மோனோ ரயில் திட்டம் இருந்ததே நியாபகம் இருக்கா!! ஜெயலலிதாவின் கனவு திட்டம்... கிடப்பில் போடப்பட்டதற்கு காரணங்கள்
இன்றைய உலகம் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. உலகம் வெப்பமயமாதல், நன்னீருக்கு தட்டுப்பாடு என இந்த பிரச்சனைகளை சொல்லி கொண்டே போகலாம். ஆனால் அரசாங்கங்களுக்கு நேரடியாக தலைவலியாக இருப்பது என்னவோ மக்கள் தொகை பெருக்கம் தான். மக்கள் தொகை பெருக்கம் வருங்காலத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என பல வருடங்களுக்கு முன்னரே ஆர்வலர்கள் தீர்மானித்துவிட்டனர்.
இதனாலேயே பல நாடுகளில் அரசாங்கங்கள் பெரிய தொகையை செலவழித்தாவது மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படவுள்ள பிரச்சனைகளை முன்னெச்சரிக்கையாக சமாளித்துவிட வேண்டும் என செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, மக்களின் பொது போக்குவரத்திற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன. இதனை பொருளாதார வளர்ச்சியின் ஓர் வெளிப்பாடு என கூறினாலும், மக்கள் தொகை பெருக்கமும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்ட பொது போக்குவரத்துதான் மோனோ ரயில் ஆகும். நமது தமிழகத்தில் கூட மோனோ ரயில் போக்குவரத்தை கொண்டுவருவதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக இருந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசோ சில காரணங்களை சுட்டிக்காட்டி மோனோ ரயிலுக்கு மாற்றாக மெட்ரோ ரயில் திட்டத்தை முன்மொழிந்தது.
இவ்வாறு இரு கட்சிகளும் மோனோ, மெட்ரோ என மாறிமாறி திட்டத்தை அறிவித்த சம்பவங்கள் எல்லாம் மறக்க முடியாத ஒன்று. ஆனால் இன்று சென்னை மட்டுமின்றி, நாடு முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் தான் அமல்படுத்தப்பட்டு உள்ளன, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், மோனோ ரயில் பயன்பாடு ஆனது பல்வேறு நாடுகளில் தோல்வியுற்ற திட்டமாக உள்ளது. இதனை தான் திமுக அரசும் சட்டசபையில் சுட்டிக்காட்டி மெட்ரோ ரயிலை முன்மொழிந்ததற்கு முக்கிய காரணமாகும்.
ஏனெனில் மோனோ ரயில் போக்குவரத்தை கொண்டுவருவது சற்று அதிகமாகவே செலவு மிகுந்ததாக உள்ளது. சரி... முதலீடு செய்யப்படும் தொகையை பின்னர் எடுத்துவிடாலாமே என்றால், அதுவும் முடியாது. ஏனென்றால் மெட்ரோ ரயில்களை காட்டிலும் மோனோ ரயில்களை தொடர்ந்து பராமரிப்பது என்பது அதிக செலவை உண்டாக்கக்கூடியவை. குறிப்பாக, மோனோ ரயில்களுக்கான தண்டவாளங்கள் விரைவில் பழுதாகக்கூடியவை. அதிலிலும், நமது இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாட்டிற்கு சொல்ல வேண்டாம்.

அதற்காக இந்தியாவில் மோனோ ரயில் பயன்பாடு இல்லவே இல்லை என நினைத்துவிட வேண்டாம், மும்பையில் இப்போதும் உள்ளது. ஆனால் மோனோ ரயிலை ஏன் கொண்டுவந்தோம் என வெறுத்து போகும் அளவிற்கு மும்பை மாநகராட்சியின் மனநிலை உள்ளது. இதனாலேயே ஒரேயொரு லைன் மற்றும் 17 ரயில் நிலையங்கள் உடன் மஹாராஷ்டிரா அரசு நிறுத்தி கொண்டது. அதுமட்டுமின்றி, மோனோ ரயிலில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பெட்டிகளை இணைத்து இயக்க முடியும்.
ஏனென்றால், ஒரு மோனோ ரயிலில் அதிகப்பட்சமாகவே 700 பயணிகளை மட்டுமே ஏற்ற முடியும் & வேண்டும் என இந்த ரயிலை உருவாக்கும் நிறுவனங்களின் பரிந்துரை உள்ளது. ஆனால் மெட்ரோ ரயில் ஆயிரக்கணக்கில் கூட பயணிகளை ஏற்றி செல்கிறது. அதேபோல் ரயிலில் தீப்பிடிப்பு போன்ற ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியாத சூழல் மோனோ ரயிலில் உள்ளது. ஏனெனில் மெட்ரோ ரயில்களை காட்டிலும் மோனோ ரயில்களுக்கான மேம்பாலத்தை மிக உயரமாகவே கட்டமைக்க வேண்டும்.

அத்தகைய உயரத்தில் இருந்து பயணிகளை உடனடியாக வெளியேற்றுவது என்பது சிரமமான காரியம். இந்த பிரச்சனையை தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் மோனோ ரயில்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில பல வழிகள் மூலமாக தீர்த்துள்ளன என்றாலும், அந்த வழிகள் அனைத்தும் செயல்படுத்துவதற்கு அதிக செலவை உண்டாக்கக்கூடியவைகளாக இருப்பது மற்றொரு தடைக்கல். இவ்வாறான பிரச்சனையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக பொதுவாகவே மெட்ரோ ரயில்களை காட்டிலும் மோனோ ரயில்கள் சற்று மெதுவாகவே இயக்கப்படுகின்றன.
இவை எல்லாவற்றையும் முக்கியமாக, மோனோ ரயிலுக்கு ஒரு ட்ராக்கை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். நன்மைகள் சில இருந்தாலும், இவ்வாறு மோனோ ரயில் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளை சொல்லி கொண்டே போகலாம். இதனால் தான் பல பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கூட மோனோ ரயில் திட்டத்தில் பின்னர் தங்களது திட்டங்களை மாற்றி கொண்டன. அப்படியிருக்கையில், பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நமது இந்தியாவை பற்றி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்.


Click it and Unblock the Notifications









