ஒரு சில பைக்குகளில் ஏன் பின்னாடி சீட் ரொம்ப உயரமா இருக்கு தெரியுமா? இவ்ளோ நாளா நமக்கு இது தெரியாம போச்சே!
ஒரு சில பைக்குகளில் பின் இருக்கை மிகவும் உயரமாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல்வேறு வகையான பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும். இதன்படி ஒரு சில பைக்குகளில் பின் இருக்கை மட்டும் சற்று வித்தியாசமாக மிகவும் உயரமாக இருக்கும்.

முன்னால் அமர்ந்து ஓட்டுபவர் ஏதோ பள்ளத்தில் இருப்பதை போன்றும், பின்னால் அமர்ந்திருப்பவர் சிகரத்தில் இருப்பதை போன்றும் இது தோற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் சாலைகளில் செல்லும்போது, இதை அடிக்கடி கவனித்திருக்கலாம். ஆனால் ஒரு சில பைக்குகள் மட்டும் ஏன் இப்படி வடிவமைக்கப்படுகின்றன என நீங்கள் யோசித்துள்ளீர்களா?
இந்த கேள்விக்கு நீங்கள் விடை தேடி கொண்டுள்ளீர்கள் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. பொதுவாக ஸ்போர்ட்ஸ் பைக்குகளில்தான் பின் இருக்கை மிகவும் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் வீல் பேஸ் மிகவும் குறுகியதாக இருப்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
முன் பக்க சக்கரத்தில் இருந்து பின் பக்க சக்கரத்திற்கு இடையேயான தொலைவுதான் வீல் பேஸ் என அழைக்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் வீல் பேஸ் குறுகியதாக இருப்பதால், பின் பக்க இருக்கையை வடிவமைப்பதற்கு மிகவும் குறைவான இடமே இருக்கும். எனவே ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பின் பக்க இருக்கையை மிகவும் உயரமாக வடிவமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஒரு சில பைக்குகளின் பின் இருக்கை மிகவும் உயரமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. பைக்குகளின் பின் இருக்கை உயரம் குறைவாக இருந்தால், அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவரின் பேண்ட் போன்ற உடைகள் மற்றும் ஷூ லேஸ்கள் செயினில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் சைலென்சரிலும் கூட அவை உரசலாம்.
ஆனால் உயரமான பின் இருக்கை இந்த பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கிறது. ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மட்டுமல்லாது, க்ரூஸர் ரக பைக்குகளிலும் கூட, ஓட்டுபவரின் இருக்கையை விட, பின் இருக்கை உயரமாகதான் இருக்கும். க்ரூஸர் பைக்குகளில் ஏன் இருக்கை இவ்வாறு வடிவமைக்கப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் க்ரூஸர் பைக்குகள் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
பொதுவாக நெடுஞ்சாலைகளில் நிதானமாக தொலை தூர பயணங்களை மேற்கொள்வதற்குதான் க்ரூஸர் பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவற்றின் பக்கவாட்டில் பொருட்களை கொண்டு செல்வதற்கான பெட்டி போன்றவை இருக்கும். இதன் காரணமாக, பின் இருக்கையின் உயரம் குறைவாக இருந்தால், அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவரின் கால்கள் சரியாக பொருந்தாது.
அதாவது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே பயணம் செய்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் வகையில், க்ரூஸர் ரக பைக்குகளிலும் பின் இருக்கைகள் உயரமாக வடிவமைக்கப்படுகின்றன. இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications