இந்தியாவை ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்க வைத்த பிரதமர் மோடி!! இது காலத்துக்கும் நிலைத்து நிற்கும்!
பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிக நீளமான பை-லேன் சுரங்கப்பாதையை இந்தியாவில் திறந்து வைத்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சேலா (Sela) சுரங்கப் பாதை தான் இதுவாகும். இந்த சுரங்க பாதையை பற்றி விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்சமயம் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 9ஆம் தேதி சேலா சுரங்கப்பாதையை அந்த மாநிலத்தில் அவர் திறந்து வைத்துள்ளார். மிக நீண்ட மாதங்களாக எதிர்பார்ப்பில் இருந்த இந்த சுரங்கப்பாதை ஆனது 2 பாதைகளை கொண்டுள்ளது. அதாவது, இந்த சுரங்கத்தினுள் எதிர்திசையிலும் வாகனம் ஓட்ட முடியும்.

அதேபோல், அருகருகே அமைந்த 2 சுரங்கங்களாக இந்த சுரங்கப் பாதை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதாவது, இரு சுரங்கங்களுக்கு இடையே கொஞ்ச தூரத்திற்கு வெட்ட வெளிப்பகுதி இருக்கிறது. முதல் சுரங்கம் 980 மீட்டர் நீளம் கொண்டது, 2வது சுரங்கம் 1,555மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 2.5 கிமீ-க்கும் அதிகமான நீளம் கொண்டதாக இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் சுரங்கப்பாதை ஆனது ஒரு சுரங்கத்தை மட்டுமே கொண்டதாக உள்ளது. அதுவே, 2வது சுரங்கப்பாதை இரு சுரங்கங்களை கொண்டதாக உள்ளது. அதாவது, மலையில் அருகருகே இரு இடங்களில் சுரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று பொது போக்குவரத்துக்கும், 2வது சுரங்கம் அவசர கால போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், 2வது சுரங்கப்பாதையை 'பை-லேன் சுரங்கப்பாதை' என அழைக்கின்றனர்.

1,555 மீட்டர்கள் நீளத்தில் உலகின் மிக நீளமான பை-லேன் சுரங்கப்பாதை இதுவாகும். இரு சுரங்கங்களுக்கு இடையேயான வெட்ட வெளி சாலை 1,200 மீட்டர்கள் நீளத்தில் உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுக்கு மிக அருகாமையில் இந்த சுரங்க வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லை இராணுவ படைக்கான பொருட்களையும், ஆயுதங்களையும் விரைவாக கொண்டு செல்வதற்கு இந்த சாலை மிகவும் உதவிக்கரமானதாக இருக்கும்.
அத்துடன் இந்த பகுதியில், சீன எல்லைக்கு அருகே தனி தீவுகாக அமைந்திருக்கும் கிராமங்களை அருகில் உள்ள முக்கிய நகரமான தவாங் உடன் நெருக்கமாக இணைக்கும் விதத்தில் இந்த சுரங்க வழி சாலை கொண்டுவரப்பட்டுள்ளது. சேலா சுரங்க வழி சாலை திட்டத்திற்கு மொத்தமாக ஆன செலவு ரூ.825 கோடி ஆகும். நீளமான சுரங்கம் என்பது ஒரு பக்கம் பெருமை என்றால், மற்றொரு பக்கம் இந்த சுரங்கப்பாதை அமைந்திருக்கும் உயரமும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஏனெனில், சுமார் 13,700 அடி உயரத்தில் இந்த சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகவே, சேலா சுரங்கப்பாதையை கட்டியெழுப்பதற்குள் அதிகாரிகளுக்கு பல்வேறு தடைகள் வந்துள்ளன. குறிப்பாக, சில மாதங்களுக்கு முன் இந்த சுரங்க பணியின் போது ஏற்பட்ட மண்சரிவில் தொழிலாளிகள் சிக்கிக் கொண்ட செய்தியை உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அத்துடன், பனி பொழிவும் இந்த பகுதியில் அதிகளவில் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
சரி பொழிவுதான் அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால், அதேபோல் வெயிலும் பகல் நேரங்களில் சுட்டெரிக்கிறது. இவ்வாறு, இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கால வெப்பநிலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இதற்கேற்றவாறே இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கப் பாதையை நாட்டின் எல்லை சாலைகளை கண்காணிக்கும் அமைப்பு (BRO) பராமரிக்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு சாலை வசதி உள்ளது. அங்குள்ள சேலா ஏரிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அந்த சாலை மலையை சுற்றிக் செல்கிறது. இதனால், பயண தூரமும், நேரமும் அதிகமாக இருந்தது. தற்போது அந்த சாலைக்கு மாற்றாகவே இரு சுரங்கப் பாதைகளை கொண்ட இந்த புதிய சாலை கொண்டுவரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









