என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
பெங்களூரில், போன் பேசிக் கொண்டே சவுகரியமாக ஸ்கூட்டர் ஓட்டுவதற்காக பெண் ஒருவர் செய்த செயல் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்பின் நடந்தது என்ன? என்பதையும், இதுகுறித்து சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வரும் வீடியோவையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மொபைல் போன்கள் இன்றைய கால உலகில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளன. காசு இல்லாத மனிதர்களை கூட பார்த்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாத என்கிற காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மணி கணக்கில் போனில் பேசுவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர்.

அத்தகையவர்கள், சாப்பிடும்போது, சமைக்கும் போது என எல்லா நேரங்களிலும் போனில் பேசிக் கொண்டு இருப்பர். போலீஸார் எவ்வளவோ அறிவுறுத்தியும், வாகனம் ஓட்டும்போதும் இன்னமும் பலர் மொபைல் போனில் பேசிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதனை தடுக்க பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் மற்றும் அபராத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இத்தகைய செயல்கள் குறைந்தப்பாடில்லை.
காரில் செல்லும்போது மொபைல் போனில் பேசுவது எளிது. ஏனெனில், இன்றைய கால மாடர்ன் கார்களில் டேஸ்போர்டு திரையின் மூலமாகவே மொபைல் போனில் பேசும் வசதி வந்துவிட்டது. ஆனால், 2-வீலர்களில் செல்லும்போது ஹெட்செட் போட்டுக் கொண்டு மட்டுமே போனில் பேச முடிகிறது. ஹெட்போன் இல்லையென்றால், மொபைல் போனில் பேச முடியாமல் ஒரு கையை இழுந்தது போன்று பலர் உணர்கிறார்கள்.

அவ்வாறான ஒரு பெண்மணி பெங்களூரில் ஸ்கூட்டரில் செல்லும்போது, மொபைல் போனில் பேசுவதற்காக விசித்திரமான செயலில் ஈடுப்பட்டுள்ளார். அதாவது, இந்த பெண்ணிடம் ஹெட்போன் இல்லை போல. மொபைல் போனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, ஒரு கையால் ஸ்கூட்டரை ஓட்டுவது மிகவும் சிரமமான விஷயம். அவ்வாறு ஸ்கூட்டரை ஓட்டவே முடியாது என கூட சொல்லலாம்.
இதன் காரணமாக, இந்த பெண் மொபைல் போனை காது அருகே வைத்து, தனது துப்பாட்டாவை தலையை சுற்றி கட்டிக் கொண்டு ஸ்கூட்டரை சவுகரியமாக இரு கைகளால் ஓட்டி சென்றுள்ளார். இதனை கண்ட மற்றொரு வாகன ஓட்டி அதனை அப்படியே தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு போலீஸாரை டேக் செய்து பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதனால், இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுப்பர் என நம்புவோம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் பெங்களூரின் வித்யாரான்யாபுரா என்கிற பகுதியில் மார்ச் 26ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடந்துள்ளது.
ஆனால் உண்மையில், இந்த பெண் எவ்வாறு தைரியமாக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. ஏனெனில், பெங்களூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும். எல்லா முக்கியமான சந்திப்புகளிலும் போலீஸார் இருப்பர். அதை விட முக்கியமாக, எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இவ்வாறு மொபைல் போனை கட்டிக் கொண்டு ஸ்கூட்டரை ஓட்டும்போது, அது எப்போது கீழே விழுந்து விடுமோ என்கிற பயத்தில்தான் ஓட்ட வேண்டியிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலைத்தளங்களில் சிலர் இந்த பெண்ணின் விசித்திரமான கண்டுப்பிடிப்பை பாராட்டியுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் இது முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் இத்தகைய செயல்கள் உங்கள் உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. சாலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது என்பதற்காகவே, வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications









