ஒரு ஊரையே அடைச்சு கொண்டு போகலாம்!! உண்மையான இராட்சத விமானம் என்றால் அது இதுதான்!
உலகிலேயே மிக பெரிய விமானத்தை உருவாக்கும் முயற்சியாக பெரிய அளவிலான டிசைனில் புதியதாக ஒரு விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யார் இந்த விமானத்திற்கான டிசைனை உருவாக்கி இருப்பது? இவ்வளவு பெரிய விமானம் சாத்தியமா? எந்த நாட்டில் இந்த விமானம் உருவாக்கப்பட உள்ளது? என்ற கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் பக்கத்து நகரத்திற்கு செல்வதாக இருந்தால் கூட விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கட்டணம் சற்று அதிகமாக இருப்பினும், போக்குவரத்துக்கான நேரம் குறைவாக இருப்பதால், பலரும் விமானங்களை தங்களது போக்குவரத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றனர். ஆதலால், வருங்காலங்களில் விமான போக்குவரத்து அத்தியாவசியமானதாக மாறிவிடும் என்பது உறுதி.

இன்னும் சொல்லப்போனால், நிறைய நாடுகளில் விமானங்கள் அடிப்படை போக்குவரத்து வாகனங்களாக மாறிவிட்டன. இருப்பினும், நம் இந்தியா போன்ற நாடுகளில் விமான போக்குவரத்தை பயன்படுத்த இன்னும் மக்கள் பலர் தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், விமான போக்குவரத்தில் இருக்கும் அதிகப்படியான கட்டணம் ஆகும்.
விமான கட்டணத்தை குறைக்க வேண்டுமெனில், விமானத்தில் ஏற்றப்படும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதாவது, அந்த அளவிற்கு அதிக இருக்கை வசதிகளுடன் பெரிய விமானங்களை உருவாக்க வேண்டும். பெரிய விமானங்களை உருவாக்குவதில் பிரச்சனை என்னவென்றால், விமான பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகும்.
இந்த நிலையில், அளவில் பெரிய விமானங்களை உருவாக்குவதில் உள்ள இந்த பிரச்சனைக்கு அமெரிக்காவை சேர்ந்த ராடியா என்ற நிறுவனம் ஒரு தீர்வு உடன் வந்துள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த எனர்ஜி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ராடியா உலகிலேயே மிக பெரிய விமானத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
விண்ட்ரன்னர் (WindRunner) என்கிற பெயரில் ராடியா நிறுவனம் வடிவமைத்துள்ள விமானம் சுமார் 356 அடி நீளத்தில் இராட்சத விமானமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான போயிங் 747 விமானத்தை காட்டிலும் இது 127 அடி அதிகமாகும். விண்ட்ரன்னர் விமானத்தின் இறக்கையின் நீளம் மட்டும் 300 அடியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் உள்ளே 2.72 லட்ச கன அடிக்கு இடவசதி இருக்கும். இந்த இடத்தில் கிட்டத்தட்ட 3 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை உருவாக்கிவிடலாம்.

உலகிலேயே இதுவரையில் மிகுந்த எடையில் உருவாக்கப்பட்ட அண்டோனோவ் ஏஎன்-225 விமானத்தை காட்டிலும் இது எடைமிக்கதாக இருக்கும். இவ்வளவு பெரிய விமானமாக உருவாக்கப்பட்டாலும், எளிமையான சரளை கல் ரன்வேயில் கூட இதனை டேக்-ஆஃப் & லேண்டிங் செய்ய முடியும் என ராடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், வெறும் 1800 மீட்டர் நீள ரன்வேயில் கூட இந்த விமானத்தை லேண்டிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தவொரு பெரிய கமர்ஷியல் விமானத்தையும் இவ்வளவு குறுகிய தூரத்திற்குள் லேண்டிங் செய்வது முடியாத காரியமாக உள்ளது. அத்துடன், இந்த விமானம் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையிலான எரிபொருளில் இயங்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ட்ரன்னர் விமானம் 2027ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்பட்டாலும், ராடியா நிறுவனத்தின் வெப்சைட்டில் இதுகுறித்த எந்த விபரமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராடியாவின் விண்ட்ரன்னர் விமானம் ஆனது தற்போதைக்கு டிசைன் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பொதுவாகவே, ஒரு விமானத்தை உருவாக்குவது பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய விமானத்தை உருவாக்குவது நிச்சயமாக சவாலான காரியமாக இருக்கும். ஆதலால், ராடியா திட்டமிட்டிருக்கும் நீளம் மற்றும் எடையில் விண்ட்ரன்னர் விமானம் உருவாக்கப்படலாம் அல்லது உருவாக்கப்படாமலும் போகலாம்.


Click it and Unblock the Notifications








