இப்படியொரு மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்! காரை கண்டுப்பிடித்தவருக்கு மனைவியால் வந்த சோதனை
கார்ல் பென்ஸ் (Karl Benz), இவரை பற்றி உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். உலகின் முதல் மோட்டார் வாகனம் (Motor Vehicle)-ஐ உருவாக்கியவர். அதுவரையில், கால்களால் மிதித்தாலோ அல்லது கைகளால் சுற்றினாலோ மட்டுமே வாகனத்தை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்கிற நிலைமை மாறி, கியரையும் ஸ்டேரிங் சக்கரத்தையும் பிடித்துக் கொண்டால் மட்டும் போதும் வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரலாம் என்கிற நிலையை கார்ல் பென்ஸ் உருவாக்கிய பேடெண்ட்வேகன் (Patentwagon) என்கிற முதல் மோட்டார் வாகனம் நிஜமாக்கியது.
இதனாலேயே, அந்த சமயத்தில் மக்கள் பேடெண்ட்வேகனை ஆச்சிரியமாகவும், அதேநேரம் பயமாகவும் பார்த்தனர். 1880ஆம் காலக்கட்டத்தில் இதனை உருவாக்கிய சமயத்தில், கார்ல் பென்ஸ் அவ்வப்போது இந்த வாகனத்தை சோதனை ஓட்டமாக வெளியில் ஓட்டிக் கொண்டு செல்லும்போது எல்லாம் அந்த வழியாக செல்பவர்கள், வாகனம் நம் மீது மோதிவிட போகிறது என பயப்படுவார்களாம்.

ஆனால், ஒரு பெண் அப்போதே தன் தைரியத்தை வெளிக்காட்டி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கார்ல் பென்ஸின் மனைவி பெர்தா பென்ஸ் (Bertha Benz). இவரை பற்றி பார்க்க சர்வதேச மகளிர் தினம் (International Women's Day)-ஆன இன்றைய தினத்தை விட சிறந்த தினம் இருக்காது என நினைக்கிறேன். 1849ஆம் ஆண்டில் மிகவும் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் பெர்தா பென்ஸ்.
பாகுபலி அனுஷ்காவை போல் சிறு வயது முதலே துணிச்சலான பெண்ணாகவே வளர்ந்துள்ளார் பெர்தா பென்ஸ். பாகுபலி திரைப்படம் மட்டுமில்லை, பெர்தா பென்ஸின் வாழ்வில் சூரரைப் போற்று திரைப்படத்தையும் பார்க்க முடியும். கார்ல் பென்ஸை திருமணம் செய்வதற்கு முன்பே அவரது பிஸ்னஸ் பார்ட்னராக பெர்தா பென்ஸ் செயல்பட்டுள்ளார். காதல் + பிஸ்னஸ்.

இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட வரதட்சணையை அப்படியே இருவரும் தங்களது இரும்பு கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அது நஷ்டத்தில் கொண்டுப்போய் முடிந்ததால், அதனை கைவிட வேண்டியதாகியது. இருப்பினும், கார்ல் பென்ஸ்- பெர்தா பென்ஸ் தம்பதியினர் நம்பிக்கையை விடவில்லை. ஏனெனில், அவர்களிடம் அப்போதும் கொஞ்சம் வரதட்சணை பணம் மற்றும் சொத்து இருந்தது.
அதன் மூலம் 'பென்ஸ் & சீ' (Benz & Cie) என்கிற நிறுவனத்தை துவங்கினர். இதுதான், இன்றைய ஆட்டோமொபைல் உலகின் துவக்கமாக இருந்தது. கார்ல் பென்ஸ் இல்லையென்றாலும், வேறொருவர் மோட்டார் வாகனத்தை நிச்சயம் கண்டுப்பிடித்து இருப்பர். என்ன... கொஞ்சம் தாமதமாகி இருக்கும். 1885இல் முதல் மோட்டார் வாகனமாக பேடெண்ட்வேகன் பொது மக்கள் முன் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் முதல் மோட்டார் வாகனம் உருவாக்கப்பட்டதில் பெர்தா பென்ஸின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இருப்பினும், பேடெண்ட்வேகன் வாகனத்திற்கு காப்புரிமையை பதிவு செய்ய கார்ல் பென்ஸ் முயன்ற போது, தனது மனைவியின் பெயரை பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில், அந்த சமயத்தில் ஜெர்மனியில் திருமணமான பெண்கள் எந்தவொரு பொருளுக்கும் காப்புரிமையை கேட்க முடியாது. பாருங்கள்... ஜெர்மனியில் கூட பெண்ணடிமை தனம் அந்த சமயத்தில் எந்த அளவிற்கு இருந்துள்ளது என்று.
இருப்பினும், பெர்தா பென்ஸ் பேடெண்ட்வேகனை ஓட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒன்று அல்ல, இரண்டு அல்ல சுமார் 106கிமீ தொலைவிற்கு கார்ல் பென்ஸுக்கு தெரியாமல் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். உலகிலேயே இந்த அளவிற்கு நீண்ட தொலைவு பயணத்தை மேற்கொண்ட முதல் நபர் பெர்தா பென்ஸ் என்கிற பெண் ஆவார். வாகனத்தை கண்டுப்பிடித்த கார்ல் பென்ஸ் கூட இவ்வளவு தொலைவிற்கு பேடெண்ட்வேகனை ஓட்டியது கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெர்தா பென்ஸின் இந்த செயல் தற்போது கேட்கும்போது வீர தீர செயலாக இருந்தாலும், அந்த சமயத்தில் கண்டனத்திற்கு உரியதாகவே இருந்திருக்கும். ஏனெனில், 106கிமீ பயணத்தில் இடையில் எங்கேயினும் பேடெண்ட்வேகன் வாகனம் பழுதி நின்றிருந்தாலோ அல்லது அதிக வேலை பளுவினால் வெடித்து சிதறி இருந்தாலோ அது பெர்தா பென்ஸுக்கு மட்டுமின்றி, கார்ல் பென்ஸுக்கும் பெரிய இழப்பாக இருந்திருக்கும்.


Click it and Unblock the Notifications









