ஏரோப்ளேன்ல சீட் மாறி உட்கார கூடாது... ஏன் தெரியுமா? பைலட்கள் சொல்ற காரணத்தை கேக்கும்போதே அடி வயிறு கலங்குது
விமானங்களில் ஏன் இருக்கை மாறி உட்கார கூடாது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பயணங்கள் இன்னும் கூட பலருக்கும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் அடிக்கடி பயணம் செய்பவர்களோ, விமான பயணங்களை அவ்வளவாக ரசிப்பதில்லை. இருக்கைகளில் காணப்படும் இட நெருக்கடிதான் இதற்கு முக்கியமான காரணம். பொதுவாக பேருந்துகளிலும் கூட நமக்கு அருகே பருமனானவர்கள் அமர்ந்திருந்தால், இட நெருக்கடியாகதான் இருக்கும்.

அப்போது இருக்கைகளை மாற்றி அமர்ந்து கொள்ளலாம். ஆனால் விமானங்களில் அப்படி செய்ய முடியாது. சில சமயங்களில் விமானங்களில் இருக்கைகள் காலியாக இருக்கும். அந்த இருக்கைகளில் அமர்ந்தால் உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும்தான். ஆனால் அதற்காக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து வேறு ஒரு இருக்கையில் மாறி அமரக்கூடாது.

நீங்கள் அவ்வாறு செய்தால், விமானம் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இருக்கை மாறி அமர்வதால் என்ன பிரச்னை? என நீங்கள் நினைப்பது புரிகிறது. உங்களின் இந்த சந்தேகத்தை தற்போது நாங்கள் நிவர்த்தி செய்து விடுகிறோம். பொதுவாக விமானங்கள் டேக்-ஆஃப் ஆவதற்கு முன்பாக சில கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும்.

டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கான எடை மற்றும் சமநிலை சரியாக உள்ளதா? என்பது மிகவும் முக்கியமான கணக்கீடுகளில் ஒன்று. எனவே நீங்கள் இருக்கை மாறி அமர்கிறீர்கள் என்றால், விமானத்தின் சமநிலையை (Balance) மாற்றுகிறீர்கள் என அர்த்தம். பயணிகள் இருக்கையை மாறி அமர்ந்ததால் ஏற்பட்ட பின் விளைவுகளை பைலட் ஒருவர் விவரித்துள்ளார்.

இது குறித்து மேக்னர் நோர்டல் என்ற பைலட் கூறுகையில், ''கணக்கீடுகள் தவறாக அமைந்தால், டேக்-ஆஃப் ஆகும்போது விமானம் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு முறை விமானம் டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கு முன்பாக 4 பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்து முன் இருக்கைகளில் வந்து அமர்ந்து கொண்டனர்.

இதன் காரணமாக விமானத்தை 'ரொட்டேட்' செய்யும்போது, பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது. அப்போது எடை கூடியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. அது மிகவும் நெருக்கடியான சூழ்நிலையாகும். ஏனென்றால் 'ரன்வே' (Runway) மிகவும் குறுகியதாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் எங்களால் விமானத்தை நிறுத்துவதும் இயலாத காரியம் ஆகும்'' என்றார்.

இது போன்ற தேவையில்லாத பிரச்னைகளை தவிர்ப்பதற்காகதான், விமானத்தில் இருக்கைகள் மாறி அமர கூடாது என்கின்றனர். எனவே அடுத்தமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது, விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்காமல் இருக்கைகளை மாறி அமர்ந்து விடாதீர்கள். இது உங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எனினும் இருக்கைகள் காலியாக இருக்கிறது என்றாலோ, அங்கு அமர்ந்தால் சௌகரியமாக பயணிக்கலாம் என்று நீங்கள் நினைத்தாலோ விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். ஒருவேளை கணக்கீடுகளின் அடிப்படையில் பிரச்னை ஏற்படாது என விமான ஊழியர்கள் கருதினால், இருக்கை மாறி அமர்வதற்கு உங்களுக்கு அனுமதி கிடைக்கலாம்.

விமான ஊழியர்கள் அனுமதி மறுத்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இருக்கைகள் மாறி அமர்வதற்கு உங்களுக்கு அனுமதி கிடைக்கலாம். அல்லது அனுமதி கிடைக்காமலும் போகலாம். ஆனால் விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்காமல் நீங்களாக இருக்கைகளை மாறி அமர்ந்து விடாதீர்கள்.

விமான பயணத்தின்போது தங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவோ அல்லது இட நெருக்கடியாக இருக்கிறது என்பதற்காகவோ இருக்கைகள் மாறி அமர்வதற்கு பலரும் விரும்புகின்றனர். ஆனால் விமான ஊழியர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்.

ஒரு பயணி 10 வரிசைகள் மாறி அமர்ந்தால் கூட, விமானத்தின் சமநிலை பாதிக்கப்படலாம் என்கின்றனர். இருக்கை மாறி அமர வேண்டும் என நீங்கள் விரும்பினால், விமான ஊழியர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 'எடை பங்கீடு' (Weight Distribution) குறித்து அவர்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் நீங்கள் இருக்கை மாறலாமா? மாற கூடாதா? என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள்.


Click it and Unblock the Notifications