உலகையே திரும்பி பார்க்க வைக்க தயாராகும் கர்நாடகா அரசு!! இது நம்ம லிஸ்ட்-லயே இல்லயே!
உலகிலேயே நீளமான சுரங்க நெடுஞ்சாலை நமது இந்தியாவில், பெங்களூர் மாநகரில் எழுப்பப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பெங்களூரில் எந்த பகுதியில், எவ்வளவு நீளத்திற்கு இந்த சுரங்க நெடுஞ்சாலை அமையவுள்ளது? என்ற கேள்விக்கான பதிலாக இந்த சுரங்க நெடுஞ்சாலையை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மாநிலங்களுள் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவையும் ஒன்றாக சொல்லலாம். மாநிலத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்ய பல்வேறு வழிகளில் முயற்சித்துவரும் கர்நாடக மாநில அரசு இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொழில்துறையை பெருக்க பல திட்டங்களை வைத்துள்ளது.

அதில் ஒன்றுதான், உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலை ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பெங்களூரில் சுமார் 99 கிமீ தொலைவிற்கு சுரங்க நெடுஞ்சாலையை உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்சமயம், உலகில் எந்தவொரு பகுதியிலும் இவ்வளவு நீளத்திற்கு சுரங்க சாலையை உருவாக்கும் திட்டம் இல்லை.
பெங்களூரில் அமையவுள்ள இந்த சுரங்க நெடுஞ்சாலை 3 முக்கிய வழித்தடங்களாக உருவாக்கப்பட உள்ளது. இதில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமையவுள்ள வழித்தடம் ஆனது பெங்களூருவின் வடக்கில் உள்ள யெலஹங்கா பகுதியை ஓசூர் நெடுஞ்சாலை உடன் இணைக்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையில் இந்த வழித்தடம் செண்ட்ரல் சில்க் போர்டு, கஸ்துர்பா சாலை, காண்டன்மெண்ட், மெஹ்ரி வளைவு மற்றும் ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளை பூமிக்கு அடியில் கடந்து செல்லும்.
2வது வழித்தடம் கிழக்கில் இருந்து மேற்காக வர்தூர் கோடி பகுதியையும் ஜனானபாரதி பகுதியையும், 3வது வழித்தடம் பெங்களூருக்கு வடகிழக்கில் இருக்கும் கிருஷ்ணராஜபுரத்தையும், வட மேற்கில் இருக்கும் கோரகுண்டேபால்யா என்ற பகுதியையும் பழைய மெட்ராஸ் சாலை வழியாக இணைக்கும் விதமாக உருவாக்கப்பட உள்ளன. இந்த 3 சுரங்க சாலைகளும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சந்திக்கும் விதமாக உருவாக்கப்பட உள்ளனவாம்.

இந்த 99கிமீ தொலைவு சுரங்க சாலை பணிகளை முடிக்க நிச்சயமாக பல வருடங்களாகும். அதேபோல், சுரங்க பாதை என்பதால் செலவும் அதிகமாக ஏற்படும். இந்த சுரங்க நெடுஞ்சாலையின் முதற்கட்ட 50கிமீ தொலைவு பணிக்காக மட்டும் சுமார் ரூ.22,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு கிலோமீட்டர் தொலைவிற்கு சுரங்க சாலையை ஏற்படுத்த ரூ.450 கோடி செலவாகுமாம்.
வழக்கமான நெடுஞ்சாலைகளை போன்று, இந்த சுரங்க நெடுஞ்சாலையும் இரு திசைகளில் அமைக்கப்பட உள்ளன. ஆனால், ஒவ்வொரு திசையிலும் மேல்-கீழ் என சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருபக்க முனைகளிலும் எதிரெதிர் திசையில் சாலைகள் தாழ்வானவைகளாகவும், அவற்றிற்கு மத்தியில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்ல சற்று மேலே சாலைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
நடுவில் சற்று மேலே அமைக்கப்பட உள்ள சாலைகள் 2-வீலர்களுக்கு என கூறப்படுகிறது. எதிரெதிரே செல்லும் 2-வீலர் சாலைகளை தடுப்பு மூலம் பிரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பெங்களூர் சுரங்க பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுரங்க நெடுஞ்சாலை திட்டத்தை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெங்களூர், தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளுக்கு மட்டுமில்லாமல், போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் போனது. இதனை குறைக்க இந்த சுரங்க சாலை திட்டம் நிச்சயமாக உதவிக்கரமானதாக இருக்கும். ஆனால் இந்த திட்டம் தற்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளதால், பணிகள் முழுவதும் நிறைவடைந்து நெடுஞ்சாலை பயன்பாட்டிற்குவர இன்னும் பல வருடங்கள் ஆகும்.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications