ரயிலில் 24 மணிநேரம் பயணித்தாலும் வராத அலுப்பு விமானத்தில் வெறும் 10 மணி நேர பயணத்திலேயே ஏற்படும் ஏன் தெரியுமா?
விமான பயணத்தை விட ரயில் பயணம் தான் சிறப்பான பயணம் என மக்கள் பலர் கருதுகிறார்கள். இதுகுறித்த விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

இன்று உலகம் முழுவதும், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து என்ற மொத்தமே 4 விதமான போக்குவரத்து தான் இருக்கிறது. இதில் ஒவ்வொரு விதமான போக்குவரத்து முறைகளிலும் ஒவ்வொரு வசதியும், ஒவ்வொரு நிறைகளும், ஒவ்வொரு குறைகளும் இருக்கிறது.

இந்த எல்லா முறைகளிலும் அதிக செலவில் பயணம் செய்யும் முறை விமான பயணம் தான். ஒரு டிக்கெட் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருக்கும். இதில் மக்கள் பெரும்பாலும் குறுகிய தூரப் பயணத்திற்குச் சாலை போக்குவரத்தையும், நீண்ட தூரப் பயணத்திற்கு ரயில் போக்குவரத்தையும், கடல் கடந்த பயணத்திற்குக் கப்பல் அல்லது விமான போக்குவரத்தையும் பயன்படுத்துவார்கள்.

இவை எல்லாவற்றிலும் வேகமான பயணம் என்பது விமானத்தில் தான் சாத்தியம். உலகில் அதிகபட்சமே 20 மணிநேரம் தொடர்ந்து பயணிக்கும் விமானம் தான் இருக்கிறது. அதனால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மிக வேகமாகப் பயணிக்க முடியும். ஆனால் மக்கள் பலர் விமான பயணத்தை விட ரயில் பயணத்தைத் தான் ரசிக்கிறார்கள். ரயிலில் 24 மணி நேரம் பயணம் செய்தாலும் வராத அலுப்பு விமானத்தில் வெறும் 10 மணி நேரம் பயணித்தாலே ஏற்படுகிறது. இப்படியாக இந்த செய்தியில் விமானத்தை விட ரயில் பயணம் ஏன் பெஸ்ட் எனச் சொல்லப்போகிறோம் வாருங்கள் காணலாம்

பாதுகாப்பு சோதனை குறைவு
விமான பயணத்தில் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையைக் கடந்து செல்ல வேண்டும். குறிப்பாகத் தண்ணீர் நிலையில் உள்ள பொருட்களைக் குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்துச் செல்ல தடை, உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளது. ரயில் பயணத்தில் அப்படியான கட்டுப்பாடு எதுவும் இல்லை.

லக்கேஜ்
விமான பயணத்தில் ஒரு பயணி குறிப்பிட்ட அளவு லக்கேஜ்களை தான் எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக ஒரு பயணிக்கு 15 கிலோ என ஒதுக்கப்பட்டால் அது சரியாக 15 கிலோ அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும் அதற்கு அதிகமாக 100 கிராம் கூட எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ரயில்களில் லக்கேஜ்களுக்கான கட்டுப்பாடு இருந்தாலும் அது பெரிய அளவில் நடைமுறையில் இல்லை அதனால் விமானத்தை விட ரயில்களில் அதிகம் லக்கேஜ் எடுத்துச் செல்ல முடியும்.

சொகுசான பயணம்
பொதுவாக விமானங்களில் உட்கார்ந்து அமர்ந்து செல்லும் வகையிலான சீட்கள் தான் இருக்கும் மிகக் குறைவான விமானங்களிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டே செல்லும் வசதி இருக்கும். ஆனால் ரயில்களைப் பொருத்தவரை முன்பதிவு செய்து செல்லும் ரயில்களில் எல்லாம் படுத்துத் தூங்கிக்கொண்டே பயணிக்கும் வசதி இருக்கிறது.

சுத்தமான காற்று
விமானங்களில் எல்லாம் ஏசிபொருத்தப்பட்டிருக்கும் இயற்கை காற்றைச் சுவாசிப்பது என்பது நடக்காத ஒன்று வெளிக்காற்று விமானத்திற்குள் வர முடியாத படி கட்டமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஏசி பிடிக்காதவர்களுக்கு ரயில் வரப்பிரசாதம் தான் இங்கு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளன. இயற்கை காற்றைச் சுவாசித்துக்கொண்டே பயணிக்கும் வகையிலான பெட்டிகளும் உள்ளன.

