மகளிர் ஊக்கத்தொகையில் என்னவெல்லாம் செய்ய முடியும்னு காட்டிட்டாங்க! அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் கணவர்!
வாகனங்களை மற்றவர்களுக்கு பரிசாக வழங்குவது என்றாலே தனி மகிழ்ச்சி தான். அதிலிலும், கணவருக்கு தனது சொந்த பணத்தில் அவரது அன்றாட போக்குவரத்துக்கு ஒரு வாகனத்தை வாங்கி தர வேண்டும் என்பது எந்தவொரு பெண்ணிற்கும் ஆசையாக இருக்கும். அதனை இங்கு ஒரு இல்லத்தரசி நிஜமாக்கி உள்ளார். அரசாங்கம் வாயிலாக தனக்கு மாதம் மாதம் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்து கணவருக்கு ஒரு ஹோண்டா டியோ 125 (Honda Dio 125) ஸ்கூட்டரை இங்கு ஒரு பெண்மணி வாங்கிக் கொடுத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இல்லத்தரசிகளுக்கு மாத ஊக்கத்தொகை ஆனது இந்தியாவில் சமீப காலத்தில் துவங்கப்பட்ட அருமையான திட்டம் என்றே சொல்ல வேண்டும். 2017இல் தெலுங்கானாவில் துவங்கப்பட்ட இந்த பெண்கள் வளர்ச்சி திட்டம் அதன்பின் நமது தமிழ்நாடு, மஹராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டது.

இந்த வகையில், கர்நாடகாவிலும் 'க்ருஹலக்ஷ்மி' என்கிற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் சித்தாரமைய்யாவின் காங்கிரஸ் ஆட்சி துவங்கியதில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் ஒவ்வொரு இல்லத்தரசி பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தல் வாக்குறுதியின் போது காங்கிரஸ் கட்சி அறிவித்த 5 முக்கியமான திட்டங்களுள் க்ருஹலக்ஷ்மி திட்டமும் ஒன்றாகும்.
தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் இல்ல பெண்கள் இந்த ஊக்கத்தொகையை தங்களது குடும்ப செலவுகளில் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டை காட்டிலும் அதிக ஊக்கத்தொகை கிடைப்பதால், கர்நாடகாவில் க்ருஹலக்ஷ்மி திட்டத்தின் மூலம் நிறைய பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர். ஒரு சில பெண்கள் இந்த ஊக்க பணத்தின் மூலம் தங்களுக்காக மட்டுமில்லாமல், தங்களது குடும்பத்தினருக்கும் பரிசு பொருட்களை வழங்குகின்றனர்.
அவ்வாறு, கர்நாடகாவில் ஒரு பெண் தனது இந்த மாதந்திர ஊக்கத்தொகையை சேர்த்து வைத்து கணவருக்கு கிட்டத்தட்ட லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டரை பரிசளித்துள்ளார். கர்நாடகா மாநிலம் தக்ஷினா மாவட்டத்தில் உள்ள ஷாந்தி நகரை சேர்ந்தவர் மிஷ்ரியா. இவரது கணவர் சலீம், பெயிண்ட் தொழிலை நம்பியிருக்கும் அன்றாட கூலி தொழிலாளி. சலீம் வேலைக்கு சென்றால்தான் அன்றாட பிழைப்பு என்கிற நிலைமையில் மிஸ்ரியாவின் குடும்பம் சென்றுக் கொண்டிருந்தது.
கணவர் சலீமுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என நினைத்த மனைவி மிஸ்ரியா, தனது க்ருஹலக்ஷ்மி ஊக்கத்தொகையை வங்கியில் சேமித்து வைத்து அந்த பணத்தில் ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரை கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டர் பரிசளிப்பு நிகழ்ச்சியை உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் தலைவர்கள் முன்னிலையில் மிஸ்ரியா நடத்தியுள்ளார்.
பின்னர் மனைவியால் பரிசளிக்கப்பட்ட டியோ ஸ்கூட்டர் உடன் சலீம், தொகுதி எம்.எல்.ஏ-வை நேரில் சந்தித்து, க்ருஹலக்ஷ்மி திட்டத்தால் தங்களது குடும்பத்தில் வெளிச்சம் உண்டாகி இருப்பதாகவும், இதற்காக அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மனைவி மிஸ்ரியாவால் பெயிண்டர் சலீம் பெற்றுள்ள ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஆக்டிவாவுக்கு அடுத்து ஹோண்டாவில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக விளங்குகிறது.
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் 110சிசி மற்றும் 125சிசி என்ஜின்களுடன் கிடைக்கிறது. டியோ 110 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.82 ஆயிரம் வரையில் உள்ளன. டியோ 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.86 ஆயிரம் & ரூ.93 ஆயிரமாக உள்ளன. இவை எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆன்-ரோடு விலை இன்னும் சில ஆயிரங்கள் அதிகமாக வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கர்நாடகாவில் க்ருஹலக்ஷ்மி திட்டம் பல இல்லத்தரசி வாழ்க்கையை மாற்றியுள்ளது. தற்போது கணவருக்கு ஸ்கூட்டரை பரிசளித்திருக்கும் பெண்ணை போல, சில பெண்கள் தங்களது வீட்டிற்கு ஃப்ரிட்ஜ், வாஷின் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். ஒரு பெண், இந்த பணத்தின் மூலம் சிறிய ஃபேன்சி ஸ்டோர் வைத்துள்ளதாகவும் கூட தகவல்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








