட உயரத்திற்குப் பாலத்திற்கு அடியில் பஸ் செல்லும் வகையிலும்
இருக்கக் கூடாது. இவ்வாறான விஷயங்களை மனதில் வைத்து இதற்கான ரூட்களை போட வேண்டும். தொடர் அடுக்கு பஸ்களை பொருத்தவரை அந்த பஸ்கள் திரும்பும் இடத்தில் அகலமாகச் சாலைகளாக இருக்க வேண்டும். குறுகலான சாலைகளில் இந்த பஸ்களை திருப்பினால் சிக்கிக்கொள்ளும்.

இது மட்டுமல்ல இந்த இரண்டு வகை பஸ்களுக்கும் வேகக் கட்டுப்பாடு என்ற விஷயம் இருக்கிறது. இந்த இரண்டு பஸ்களும் எக்காரணத்தைக் கொண்டு 40-50 கி.மீ வேகத்தைத் தாண்டக் கூடாது. மீறினால் இந்த பஸ்கள் பெறும் விபத்துக்களைச் சந்திக்கும் என்பதால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வேகம் செல்லாதபடி பேருந்துகளை வடிவமைத்திருந்தனர். மாடி பஸ்கள் உயரம் அதிகம் என்பதால் வேகமாகச் சென்று திரும்பினால் கவிழுந்துவிடும். அதே போலத் தொடர் அடுக்கு பேருந்துகளிலும் வேகமாகச் செல்ல முடியாது.

இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தும் முன்பே அறிந்தது தான். இருந்தாலும் அதையும் மீறி இந்த பஸ்களை அறிமுகப்படுத்த மொத்தம் 2 காரணங்கள் இருந்தன. முதல் காரணம் இந்த வித்தியாசமான பஸ்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் இருக்கம் என்பதும். மேலும் குறைந்த செலவில் அதிகமான பயணிகளை இந்த பஸ்கள் சுமந்து செல்லும் என்பதால் பட்ஜெட் ஃபிரெண்ட்லியாக இயங்கும் என்பதாலும் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

குறிப்பாக மாடி பஸ்கள் பல சுற்றுலாப் பயணிகள் நகரைச் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது போலச் சுற்றிலும் ஜன்னல் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஜாலியாக நகர் வலம் வரலாம். தொடர் அடுக்கு பேருந்துகள் பெரும்பாலும் சாலையோர சிறு வியாபாரிகளுக்கான பேருந்தாக இருந்தது. அதிகமாகச் சுமைகளைக் கொண்டு வரும் பயணிகள் இந்த பஸ்களில் உள்ள அதிக இட வசதியால் இந்த பஸ்களை விரும்பினர்.

இந்நிலையில் தான் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த மாடி பஸ் பயன்பாட்டை நிறுத்தி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் பாதுகாப்பு குறைபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் தான். மாடி பஸ்களை மற்ற பஸ்களை போல இயக்க முடியாது. இதைக் கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்குவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் சாலைகளின் கட்டமைப்பும் இந்த பஸ்களுக்காக உயரமாக அமைக்கப்படுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியமாக இருந்தது.

இது மட்டுமல்ல மாடி பஸ்களில் மேல் தளத்திலிருந்த யாராவது தவறி கீழே விழுந்துவிட்டால் அவர் உயிர் பிழைப்பதே கடினம் என்ற ஒரு ஆபத்தும் இருந்தது. தொடர் பஸ்களை பொருத்தவரை பெரும் கூட்ட நெரிசலில் இந்த பஸ்களை ஓட்டுவது அதிகமாக விபத்துக்களுக்கு வழி வகுக்கும் எனக் கருதப்பட்டதால் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டன. மாடி பஸ் எல்லாம் சென்னை மட்டுமல்ல இந்தியாவில் பல நகரங்களில் இந்த கான்செப்ட் செயல்பாட்டிலிருந்தது.

ஆனால் தற்போது எல்லா மாநிலத்திலும் இந்த சேவை நிறத்தப்பட்டுவிட்டது. கடைசியாகப் பெங்களூருவில் கடந்த 2014ம் ஆண்டு வரை இந்த சேவை இருந்தது. ஆனால் அதன் பின் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை இந்த பஸ்களை மீண்டும் பெங்களூரு நகர்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்த மாடி பஸ்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர மற்ற மாநிலங்களில் இதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மாடி பஸ்களை மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டுவரத் தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்த போக்குவரத்துத் துறையின் அனுமதியிலும் சிக்கல் இருக்கிறது. சென்னையைப் பொருத்தவரை சமீபத்தில் இந்த பஸ்கள் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். சென்னையில் ஏற்கனவே செயல்பாட்டிலிருந்த மாடி பஸ்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்கள், கிட்ஸ்களாக இருக்கும் போது பார்த்திருக்க முடியும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இது வெறும் வரலாறும் கனவுமாக மட்டுமே இருக்கிறது.


Click it and Unblock the Notifications