குறைவான விலை
ரயில்களில் நீண்ட தூரப் பயணம் செய்தாலும் செலவு குறைவாகத் தான் இருக்கும் சில நூறு ரூபாய்களில் இந்த பயணத்தைச் சாத்தியமாக்க முடியும். ஆனால் விமானம் என்றால் குறைந்தபட்ச செலவே ஆயிரத்தில் இருக்கும் இதனால் விமானங்களில் பணம் இல்லாதவர்களால் பயணிப்பது சிரமம்

பாதுகாப்பு நிறைந்தது.
பயணங்கள் என்றாலே ஆபத்துக்கள் இருக்கும் என்றாலும், விமானங்களை விட ரயில்கள் தான் பயணத்தில் பாதுகாப்பு நிறைந்தது. விமானங்கள் பூமிக்கு மேலே பல ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதும், தரையிறங்குவது, டேக் ஆப் ஆவதும் ஆபத்து நிறைந்தது. ரயில் பயணங்களில் பெரிய அளவில் ஆபத்துக்கள் எதுவும் இல்லை பாதுகாப்பாகப் பயணிக்க முடியும்.

மறைமுக கட்டணம் கிடையாது.
ரயில் பயணத்திற்காக டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் வேறு எந்த மறை முக கட்டணமும் கிடையாது. ஆனால் விமானங்களில் சீட்களை தேர்வு செய்வது, எக்ஸ்ட்ரா லக்கேஜ் என ஏகப்பட்ட விஷயத்திற்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்களில் இப்படியாக எந்தவித கட்டணமும் கிடையாது.

அலுப்பு
மனித உடல் மணிக்கு 500 மைல் வேகம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 35ஆயிரம் அடி உயரத்திற்குள் இருக்கும் வரை தான் இதை ஏற்றுக்கொள்ளும், அதன் விட எது அதிகம் ஆனாலும் உடலுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சனை ஏற்படும் பலருக்குச் செரிமான கோளாறுகள், தூக்க நேரம் மாற்றம், ரத்த ஓட்டம், நோய் எதிர்ப்புத் திறன், உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். க்ரோனிக் பிரச்சனை இருப்பவர்களுக்கு விமான பயணம் சங்கடமாகத் தான் இருக்கும். இதனால் ரயிலில் 24 மணிநேரம் பயணம் செய்தாலும் ஏற்படாத அலுப்பு விமானத்தில் 10 மணி நேர பயணத்திலேயே ஏற்பட்டு விடும்.

குறைவான காத்திருப்பு நேரம்
விமான பயணம் நேரம் குறைவாக இருந்தாலும் விமானம் புறப்படுவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பாக நாம் விமான நிலையத்திற்கு வரவேண்டும். அப்பொழுது தான் முந்தைய நடைமுறைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற வசதியாக இருக்கும். ஆனால் ரயில் நிலையத்திற்குக் கடைசி நிமிடத்தில் சென்றாலும் ரயிலைப் பிடித்துவிடமுடியும். விமான நிலையத்தில் பலநேரங்களில் பயண நேரத்தை விடக் காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கும்.

நகர்க்குள் இறங்கலாம்
பொதுவாக விமான நிலையங்கள் நகர்ப் பகுதியிலிருந்து வெளியே அமைக்கப்படும். ஆனால் ரயில் நிலையங்கள் நகரின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் ரயிலில் பயணித்தால் நகரின் மையப்பகுதிக்குள் இறங்கலாம். ஆனால் விமானத்தில் பயணித்தால் விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் செல்ல வேறு ஒரு வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கழிப்பறை வசதி
விமானங்களில் கழிப்பறை இருந்தாலும் அது மிகச் சிறியதாகப் பயன்படுத்துவதற்குச் சிரமமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்களில் பொதுவாக வசதிகளுடன் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் விமானங்களை விட ரயிலில் தான் கழிப்பறைகள் சிறப்பாக இருக்கிறது.

நடைப் பயிற்சி செய்யலாம்
சில வயதானவர்களுக்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கவோ, படுத்திருக்கவோ, நிற்கவோ நடக்கவோ முடியாது. கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தால் கொஞ்சம் நடமாட வேண்டும். பின்னர் கொஞ்சம் படுக்க வேண்டும். இது எல்லாம் விமானத்தில் சாத்தியமே இல்லை. ஆனால் ரயில்களில் இந்த வசதி இருக்கிறது பயணிகள் நடக்கலாம். அமரலாம் படுக்கலாம் எல்லா விதமான வசதியும் ரயில் மட்டுமே இருக்கிறது.

இன்டர்நெட் கனெக்ஷன்
விமான பயணத்தில் பெரும்பாலும் இன்டர்நெட் கனெக்ஷன் இருக்காது. அதனால் வெளி உலகின் தொடர்பு இல்லாமல் தான் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் ரயில்களில் அப்படியல்ல எப்பொழுதும் போல செல்போனை பயன்படுத்த முடியும். இன்டர்நெட் வசதி இருக்கும்.

நாட்டின் எந்த மூலைக்கும் பயணிக்கலாம்
இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான ஊர்கள் ரயில்களால் இணைக்கப்பட்டுவிட்டன. அதனால் ரயில்களில் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.ஆனால் விமானங்கள் எல்லா ஊர்களிலும் இல்லை பெரிய பெரிய ஊர்களில் மட்டுமே இருக்கிறது. இதனால் அந்தந்த ஊர்களுக்குச் செல்ல அருகில் உள்ள பெரிய ஊரில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்துதான் மாறி செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








