புதிதாக கார் வாங்கினாலும் ஓடோ மீட்டரில் சில கி.மீ ஓடியதாகக் காட்டுகிறதே ஏன் தெரியுமா?
புதிதாக வாகனம் வாங்கும் போது அந்த வாகனம் சில கி.மீ ஓடியுள்ளதாக ஓடோ மீட்டரில் காட்டும். இது ஏன் இப்படிக் காட்டுகிறது. இதற்குப் பின்னால் உள்ளக் காரணம் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நாம் ஏற்கனவே பயன்படுத்திய காரை வாங்கும் போது அது எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது என ஓடோ மீட்டரில் பார்ப்போம். அதை வைத்து கார் எவ்வளவும் தூரம் பயணித்திருக்கிறதோ அவ்வளவு தூரத்திற்குத் தேய்மானம் ஆகியிருக்கும் என நாம் ஒரு உத்தேசமான கணக்கிற்கு வந்து அந்த காருக்கு மதிப்பிடுவோம். இது எல்லாம் பயன்படுத்தப்பட்ட காரில் தான்.

ஆனால் புதிய காரை நாம் வாங்கும் போது அது பற்றி கவலைப்படுவதில்லை. புதிய கார்கள் ஓடியிருக்காது. நாம் தான் முதன் முதலில் ஓட்டப்போகிறோம் எனப் பல நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை என்ன? உண்மையில் நீங்கள் கார் வாங்கும் போது அது ஓடோ மீட்டரில் 0 கி.மீ எனக் காட்டும் என இன்றும் சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் புதிதாக கார் வாங்கிய பலருக்குத் தெரியும் அப்படியெல்லாம் காட்டாது என்று தெரியும்.

புதிதாக கார் வாங்கினாலும் சரி பைக் வாங்கினாலும் சரி அது சில கிலோ மீட்டர் பயணித்ததாகவே இருக்கும். இப்பொழுது பலருக்குச் சந்தேகம் வரலாம் அது எப்படி சில கி.மீ பயணித்த காரை புதிய கார் என விற்பனை செய்கிறார் எனச் சந்தேகம் வரலாம். அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்பு இந்த ஓடோ மீட்டர் எப்படி வேலை செய்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாகனத்தின் ஓடோ மீட்டர் என்பது எந்த வாகனத்தின் வீல்கள் சுற்றுவதை வைத்து வேலை செய்கிறது. ஒரு வாகனம் பயணிக்க வேண்டும் என்றால் கட்டாயமாக அதன் வீல்கள் சுற்ற வேண்டும். இப்பொழுது கார்கள் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது என்பதை கணக்கிட வாகனத்தின் டயர் அருகில் ஒரு கருவி பொருத்தப்படும்.

இந்த கருவி வாகனத்தின் வில் எத்தனை முறை சுற்றுகிறது என்பதைக் கணக்கிடும். இதற்கு முன்னதாகவே அந்த வாகனத்தின் வீல் ஒரு முறை சுற்றினால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தார் போல கி.மீ காட்டும் படி செட் செய்து வைத்திருப்பர். அதனால் காரின் வீல் சுற்றினாலே அது கார் பயணித்ததாக கணக்கெடுத்துக்கொள்ளும். இது தான் ஓடோ மீட்டர் வேலை செய்யும் முறை.

இப்பொழுது கார் விற்பனைக்கு முன்பே சில கி.மீ எப்படி பயணிக்கிறது என பார்க்கலாம். ஒரு கார் நிறுவனம் நாடு முழுவதும் விற்பனை செய்யும் காரை பெரும்பாலும் ஒரே தயாரிப்பு ஆலையில் தான் தயாரிப்பார்கள். அங்கு தயாரிக்கப்படும் கார்கள் தான் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும். இப்படியாக தயாரிப்பு ஆலையில் ஒரு கார் விற்பனைக்குச் செல்ல தயாரானதும் அதின் ஓடோ மீட்டரில் 0 கி.மீ தான் காட்டும்.

ஆனால் அங்கிருந்து கார்களை பார்க் செய்து வைத்திருக்கும் பகுதி சில நூறு மீட்டர்கள் தொலைவில் இருக்கும். கார் தயாரனதும் அது பார்க்கிங் பகுதிக்கு எடுத்து செல்லப்படும். அப்படி செல்லும் போது டயர் சுற்றும் அல்லவா அங்கிருந்து காரின் ஓடோ மீட்டர் செயல்படத் துவங்கிவிடும். சில நூறு மீட்டர் பயணித்த கார் பார்க்கிங்கில் நிறுத்தப்படும்.

இப்பொழுது இந்தக் காரை எந்தப் பகுதிக்கு அனுப்புகிறார்கள் என்பதைப் பொறுத்து அதை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என விஷயம் அமையும். உதாரணமாக காரின் தயாரிப்பு ஆலை அருகிலேயே இருக்கும் ஷோரூம்களுக்கு காரை கொண்டு செல்லக் காரை சாலை மார்க்கமாகவே லாரிகளில் கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றால் ரயிலில் கொண்டு செல்வார்கள்.

இன்று இந்தியாவில் சில வெளிநாட்டில் தயாரான கார்களும் விற்பனையாகிறது. இந்த கார்கள் எல்லாம் விமானத்தில் / கப்பலில் கொண்டு வரப்படும். இப்படியாக குறிப்பிட்ட கார் எதன் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது என முடிவு செய்யப்பட்டவுடன் பார்க்கிங்கில் இருக்கும் இந்த காரை லாரியில் ஏற்றுவார்கள். லாரி நிற்கும் இடத்திற்கும் கார் நிற்கும் இடத்திற்கு இடையே இருக்கும் தூரத்தைக் காரை ஓட்டிக்கொண்டு தான் செல்வார்கள்.

அப்படியே ஷோரூம் சென்று விட்டால் அதை இறக்கி அப்படியே ஷோரூமில் வைத்து விற்பனை செய்து விடுவர். நீண்ட தூரப் பயணம் என்றால் லாரியிலிருந்து இறக்கி ரயிலில் ஏற்றுவார்கள். பின்னர் ரயில் உரிய இடத்திற்குச் சென்றதும் ரயிலிருந்து இறக்கி மீண்டும் லாரியில் ஏற்றி லாரியில் ஏற்றி ஷோரூமிற்கு கொண்டு செல்லப்படும்.

இப்படியாக கார் தயாரிப்பு ஆலையிலிருந்து உரிய ஷோரூமிற்கு கொண்டு வருவதற்கும் குறிப்பிட்ட கி.மீ பயணத்தை இந்த வாகனம் செய்திருக்கும். எவ்வளவு தூரம் பயணித்திருக்கும் என்பதைக் கணக்கிட முடியாது. தயாரிப்பு ஆலைகளுக்கு அருகில் உள்ள ஷோரூமில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் மிகக் குறைந்த தூரமும், தயாரிப்பு ஆலையிலிருந்த நீண்ட தூரம் தள்ளியிருக்கும் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் கார்கள் மிக அதிகத் தூரமும் பயணித்திருக்கும்.

இது காராக இருந்தாலும் சரி பைக்காக இருந்தாலும் சரி 0 கி.மீ பயணித்த வாகனம் ஷோரூம்களிலேயே இருக்காது. புதிதாக வாங்கும் வாகனங்கள் சில கி.மீ பயணித்திருப்பதற்குப் பின்னால் உள்ளக் காரணம் இது தான்.இதற்கிடையில் ஷோரூமிலிருந்து வாகனப் பதிவிற்காக எடுத்துச் செல்லப்படும் தூரத்தையும் தனியாக கணக்கிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








