அரசாங்கத்தை திட்டாதீங்க! நெடுஞ்சாலையில் மின் விளக்கு இருந்தால் விபத்து நடக்கும்! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே
நெடுஞ்சாலைகளில் ஏன் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது இருள் சூழ்ந்திருக்கும். வாகனங்களின் ஹெட்லைட்கள் மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் தவிர வேறு எந்த வெளிச்சமும் இருக்காது. மின் விளக்கு கம்பங்கள் இல்லாததுதான் இதற்கு காரணம்.

நெடுஞ்சாலைகளில் பொதுவாக மின் விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டிருக்காது. முக்கியமான பாலங்கள் மற்றும் சுங்கசாவடிகள் போன்ற ஒரு சில இடங்களில் மட்டும்தான் மின் விளக்கு கம்பங்களை பார்க்க முடியும். மற்ற இடங்களில் எல்லாம் கும்மிருட்டாகதான் இருக்கும். சரி, நகரங்களில் உள்ள சாலைகளை போல் நெடுஞ்சாலைகளில் ஏன் மின் விளக்கு கம்பங்கள் இல்லை என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

அலட்சியம் காரணமாகதான் நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படுவதில்லை என பலரும் நினைத்து கொண்டிருக்கலாம். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படாததற்கு பின்னால் பல்வேறு ஆக்கப்பூர்வமான காரணங்கள் உள்ளன.

உண்மையில் பாதுகாப்பு கருதியும், அனாவசியம் என்பதாலும்தான் நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படுவதில்லை. நகர சாலைகளை போல், பாதசாரிகளும், சைக்கிள் போன்ற மோட்டார் இல்லாத வாகனங்களும் நெடுஞ்சாலைகளில் அதிகமாக வந்து செல்வதை பார்த்துள்ளீர்களா? இதற்கு 'இல்லை' என்பதுதான் அனைவரின் பதிலாக இருக்கும்.

நெடுஞ்சாலைகளில் ஒரு சிலர் நடந்து செல்லலாம். மோட்டார் இல்லாத வாகனங்கள் ஒன்றிரண்டு செல்லலாம். ஆனால் நகர சாலைகள் அளவிற்கு நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான பாதசாரிகள் வந்து செல்ல மாட்டார்கள். அதேபோன்று மோட்டார் இல்லாத வாகனங்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு சில நெடுஞ்சாலைகளில் பாதசாரிகளோ அல்லது மோட்டார் இல்லாத வாகனங்களோ அனுமதிக்கப்படுவதே கிடையாது. பொதுவாக மின் விளக்கு கம்பங்கள் எதற்காக அமைக்கப்படுகின்றன? என்பதை நாம் இங்கே நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படுவதில்லை.

ஏனெனில் வாகனங்களில் ஹெட்லைட்கள் இருக்கும். எனவே நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் மோட்டார் இல்லாத வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காகவே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படாததற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்று.

அதாவது நெடுஞ்சாலைகளும், நகர சாலைகளும் வெவ்வேறானவை. நகர சாலைகளில் கார் போன்ற ஹெட்லைட்கள் இருக்கும் வாகனங்கள் மட்டும் வந்து செல்லாது. இந்த சாலைகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் இல்லாத வாகனங்களின் எண்ணிக்கையும் அடர்த்தியாக இருக்கும். ஹெட்லைட்கள் இல்லாத சைக்கிள், மூன்று சக்கர மற்றும் மாட்டு வண்டிகள் போன்றவையும் நகர சாலைகளில் அதிகம் வந்து செல்லும்.

எனவே நகர சாலைகளில் மின் விளக்கு கம்பவங்கள் அதிகளவில் பொருத்தப்படுகின்றன. ஆனால் நெடுஞ்சாலைகள் நகர பகுதிகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு பாதசாரிகள் மற்றும் ஹெட்லைட்கள் இல்லாத வாகனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஜீரோ. நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் இல்லாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

மேலும் நகர சாலைகளை விட நெடுஞ்சாலைகள் தரம் மிக்கவையாக இருக்கும். நெடுஞ்சாலைகள் மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்பதாலும், நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்களுக்கு அவசியமில்லை. சரி, நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்களை அமைத்தால், டிரைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் அல்லவா? என்ற கேள்வி தற்போது எழலாம்.

இதற்கு 'இல்லை' என்பதுதான் பதில். ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. மின் விளக்கு கம்பங்களின் ஒளி தொடர்ச்சியற்றதாகவும், சீரற்றதாகவும் இருக்கும். வெளிச்சம் மற்றும் இருள் என மாறி கொண்டே இருந்தால், அதிவேகத்தில் வரும் வாகனங்களின் டிரைவர்களுக்கு காட்சி பிழைகள் (Visual Errors) ஏற்படும்.

அதாவது மாயைகள் (Illusions) தோன்றலாம். இது மிகவும் ஆபத்தானது. அத்துடன் இது கண்ணில் மிக விரைவாக அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். அப்படி நடந்தால் டிரைவர்கள் பார்ப்பதற்கு சிரமப்படுவார்கள். அப்போது ஏற்படும் குழப்பம், விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடும். எனவே நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்களை அமைத்தால், பாதுகாப்பில் மறைமுக பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படாமல் இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தேவைகளை, அதன் ஹெட்லைட்கள், சாலை குறியீடுகள் மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் ஆகியவையே பூர்த்தி செய்து விடும்.

இதுதவிர அதிக செலவு மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்கள் பொருத்தப்படுவதில்லை. நெடுஞ்சாலைகள் பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு செல்லும். அவ்வளவு தூரத்திற்கும் மின் விளக்கு கம்பங்களை பொருத்தினால் அதிக செலவு ஆகும். அந்த மின் விளக்கு கம்பங்கள் அனைத்தையும் முறையாக பராமரிப்பதும் கடினம்.

அத்துடன் நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு மின் விளக்கு கம்பங்களை அமைப்பது என்பது மின்சாரத்தை தேவையில்லாமல் வீணடிக்கும் செயல் ஆகும். அறிவியல் ரீதியாக பார்த்தால், நெடுஞ்சாலைகளில் மின் விளக்கு கம்பங்களை அமைப்பது தேவையற்றது. அத்துடன் இது மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளிலும் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications