விமானத்தில் ஏறுவதற்கு முன்பு உப்பு போட்டு சாப்பிட்றாதீங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!
விமானத்தில் முதல் முறை பயணம் செய்யும்போது மிகவும் உற்சாகமாகதான் இருக்கும். ஆனால் தொடர்ச்சியாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி பாருங்கள். நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு மனதில் உள்ள வேதனைகளை கொட்டி தீர்த்து விடுவார்கள்.
உண்மையிலேயே தொடர்ச்சியாக விமானத்தில் பயணம் செய்து கொண்டே இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். விமானம் புறப்படுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நீங்கள் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அதன்பின் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மிகவும் கடுமையான பாதுகாப்பு சோதனைகளை கடக்க வேண்டும்.

இந்த விஷயங்களே உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். அதற்கு பிறகு நீங்கள் செல்லவுள்ள விமானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள கேட்டிற்கு வேக வேகமாக செல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் கடந்து விமானத்தில் ஏறி அமர்ந்தால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். ஆனால் விமானம் கிளம்பிய பிறகு வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட தொடங்கும்.
கால்கள் திடீரென வீக்கமடைவது இதில் முக்கியமானது. ஆம், விமான பயணத்தின்போது நம் கால்கள் வீக்கம் அடைவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. ஏன் இவ்வாறு நடக்கிறது? கால்கள் வீக்கம் அடையாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில்களை உள்ளடக்கியதுதான் இந்த செய்தி தொகுப்பு.

விமானத்தில் பயணம் செய்யும்போது நீங்கள் இருக்கையிலேயே அமர்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. சில சமயங்களில் மணிக்கணக்கில் கூட விமானத்திலேயே உட்கார்ந்திருக்க நேரிடும். இப்படி நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும்போது, கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. இது கால்கள் வீக்கம் அடைய காரணமாகி விடுகிறது.
அத்துடன் விமானத்தின் கேபினில் காற்றழுத்தம் மாறுபடும். மேலும் விமானத்தில் பயணம் செய்யும்போது உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, கால்களில் வீக்கம் ஏற்படுவதை வேகமாக்கி விடுகின்றன. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், விமானங்களின் கேபினில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
அத்துடன் காற்று வறண்டு காணப்படும். இவை இரண்டும்தான் விமான பயணத்தின்போது உடலில் வேகமாக நீரிழப்பு ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள். இவை கால்களை வீங்க செய்வதுடன், நமக்கு தலைவலியையும் ஏற்படுத்தும். சரி, இந்த பிரச்னைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
சாத்தியமுள்ள சமயங்களில், கொஞ்சம் எழுந்து நடந்தால் இந்த பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் விமானங்களில், வாய்ப்பு இருக்கும்போது எழுந்து நடக்க முயற்சி செய்யுங்கள். சாத்தியமுள்ள, வாய்ப்பு இருக்கும்போது என நாங்கள் பேசி கொண்டிருப்பதற்கு காரணம் உள்ளது.
பொதுவாக விமானங்களில் நீங்கள் பயணிக்கும்போது சீட்பெல்ட் விளக்கு எரியும். அந்த சமயங்களில் எல்லாம் நீங்கள் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். அத்துடன் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும். பெரும்பாலும் விமானம் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகும்போதுதான், சீட்பெல்ட் விளக்கு எரியும். இந்த விளக்கு எரியும்போது இருக்கையை விட்டு எழுந்து விடாதீர்கள்.
இந்த விளக்கு அணைந்திருக்கும் சமயங்களில் தாராளமாக எழுந்து நடக்கலாம். அத்துடன் அதிக தண்ணீர் குடிக்கவும் முயற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கும். கழிவறையை அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருக்கும் என தயங்கி கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருக்காதீர்கள். நன்றாக தண்ணீர் குடிப்பது, உங்கள் விமான பயணத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.
அதேபோல் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், விமான பயணத்தின்போதும் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான சோடியம் இருந்தால், கால்களுடன், கைகளிலும் வீக்கம் ஏற்படலாம். எனவேதான் அதிக உப்பு உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம் என கூறுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் ஒரு சிலர் அவ்வப்போது எழுந்து நடப்பதையும், அதிக தண்ணீர் குடிப்பதையும் நீங்கள் பார்க்கலாம். அத்துடன் உப்பு நிறைந்த உணவுகளையும் அவர்கள் தவிர்த்து விடுவார்கள். கை, கால் வீக்கம், தலைவலி மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கவே அவர்கள் இப்படி செய்கின்றனர். நீங்களும் இதனை பின்பற்றினால், விமான பயணம் இனிமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








