காரில் எரிபொருள் டேங்க் மூடி ஏன் பக்கவாட்டில் கொடுக்கப்படுகிறது தெரியுமா?
கார்களில் எரிபொருள் டேங்க் மூடி பொதுவாக பக்கவாட்டில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தும்போது, எரிபொருள் குழாயின் வாய்ப்பகுதி பக்கவாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்ற நடைமுறை காரணத்தை எல்லோரும் தெரிவித்துவிடலாம்.

ஆனால், சில நாடுகளில் பெட்ரோல் நிரப்புவதற்கான மூடி பின்புறத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது. நம்பர் பிளேட்டுக்கு பின் புறத்திலும், சில கார்களில் இடது பக்க டெயில் லைட்டுக்கு பின்புறத்திலும் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருந்தது. நம்பர் பிளேட்டை திறந்தால் பெட்ரோல் நிரப்ப முடியும்.

இதுபோன்ற கார்களை வைத்திருந்தவர்கள், எரிபொருள் நிரப்புவதற்கு எளிதாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், நடைமுறையில் அதில் பல சிக்கல்கள் இருப்பதையும் உணர வேண்டும்.

இந்த நிலையில், இந்த காரணத்தை தாண்டி, காரில் பக்கவாட்டில் பெட்ரோல் நிரப்புவதற்கான மூடி கொடுக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் உள்ளது. காரின் பின்புறத்தில் பெட்ரோல் டேங்க் நிரப்புவதற்கான மூடி கொடுக்கப்பட்டால், பின்புறத்தில் சிறிய மோதல் நிகழ்ந்தாலும் அது தீப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதை பொறியாளர்கள் கண்டறிந்தனர்.

பார்க்கிங் செய்யும்போதோ சுவரில் இடித்துவிட்டாலும், சடன் பிரேக் பிடிக்கும்போது பின்னால் வரும் வாகனம் லேசாக மோதினால் கூட தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதை வாகன வடிவமைப்புத் துறை பொறியாளர்கள் உணர்ந்தனர். விபத்து சமயத்தில் கூட காரில் அதிக சேதமடையாத பகுதியை தேர்வு செய்து பெட்ரோல் டேங்க் நிரப்புவதற்கான மூடியை பக்கவாட்டில் கொடுத்தனர்.

இதையடுத்து, தற்போது பல நாடுகளில் பின்புறத்தில் எரிபொருள் நிரப்புவதற்கான மூடியை முன்புறத்திலும், பின்புறத்திலும் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையை கடைபிடிக்க துவங்கினர். தற்போது வரும் கார்களில் பாதுகாப்பு கருதி, க்ரம்பிள் ஸோன் எனப்படும் விபத்தின்போது மோதல் தாக்கத்தை உள்வாங்கி கொள்ளும் பகுதியிலோ அல்லது பரந்த இடபரப்பை கொண்ட பகுதியிலோ அமைக்க அறிவுறுத்தப்படுகின்றன.

அதுமட்டுல்ல, அதிக சூடான புகை வெளியேறும் புகைப்போக்கி அமைந்த பகுதி மற்றும் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதியை தவிர்த்து எரிபொருள் நிரப்புவதற்கான வாய்ப்பகுதியை அமைக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன.

இதில் சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. ஜாகுவார் நிறுவனம் தனது கார்களில் இரண்டு பெட்ரோல் நிரப்பும் மூடிகளை பொருத்திக் கொடுத்தது. பெட்ரோல் நிலையத்தில், எந்த பக்கம் நிறுத்தி வேண்டுமானாலும் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த வசதியை வழங்கியது.

பொதுவாக ஸ்டீயரிங் வீல் மற்றும் புகைப்போக்கி குழாய் அமைப்பை பொறுத்து, ஜப்பானிய கார்களில் 90 சதவீதம் பெட்ரோல் டேங்க் மூடி காரின் இடது புறத்தில் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வலது பக்கம் கொடுக்கப்படுகிறது.

இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. பரபரப்பான சமயங்களில் ஒரே நேரத்தில் பல கார்கள் பெட்ரோல் நிலையத்திற்கு வரும்போது, மாறி மாறி இருப்பதன் மூலமாக, ஒரே வரிசையில் இல்லாமல் இருபுறத்திலும் நின்று பெட்ரோல் நிரப்ப ஏதுவாகும். நெரிசல் குறையும் என்பதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

சரி, இப்போது இன்னொரு சந்தேகம் வரலாம். நம் நாட்டில் விற்பனையில் உள்ள கார்களில் சிலவற்றில் இடதுபுறமும், சிலவற்றில் வலது புறமும் இருப்பதை கண்டிருப்பீர்கள். இதற்கான காரணத்தையும் தொடர்ந்து பார்த்துவிடலாம்.

சில கார்களில் ஓட்டுனர் பக்கத்திலேயே பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஓட்டுனரே பெட்ரோல் நிரப்பும் தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அங்கு ஓட்டுனர்கள் காரை விட்டு இறங்கி எளிதாக எரிபொருள் நிரப்புவதற்காக ஓட்டுனர் பக்கமே கொடுக்கப்படுகிறது.

சில கார்களி்ல ஓட்டுனர் பக்கத்திற்கு எதிர் பக்கத்தில் பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்பட்டு இருக்கும். இதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. காரின் எடை விரவும் தன்மைக்கு ஏற்றவாறு, பெட்ரோல் டேங் மூடி ஓட்டுனர் அமர்ந்திருக்கும் எதிர் திசையில் கொடுக்கப்படுகிறது. புகைப்போக்கி குழாய் அமைப்புக்கு எதிர் திசையில் இந்த பெட்ரோல் டேங்க் மூடி கொடுக்கப்படுவதும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications








