கார் ஓடிகிட்டு இருக்கும்போதே இப்படியா! 2 பெண்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சி! கரண்ட் ஷாக் அடிக்க வைத்த வீடியோ!
இந்தியாவில் ரீல்ஸ் (Reels) மோகம் யாரையும் விட்டு வைப்பதாக இல்லை. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, பலர் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதில் தவறு எதுவும் இல்லைதான். ஆனால் ஒரு சிலர், மிகவும் அபாயகரமான விஷயங்களை செய்து, அதை வீடியோவாக எடுத்து வெளியிடுகின்றனர். தற்போது பிரச்னையே இதுதான். ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கும் முயற்சியில் பலர் உயிரை மாய்க்கும் சம்பவங்களை பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அபாயகரமான ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பவர்கள் எல்லாம் இந்த செய்திகளை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பதை போல் தெரிகிறது. ஏனெனில் அபாயகரமான விஷயங்களின் ரீல்ஸ் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே உள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ (Viral Video) கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில், 2 பெண்கள் ஓடும் காரில் ஒரு பாடலுக்கு நடனமாடி கொண்டே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. கார் ஓடி கொண்டிருக்கும்போது, அந்த 2 பெண்களும் உட்கார்ந்தபடியே நடனம் ஆடுகின்றனர். இது மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) காரை போல் தெரிகிறது.
இந்த 2 பெண்களில் ஒருவர் காரை ஓட்டி கொண்டுள்ளார். அவர் ஸ்டியரிங் வீலில் இருந்து ஒரு கையை எடுத்து விட்டு, நடனமாடி கொண்டே பயணம் செய்வதை நம்மால் வீடியோவில் தெளிவாக பார்க்க முடிகிறது. காரை ஓட்டும்போது இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சாலை விபத்துக்களை ஏற்படுத்தலாம்.
கார் ஓட்டும்போது, டிரைவரின் கவனம் முழுக்க முழுக்க சாலையில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் இது போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். ஒருவேளை எதிர்பாராத விதமாக திடீரென சாலை விபத்து நிகழ்ந்தால், அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை.
கூடவே சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த பெண்களின் செயல், நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச காவல் துறை அதிகாரிகள், இந்த 2 பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெட்டிசன்களின் கருத்தையேதான், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும் வலியுறுத்துகிறது. இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் செய்திகள் பரவினால்தான், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
ஒரு வேளை கடும் நடவடிக்கை எடுக்க தவறினால், அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை காவல் துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வது நல்லது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி வாகனம் ஓட்டும்போது, டிரைவரின் கவனம் சாலையில் மட்டும்தான் இருக்க வேண்டும்.
இந்த பெண்கள் செய்தது எப்படி ஆபத்தானதோ, செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்து கொண்டே வாகனம் ஒட்டுவது போன்ற செயல்களும் கூட அதே அளவிற்கு மிகவும் ஆபத்தானதுதான். எனவே வாகன ஓட்டிகள் அவற்றையும் தவிர்க்க வேண்டும். இது உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications








